…நிழல்கள்…

ஜனவரி 10, 2016

நோய்நாடி… அதன் முதல்நாடி…

இந்த மருத்துவக் கட்டுரைத் தொடரின்

 1. முதல் பாகம் / முன்னுரை – தயக்கம் என்ன.
 2. இரண்டாம் பாகம் – பார்க்கும் இடம் எல்லாம் புற்று.
 3. மூன்றாம் பாகம் – புற்று மிகும் இடங்கள்.
 4. நான்காம் பாகம் – புற்று முன்பு பார்க்க…

இது அதன் தொடர்ச்சி.


புற்றுநோய்களுக்கு ஸ்கேன் செய்வது பற்றி பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன். இதை பல கண்ணோட்டங்களில் பார்க்கலாம், கொஞ்சம் ரஷோமொன் எபெக்ட் வரும், அதை விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன் (அது என்ன ரஷோமொன் எபெக்டுன்னு தெரியாதவங்க கண்டுக்காம விட்டுடுங்க நானும் தமிழ் இணையச் சூழலில் உலவும் பல உலக சினிமா எக்ஸ்பெர்ட்ஸ் மாதிரி விக்கிப்பீடியாவில்தான் படித்தேன்).

இந்தக் கட்டுரைத் தொடரின் போன பாகத்தில் “இது நேரடி புற்றுநோயாக (primary cancer) இருக்கலாம் அல்லது வேறு உறுப்பில் உருவான புற்றிலிருந்து பரவி இங்கு வந்திருக்கலாம் (secondary / metastatic cancer)” என்று ஒரு இடத்தில் எழுதி இருந்தேன். வேறு உறுப்புகளுக்குப் பரவுவது ஒரு புற்றுநோயின் பரிணாம வளர்ச்சியின் அங்கம். பொதுவாக ஒரு புற்றுநோய் எப்படி உருவாகி வளர்கிறது என்று தெரிந்துகொள்வோம். இது எல்லாப் புற்றுநோய்களுக்கும் அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சில வேறுபாடுகள் இருக்கும். ஏதாவது ஒரு உறுப்பிலோ தசையிலோ ஒரு உயிரணு கட்டுக்கடங்காமல் பகுத்து, பல்கிப் பெருகி பல்லாயிரம் லச்சம் என்று எண்ணிக்கை கூடி உருவமில்லாத கட்டியாக சேர்ந்து புற்றுநோயாகிறது. இந்தப் புற்றுநோய்க் கட்டிக்கு அந்த உறுப்பிற்கு ஏற்கனவே இருக்கும் இரத்தக் குழாய்கள் புதிதாக கிளைக் குழாய்களை அமைத்து ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும், அங்குள்ள கழிவுகளை அகற்றும். புற்றுநோயின் தன்மையே கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே இருப்பதுதான். கட்டி வளரும்போது அது உருவான உறுப்பிலிருந்து வெளிப்பட்டு அருகில் இருக்கும் உறுப்புகளையோ, தசைகளயோ ஊடுருவும் வாய்ப்பு இருக்கிறது. கட்டி உருவான உறுப்புக்கு அருகில் இதயம், மூச்சுக் குழாய், முதுகுத்தண்டு போன்ற முக்கியமான உறுப்புகள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். பல சமயங்களில் புற்றுக்கட்டிகள் பக்கத்தில் இருக்கும் எதாவது முக்கிய உறுப்பை ஊடுருவி பிரச்சினை ஆவதால்தான் நோய்வாய்ப்பட்டு மருத்துவரை நாடுவார்கள். எதனால் பிரச்சினை என்று தேடும்போது புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும்.

இரத்தக் குழாய்க் கிளைகள் புற்றுநோய்க்கட்டியை ஊடுருவும் என்று பார்த்தோம். அப்படி ஊடுருவும்போது அந்தப் புற்றுக்கட்டியில் இருக்கும் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் இரத்தத்தில் கலந்து உடலின் வேறு பாகங்களுக்கு பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படிப் பரவும் போது அருகில் இருக்கும் நெரிக்கட்டிகளுக்கு முதலில் பரவும் அதன்பின் தூரத்தில் இருக்கும் மற்ற உறுப்புகளுக்கு பரவும். தூரத்தில் இருக்கும் உறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகம் உள்ள நுரையீரல், கல்லீரல், மூளை மற்றும் எலும்புகளில்தான் பரவிப்போய் முளைக்கும் செகண்டரி அல்லது மெடாஸ்டாடிக் புற்றுக்கட்டிகளைப் அதிகம் பார்க்கலாம்.

வெவ்வேறு உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய்களுக்கும் தசைக்குழுமங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கும் இது மாறுபடும், ஆனால் சற்றேறக்குறைய இப்படித்தான் புற்றுநோய்களின் “ஸ்டேஜ் (stage)” என்று மருத்துவத்துறையில் சொல்வோம். ரொம்ப பொதுவாக இந்த ஸ்டேஜ்கள் என்ன என்று சிறு விளக்கம் சொல்கிறேன். கண்டிப்பாக ஒவ்வொரு கேன்சருக்கும், ஒவ்வொரு நோயாளிக்கும் இது மாறும். சிறுநீரகப் புற்றுநோயை எடுத்துக்காட்டாக கொடுக்கிறேன்.

 1. முதல் ஸ்டேஜ் – சின்னக் கட்டி, தோன்றிய உறுப்பின் உள்ளேயே இருக்கும். இருக்கும் உறுப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாக முழுவதுமாக அகற்ற வாய்ப்புகள் அதிகம். [எ.கா. கட்டி சிறுநீரகத்தினுள்தான் இருக்கிறது]
 2. இரண்டாம் ஸ்டேஜ் – சற்று பெரிய கட்டி. இதுவும் தோன்றிய உறுப்பினுள்தான் இருக்கும் ஆனால் அந்த உறுப்பின் வெளி எல்லையை தாண்டியிருக்கலாம். சில இடங்களில் எல்லையைத் தாண்டவில்லை என்றாலும் கட்டியின் அளவு பெரிதாகிவிட்டதாலும் அந்த உறுப்பு இருக்கும் இடத்தை வைத்தும் இராண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். அறுவை சிகிச்சையில் கட்டியை முழுமையாக அகற்றும் வாய்ப்பு குறையும். [எ.கா. கட்டி சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்புத்தசைகளுக்கு பரவியிருக்கிறது, வேறு எங்கும் பரவவில்லை]
 3. மூன்றாம் ஸ்டேஜ் – இந்த நிலையில் கட்டி பெரிதாகத்தான் இருக்கும்*. தோன்றிய உறுப்பின் எல்லையைத்தாண்டி பரவியிருக்கும். அருகில் உள்ள உறுப்புகள், தசைகளை ஊடுருவியிருக்கும். அருகில் உள்ள நெரிக்கட்டிகளுக்கு பரவியிருக்கும்.  * கட்டி சிறிதாக இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் உறுப்புகளை ஊடுருவியிருந்தாலோ பக்கத்திலிருக்கும் நெரிக்கட்டிகளுக்கு பரவியிருந்தாலோ அது மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படும். இந்த நிலையில் புற்றுநோயை முழுவதும் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. [எ.கா. கட்டி சிறுநீரகத்திற்கு அருகில் உள்ள தசைகளை ஊடுருவியிருக்கிறது, அல்லது இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டிருக்கிறது, அல்லது அருகில் உள்ள நெரிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறது]
 4. நான்காம் ஸ்டேஜ் – கட்டி என்ன அளவாக இருந்தாலும், அது எந்த உறுப்பில் தோன்றியிருந்தாலும், அருகில் ஊடுருவியிருந்தாலும், (நுரையீரல், கல்லீரல், மூளை, எலும்புகள் போன்ற) தூரத்தில் இருக்கும் உறுப்புகளுக்கு இரத்தின் மூலமாக பரவியிருந்தால் அது நான்காம் நிலைக்குத் தள்ளப்படும். இவர்களுக்கு இனி நோய்த் தணிப்பு பேணல்தான் வழி (palliative care).

புற்றுநோய் எந்த ஸ்டேஜ் / நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துதான் அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்று சொல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய்களைக் கண்டுபிடிப்பதும் நிலைப்படுத்துவதும் பெரும்பாலும் ரேடியாலஜி / ஸ்கேனிங் துறையினரின் வேலையாகத்தான் இருக்கிறது.

எந்த வகை புற்றுநோய்க்கு எந்த எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் வகை உகந்தது என்று நான் பட்டியலிட்டு எழுதப்போவது இல்லை. அப்படிப்பட்ட தகவல்கள் இணையத்தில் (பெரும்பாலும் ஆங்கிலத்தில்) பரவலாக உள்ளன, நீங்களே தேடிக்கொள்ளலாம் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி புற்றுநோய் மற்றும் ஸ்கேன் துறை பற்றி பொதுவாக எழுதுகிறேன்.

மேலே படிப்பவர்கள் ஒரு விஷயத்தை முதல் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகத்தான் புற்றுநோய் சிகிச்சைத்துறையும் ரேடியாலஜி / ஸ்கேனிங் துறையும் இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நம்முடைய வளர்ச்சி அபாரமானதுதான், ஆனால் இது பத்தாது என்பதுதான் உண்மை. புற்றுநோய்களைக் கண்டுபிடிக்கும் திறமை வளர்ந்திருக்கும் அளவிற்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் கட்டமைக்கப் படவில்லை. புற்றுநோய் சிகிச்சையைப் பற்றி எழுதும்போது இதைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன், ஆனால் இப்போழுது இரண்டு விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். புற்றுநோய்களைப் பொறுத்தவரை நோயைக் கண்டுபிடித்தல், நிலைப்படுத்துதல், சிகிச்சை திட்டமிடுதல் (diagnosis, staging, treatement planning and implementation) எல்லாமே ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். அங்கொன்று இங்கொன்று என்று பிய்த்துப் பிய்த்து இருந்தால் நோயாளிக்கு(ம் குடும்பத்தாருக்கும்) சரிப்பட்டு வராது. எந்த வகைப் புற்றுநோயை உதாரணமாக எடுத்துக்கொண்டாலும் நாம் பெரும்பாலும் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலை நோயாளிகளுக்குத்தான் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம். மிகச்சில ஒன்றாம் நிலை இராண்டாம் நிலை நோயாளிகளைத்தான் பார்க்கிறோம். அதாவது புற்றுநோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்தவோ முழுமையாக அகற்றவோ மிக அறிதாகத்தான் வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் நண்பர் புரூணோ ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருந்தார்:

In States like TN Once infectious diseases were controlled, diabetes and hypertension have become leading health burden
So, at present Chennai is the Diabetic capital of India
After we control this too, cancer will become the leading cause of death and when some other state is diabetic capital we will be cancer capital — States like Chattisgarh still are fighting with Malaria, TB and Cholera

புற்றுநோய் சிகிச்சையின் நிலையும் போகப் போக தமிழகத்தில் மாறும்.

எந்தப் புற்றுநோய்க்கு எந்த எக்ஸ்ரே / ஸ்கேன் செய்யலாம் என்று எழுதுவதைவிட பல வகையான ஸ்கேன் கருவிகளால் என்ன பயன் என்று எழுதுகிறேன்.

முத்து என்ற நபருக்கு உடலில் எதோ ஒரு பாகத்தில் கட்டி இருக்கிறது என்று மருத்துவர் கண்டுபிடித்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். முத்து இரண்டு மூன்று வாரகாலமாக இடதுபக்கமாக வயிற்றில் வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் அவரிடம் கேள்விகளைக் கேட்கும்போது, முத்துவுக்கு 55 வயதாகிறது என்றும் வேறு எந்த நோயும் இல்லை என்றும் தெரிந்து கொண்டார். ஆனால் கொஞ்சம் உடல் இளைத்திருப்பதாகவும், இப்பொழுதெல்லாம் பசி அவ்வளவாக இருப்பதில்லை என்றும் முத்து சொல்கிறார். முத்துவின் வயிற்றுப்பகுதியை அழுத்திப் பார்க்கும்போது இடது பக்கம் ஒரு கையகலக் கட்டிபோல் மருத்துவர் கையில் பட்டிருக்கிறது. அப்போது மருத்துவருக்கு இது மண்ணீரல் வீக்கமா, சிறுநீரகக் கட்டியா, குடலில் கட்டியா அல்லது வேறு ஏதாவது கட்டியா என்ற சந்தேகம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து வரச்சொல்லியிருக்கிறார். அந்த ஸ்கேனில் குடல் கட்டியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுப்பப் பட்டிருந்தது. மண்ணீரலிலும் சிறுநீரகங்களிலும் பிரச்சினை ஒன்றும் இல்லை. இந்த நிலையில் சிறந்த அடுத்த கட்ட நடவடிக்கை, முத்துவை முழு உடல் பெட்-சி.டி. ஸ்கேன் (whole body PET-CT scan) எடுக்கச் சொல்ல வேண்டும். அல்ட்ராசவுண்ட் ஒரு அடிப்படை ஸ்கேன். அதில் அதிக விவரங்கள் தெரியாது. அதுவும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பெரிய அளவில் உதவாது. குடல் பிரச்சினைகளுக்கு CT ஸ்கேன்தான் உகந்தது. முத்துவுக்கு குடலில் கட்டி என்றால் CT ஸ்கேன் செய்யலாமே. அது என்ன முழு உடல் PET-CT?  Fusion music கேள்விப்பட்டிருப்பீர்களே? அந்த மாதிரி முழு உடல் PET-CT என்பது ரேடியாலஜி மற்றும் நியூக்ளியர் மெடிசின் (அணுவியல் மருத்துவம்) துறைகளின் கூட்டணியில் பிறந்தது. அதன் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் விடுவோம். அதனால் என்ன பயன் என்று பார்ப்போம். முழு உடல் PET-CT செய்தால் diagnosis + staging (கண்டுபிடித்தல் + நிலைப்படுத்துதல்) இரண்டையும் ஒரே ஸ்கேனில் முடித்துவிட்டு சிகிச்சையை தொடங்கிவிடலாம். ஆனால் இரண்டு தொல்லைகள் உள்ளன. இந்த ஸ்கேன் மிகக்குறைவான இடங்களில்தான் செய்யப்படுகிறது. மிகவும் விலையுயைர்ந்தது. எனக்குத் தெரிந்து குறைந்தப் பட்ச விலையே பதினைந்தாயிரம் ரூபாய். தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முழு உடல் PET-CT ஸ்கேன் செய்யும் வசதி இல்லை என்றால் என்ன செய்ய? நெஞ்சு, வயிற்றுப்பகுதிகளில் உள்ள உறுப்புக்களில் கட்டி உள்ளது என்றால் இந்த இரண்டு பாகங்களையும் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடிய மல்டிஸ்லைஸ் சிடி ஸ்கேன் (multi-slice CT scan) செய்யலாம். குறைந்தபட்சம் 4 அல்லது 6 ஸ்லைஸ் CT ஸ்கேனாக இருப்பது நல்லது. மூளை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதி  கட்டிகளுக்கும் தலை, கழுத்துப் பகுதி கட்டிகளுக்கும் MRI ஸ்கேன் செய்வது நல்லது. ஸ்கேன் கருவி 1.5 அல்லது 3 டெஸ்லா காந்த சக்தி (1.5 or 3 Tesla magnetic field strength) உடையதாக இருப்பது நல்லது, கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கை கால் எலும்புகளில், தசைகளில் கட்டி இருந்தால் எக்ஸ்ரே மற்றும் MRI scan எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல ஊர்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஸ்கேன் மையங்களிலும் (4-slice, 6-slice, 16-slice, 64-slice, 128-slice) mutlislice CT scan மற்றும் (1.5 Tesla, 3 Tesla) MRI scan உள்ளன. பல சமயங்களில் கல்லீரல், கணையம் (pancreas), கருப்பை, சினைப்பை போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும்போது ultrasound, CT, MRI மூன்று ஸ்கேன்களும் செய்ய வேண்டி வரலாம். சிகிச்சைத் திட்டதிற்குத் தேவையான சில விவரங்கள் சில ஸ்கேன் முறைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதனால் அவைகளைச் செய்தே அகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கட்டி இருக்கிறது என்று தெரிந்து கொண்டபின் அது எந்த வகையான கட்டி என்று அறிய அதிலிருந்து சதை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் (FNAC / FNAB / biopsy tests). மூச்சுக் குழாய், இறைக் குழாய்களில் கட்டி இருந்தால் மருத்துவர் எண்டாஸ்கோபி செய்யும்போது பரிசோதனைக்கு சதை எடுக்கலாம். நெஞ்சு, வயிற்றுப்பகுதிகளில் உள்ள உறுப்புக்களில் கட்டி உள்ளது என்றால் ultasound அல்லது CT ஸ்கேனில் பார்த்துக்கொண்டே ஊசியை உள்ளே செலுத்து கட்டியிலிருந்து சதையை பரிசோதனைக்கு எடுக்கலாம் (imaging guided biopsy). சில சமயங்களில் வேறு எந்த வகையிலும் முடியாதபோது பரிசோதனைக்கு சதை எடுப்பதற்காகவே அறுவைசிகிச்சை செய்யவேண்டி வரலாம்.

புற்றுநோயைக் கண்டறிவது என்பது ஒரு ஆரம்பம்தான். நோயாளிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து நீண்டகாலம் பாதிக்கக்கூடிய பயணத்தின் தொடக்கம் இது.


 

அடுத்ததாக புற்றுநோய்களின் சிக்கிச்சையைப் பற்றி சில நாள் இடைவேளை கழித்து பார்க்கலாம்… பொங்கல் விடுமுறைப் பயணம்.

Advertisements

ஜனவரி 9, 2016

புற்று முன்பு பார்க்க…

இந்த மருத்துவக் கட்டுரைத் தொடரின்

 1. முதல் பாகம் / முன்னுரை – தயக்கம் என்ன.
 2. இரண்டாம் பாகம் – பார்க்கும் இடம் எல்லாம் புற்று.
 3. மூன்றாம் பாகம் – புற்று மிகும் இடங்கள்.

இது அதன் தொடர்ச்சி.


எந்த உறுப்பிலும் புற்றுநோயை சீக்கிரம் கண்டுபிடித்து அதற்குத் தகுந்த சிகிச்சையை அளித்தால்தான் குணப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியும்.

இந்த வாக்கியத்தை எளிதாக சொல்லிவிடலாம் ஆனால் செயலாக்கத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. என்ன சிக்கல்கள் என்று சிறு கண்ணோட்டம் பார்த்துவிட்டு மேலே செல்வோம்.

 1. புற்று நோய் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
 2. தாய் வயிற்றில் இருக்கும் சிசுவிலிருந்து நூறு வயது கிழவர் வரை எந்த வயதினரையும் புற்று நோய் தாக்கலாம்.
 3. வெவ்வேறு உயிரணு வகைகளில் புற்றுநோய் உருவாக பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அந்தக் காரணங்களில் சிலவற்றைத்தான் நம்மால் அடையாளம் கண்டுபிடிக்கமுடியும்.
 4. உடலின் உள் பகுதிகள் சிலவற்றில் புற்றுநோய் உண்டானால் அவை பெரிதாக வளர்ந்த பின் அல்லது வேறு பாகங்களுக்குப் பரவிய பின்தான் கண்டுபிடிக்கப் படுகின்றன.
 5. சில வகை புற்றுநோய்களை “aggressive malignancies/cancers” என்று மருத்துவத்துறையில் கூறுவார்கள். இவை வேகமாக வளரக்கூடிய புற்றுக்கள். மிகத்தீவிரமாக அருகில் உள்ள மற்றும் தூரத்தில் உள்ள கல்லீரல், நுரையீரல், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்கு பரவும் சக்திவாய்ந்தவை. இவைதான் கண்டுபிடிக்கும்போதே நாலாவது ஸ்டேஜ், இனி பெருசா ஒன்னும் பண்ணுவதற்கில்லை என்கிற வகை.

இப்படி இருக்கும் ஒரு அமைப்பில் எல்லாப் புற்றுநோய்களையும் சீக்கிரமே, அதாவது ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடுங்குவது என்பது நடக்காது. புற்றுநோய் சிகிச்சையின் குறைந்தப் பட்ச இலக்கு, நோயை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, கண்டுபிடித்து அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான்.

புற்று நோயை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் (diagnosis) என்றால், மற்ற நோய்களை டயக்நோஸ் பண்ண மருத்துவர்கள் பின்பற்றும் அதே வழிமுறைகளைத்தான் பின்பற்றவேண்டும்

 1. நோயாளிக்கு உள்ள பிரச்சினை, அறிகுறிகள். இதில் அவர் மருத்துவரிடம் சொல்லும், மருத்துவர் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அனைத்தையும் சேர்த்திக்கொள்ளலாம்.
 2. மருத்துவர் நோயாளியை நேரடியாகப் பரிசோதித்துத் தெரிந்துகொள்வது. இதில் மருத்துவர் அவரே செய்யும் என்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 3. லேப் / ஆய்வகத்தில் செய்யும் இரத்தப் பெரிசொதனைகள்.
 4. ரேடியாலஜி / ஸ்கேன் பரிசோதனைகள்.
 5. ரேடியாலஜி / ஸ்கேன் பரிசோதனைகளில் கட்டி ஏதாவது கண்டுபிடிக்கப் பட்டால் அதிலிருந்து ஊசி வழியாக சதை பரிசோதனைக்கு எடுத்து அனுப்பும் பயாப்சி / FNAC test. இதுதான் அந்தக் கட்டி புற்றுநோய்க் கட்டியா என்று உறுதி செய்யும்.

ஒருவர் பிரச்சினையுடன் வந்தால் அந்தப் பிரச்சினை புற்றுநோயினாலானதா என்று கண்டுபிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இவை. எந்த ஒரு பிரச்சினையுடன் ஒரு மருத்துவரிடம் சென்றாலும் அந்தப் பிரச்சினைக்கு சாதாரனமான காரணம்தான் இருக்கும் என்று முடிவெடுத்து மருத்துவ அறிவுரை கூறும் முன் அபாயகரமான காரணம் எதுவும் இல்லை என்று உறுதிப் படுத்திக்கொள்வது அடிப்படை மருத்துவக் கோட்பாடு. Rule out the dangerous things first.

உதாரணமாக ஒரு நபருக்குத் தலைவலி என்று எடுத்துக்கொள்வோம், அது சாதாரனமான  தலைவலிதான் என்று அவர் சொல்வதை வைத்தும் மருத்துவர் பரிசோதித்துப் பார்ப்பதிலும் தெளிவாகத் தெரியவில்லை என்றால் அவரை சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வரச்சொல்லுவார்கள். ஸ்கேனில் எதுவும் இல்லை என்றால் தலைவலிக்கு மட்டும் மருத்துவம் பார்க்கப்படும். கட்டி (அல்லது வேறு பிர்ச்சினை) எதாவது இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.

உடல் உபாதைகளில் எது வந்தால் நாம் புற்றுநோய் இருக்குமா என்று சந்தேகிக்க வேண்டும் என்று ‘லாஜிக்கலாக’ நாம் கேட்கலாம். என்னிடம் வரும் ஒரு நோயாளி என்னென்ன குறைகளைக் கூறினால் நான் “ஓஹோ, இது கேன்சரா இருக்க ஒரு சின்ன சான்ஸ் இருக்கு, மனசில் வேச்சுக்குவோம்”ன்னு நினைப்பேன் என்று ஒரு பட்டியல் போடுறேன், அப்பத்தான் இந்த லாஜிக் எவ்ளோ அடிபடும்னு புரியும்.

 1. தலைவலி – மூளை, மூளையைச்சுற்றியுள்ள மூளைச்சருமம் (meninges), மண்டையோட்டில் புற்று. இது நேரடி புற்றுநோயாக இருக்கலாம் அல்லது வேறு உறுப்பில் உருவான புற்றிலிருந்து பரவி இங்கு வந்திருக்கலாம் (இது ஒரு தனிப் பெருங்கதை, அப்புறமாகப் பார்க்கலாம்).
 2. கண்கள் அல்லது பார்வையில் கோளாறு – திடீரென்று பார்வை மங்கலாகிவிட்டது, எல்லாமே இரண்டாகத் தெரிகிறது, ஒருபக்கமாகப் பார்தால்மட்டும் இரண்டாகத் தெரிகிறது, பக்கவாட்டில் பார்வை தெரியவில்லை, ஒருபக்கம் மட்டும் பார்வை தெரியவில்லை, ஒரு கண் நகரவில்லை, ஒரு கண் பிதிங்கிக்கொண்டு நிற்கிறது. கண்கள், மூளை, மூளைத்தண்டில், மண்டையோட்டின் தளப்பகுதியில் புற்றுநோய்.
 3. தலைசுற்றல்.
 4. திடீரென்று ஒருபக்கம் காத்து கேட்கவில்லை. பின்மண்டைக்குள் கட்டி.
 5. திடீரென்று வாசனை நுகரமுடியாமல் போவது. முன் மண்டையின் தளப்பகுதியில் கட்டி.
 6. வாயில் / நாக்கில் / தொண்டையில் ஆறாத புண்.
 7. கழுத்தில் கட்டி / நேரிக்கட்டி(கள்). நேரடிப் புற்றுநோய் அல்லது வேறு உறுப்பிலிருந்து பரவி வந்த புற்று.
 8. குரலில் மாற்றம். குரல்வளையில் அல்லது மூச்சுக் குழாயில் கட்டி.
 9. உணவு விழுங்குவதில் பிரச்சினை. உணவுக் குழாயில் கட்டி.
 10. இருமல். சளியில் இரத்தம். நுரையீரலில் அல்லது மூச்சுக் குழாயில் கட்டி.
 11. மூச்சிறைப்பு. நுரையீரலில் அல்லது மூச்சுக் குழாயில் கட்டி.
 12. வயிற்றுவலி.
 13. வாந்தி. இரத்தப்போக்கு.
 14. வயிற்று வீக்கம்.
 15. பசியின்மை.
 16. மஞ்சள்காமாலை.
 17. மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் – மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு.
 18. மலத்தில் இரத்தப் போக்கு.
 19. சிறுநீரில் இரத்தப் போக்கு.
 20. முதுகு வலி.
 21. இடுப்பு வலி.
 22. கை, கால் எலும்புகளில் வலி அல்லது கட்டி.
 23. பெண்களுக்கு மார்பில் கட்டி, மார்பு வலி, காம்பில் இரத்தப் போக்கு, காம்பு உள்ளே திரும்பியிருக்கிறது.
 24. பெண்களுக்கு கருப்பையிலிருந்து அதிக உதிரப்போக்கு.
 25. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு மீண்டும் உதிரப்போக்கு ஏற்படுவது (post-menopausal bleeding).
 26. ஆண்களுக்கு விரையில் கட்டி.
 27. எடை குறைந்துள்ளது.
 28. பலவீனம்.

பட்டியலில் முதல் சில பிரச்சினைகளுக்கு விளக்கம் எழுதியதும், இத்துடன் விளக்கம்  போதும் என்று விட்டுவிட்டேன். ஏன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். ஏறக்குறைய எல்லா பிரச்சினைகளுக்குமே புற்றுநோய் காரணமாக இருக்குமோ என்று சந்தேகப் படவேண்டியிருக்கும். அதற்காக இந்தப் பிரச்சினைகள் இருப்பவர்கள் அனைவருக்கும் கேன்சர் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. இவையெல்லாம் சில உறுப்புக்களில் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள். இந்தப் பிரச்சினைகளுடன் வருபவர்களில் யாருக்கு கேன்சர் இருக்க வாய்ப்பு அதிகம் என்று சந்தேகப்பட்டு அவர்களுக்கு மேலும் பரிசோதனைகள் செய்வது நல்லது.

குறுகிய காலத்தில் கணிசமான அளவு எடை குறைதலும் பசியின்மையும் உடல் தளர்ச்சியும் இவற்றுள் முக்கியமான அறிகுறிகள்.

சில புற்றுநோய்களுக்கு நோயின் அறிகுறி வெளியே தெரிய வரும்முன்னரே நோய் இருக்கிறதா என்று அறிந்துகொள்ள சில ஸ்க்ரீனிங் பரிசோதனைகள் (screening tests) உள்ளன. இதற்கான உதாரணங்கள்:

 1. மார்பகப் புற்றுநோய்க்கு மேமோகிராம் (mammogram).
 2. கருப்பை வாய் புற்றுநோய்க்கு பேப் ஸ்மியர் (Pap smear).
 3. பெருங்குடலில் பாலிப்கள் எனப்படும் (பிற்காலத்தில் புற்றுநோயாக வளரக்கூடிய polyps) சதைக் கட்டிகள் உள்ளனவா என்று பார்க்க கோலோணோஸ்கோபி (colonoscopy).

இவ்வாறு உடலில் அறிகுறிகள் (symptoms and signs) தென்படுவதற்குமுன் புற்றுநோய்களைக் கண்டுபிடிபதற்கு மிகச்சில பரிசோதனைகளே உள்ளன.

பொதுவாக ஒருவருக்கு ஏதாவது பிரச்சினைக்காக மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கும்போது உடலில் எங்காவது கட்டி(கள்) கண்டுபிடிக்கப்படும். அது புற்றுநோயாக இருக்கக்கூடுமா என்று மேலும் பரிசோதனைகளால் உறுதி செய்யப்படும். சில புற்றுநோய்களை இரத்தப் பரிசோதனை செய்தே ஓரளவு உறுதி செய்து விடலாம். இவை இரத்தத்தில் புற்றுக் குறிப்பிகளை சுரக்கும் (tumour markers, biomarkers), உதாரணங்கள்: சினைப்பை புற்றுநோய்க்கு CA-125, கல்லீரல் புற்றுநோய்க்கு CEA, சில வகை மார்பகப் புற்றுநோய்களுக்கு CA15-3, CA27-29. இந்த புற்றுக்குறிப்பிகள் இரத்தத்தில் அதிகமாக இருந்தால் அந்த குறிப்பிட்ட புற்றுநோய் உள்ளது என்ற சந்தேகம் வலுக்கும்.

உடலின் பெரும்பாலான உறுப்புக்களிலும் தசைகளிலும் புற்றுநோய் கட்டிவடிவில்தான் தோன்றும். அப்படித்தோன்றும் கட்டி உடலில் வெளியில் தெரியாத இடத்தில் இருந்தால் எதாவது ஸ்கேன் செய்தால்தான் கண்டுபிடிக்கப்படும். இரத்தப் புற்றுநோய்கள் இதற்கு விதிவிலக்கு என்று நினைப்போம், ஆனால் அவைகளும் எலும்பில், எலும்பு ஊணில் கட்டி சேர்ந்து ஸ்கேன்களில் புலப்படும் வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய்களுக்கு ஸ்கேன் செய்வது பற்றி மேலும் பார்ப்போம்…

ஜனவரி 6, 2016

புற்று மிகும் இடங்கள்

இந்த மருத்துவக் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் / முன்னுரை இங்கே இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் புற்று நோய் பற்றி எழுதத் தொடங்கினேன். இது அதன் தொடர்ச்சி.


 

ஏன் புற்றுநோயை எளிதாகக் கண்டுபிடிக்கமுடிவதில்லை? இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாதா? புற்று நொயால் பாதிக்கப் பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் இவ்வகை கேள்விகளை மருத்துவர்களிடம் கேட்டிருப்பார்கள். என் நண்பர் ஒருவருடைய மிகவும் நெருக்கமான சொந்தக்காரருக்கு புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர் மிகவும் கலங்கிவிட்டார். அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. “அது எப்படிங்க, ரெண்டு மூனு வாரம் முன்னாடி வரைக்கும் நல்லாயிருந்தாங்க, இப்ப எதோ பசிக்கலை கொஞ்சம் வீக்கா இருக்காங்கன்னு வயசானவங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டுப் போனா கேன்சர், நாலாவது ஸ்டேஜ், ஆபரேஷன் பண்ணனும் ஆனாலும் கொஞ்ச காலம்தான் உயிர் வாழுவாங்கன்னு பயமுறுத்துறாங்க.” அவருடன் பெசிக்கொண்டிருந்தபோது, “கேன்சரைக் கண்டுபிடிக்க  ப்ளட் டெஸ்ட், புல் பாடி டெஸ்ட் எதாவது இருந்தா சொல்லுங்க டாக்டர், இதை ஒரு ப்ளாகா எழுதுங்க, படிக்கறவங்களுக்கு யூஸ் ஆகும்,” என்று மிகவும் வலியுறுத்தினார். இதைப் படித்துக்கொண்டிருக்கும் அந்த நண்பருக்கு நன்றி.

எல்லாப்புற்று நோய்களையும் கண்டு பிடிக்க எளிதான வழிமுறை என்னிடம்/எங்களிடம் இருக்கிறது என்று நானோ வேறு மருத்துவரோ சொன்னால் அது இணையத்தில் ஒரு சாரர் கேலி செய்யும் கார்பரேட் கைக்கூலித்தனம் என்றே எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரைத்தொடரின் போன பாகத்தில் உச்சி முதல் பாதம் வரை உடலில் உள்ள எல்லாத்தசைகளிலும் பல வகையான புற்றுநோய்கள் உருவாகலாம் என்று பார்த்தோம். அவை அனைத்தையும் “எளிதாக” கண்டுபிடிப்பது எப்படி சாத்தியம்?

உடலில் எல்லாத் தசைகளிலும் புற்று உருவாகலாம் என்றும் அது எந்த வயதிலும் வரலாம் என்றும் பார்த்துவிட்டோம். எதனால் புற்றுநோய் தோன்றுகிறது? மருத்துவ அறிவியல் ஆராய்ச்சித் தரவுகள் என்று குழப்பாமல் தோராயமாகச் சொல்கிறேன். பெருவாரியான புற்றுநோய்கள் எதனால் உருவாகின்றன என்று தெரிவதில்லை. தெளிவாக இந்தக் காரணத்தால் இந்தப் புற்றுநோய் ஏற்பட்டது என்று மிகக்குறைவான இடங்களில்தான் தீர்மானிக்க முடியும். புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருவதும், புகையிலை மேல்வதால் வாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் வருவதும், ஹெபடைடிஸ் சி வைரஸ் தாக்குதல் இருந்தால் கல்லீரல் புற்றுநோய் வருவதும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். சில உறுப்புகள், தசைகளில் புற்றுநோய் ஏற்பட்டால் அவை சில காரணங்களால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகப் படலாம். அப்படி சந்தேகம் எழுப்பக் கூடிய காரணிகளில் சில உணவு மற்றும் வாழ்க்கை பழக்கவழக்கங்கள், நுண்கிருமிகள், சுற்றுச்சூழல் மாசுக்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் மருத்துவக்கல்லூரி பாடபுத்தகத்தில் படித்த வாக்கியம் ஒன்று (இன்னும்) ஞாபகம் இருக்கிறது;

“There is no escape: It seems that everything one does to earn a livelihood, to subsist, or to enjoy life turns out to be illegal, immoral, or fattening, or — most disturbing — possibly carcinogenic.” Robbins, Pathologic Basis of Disease. (இந்த புத்தகம்தான் ஆனா இப்போதைய பதிப்பில் இதே வாக்கியம் இருக்கான்னு பார்க்கனும். விலையைப் பார்த்தா தலை சுத்துது)

இது போக சில வகை புற்றுநோய்கள் மரபணுக்கள் வழியாக பரம்பரை சாபங்கள் ஆகிவிடுகின்றன. இவற்றில் அனைவருக்கும் மார்பகப் புற்றுநோய், சினைப்பை (ஓவரி) புற்றுநோய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சில பெருங்குடல் புற்றுநோய்களும் சிலவகையான லுகீமியாக்களும் (இரத்தப்புற்றுநோய்) மரபணு வழியாக சந்ததியினருக்கு பரவக்கூடியவை.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி:

 • ஆண்களை பாதிக்கும் டாப் 5 புற்று நோய்கள் – நுரையீரல், ப்ராஸ்டெட் சுரப்பி (prostate), பெருங்குடல், இரைப்பை, கல்லீரல்.
 • பெண்களை பாதிக்கும் டாப் 5 புற்று நோய்கள் – மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கருப்பை வாய் (cervix), இரைப்பை.

புற்றுநோயைப் பொறுத்த வரை வரும்முன் காப்போம் என்பது சில சமயங்களில் உதவலாம். சிகரட் பிடிக்காமல் இருந்தால் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும். அதற்காக புகைபிடிக்காத ஒருவருக்கு (போன பதிவில் நான் கொடுத்த உதாரணம் போல்) புற்றுநோய் வந்துவிட்டால் ஏன் வந்தது என்று கேள்வியா கேட்கமுடியும்.

எந்த உறுப்பிலும் புற்றுநோயை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து அதற்குத் தகுந்த சிகிச்சையை அளித்தால்தான் குணப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியும். ஒரு ஆங்கில வாக்கியத்துடன் இன்று முடிக்கிறேன்.

Early detection is THE mantra.

 

ஜனவரி 4, 2016

பார்க்கும் இடம் எல்லாம் புற்று

ஆங்கில மருத்துவம் என்றும் அலோபதி என்றும் தூற்றப்பட்டும்/போற்றப்படும் அறிவியல் சார்ந்த மருத்துவத்தின் மிகப் பெரிய பிரச்சினையே அதனுடைய மொழிதான். நான் வாழும் தமிழக சேலத்தில் இருந்தாலும் சரி அமெரிக்காவில் இருக்கும் சில சேலம் நகரங்களிலும் சரி, அறிவியல் சார்ந்த மருத்துவத்தின் “மொழி” சாதாரன மக்களக்கு புரிவதில்லை. சாதாரண மக்கள் என்றால் மருத்துவர் அல்லாதவர் எல்லோரும் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இதை நான் கர்வத்தில் சொல்லவில்லை, மேலே படிக்கும்பொது இது நியாயம்தான் என்று உங்களுக்கே புரியும்.

புற்றுநோயைப் பற்றி மேலும் விரிவாக எழுதவேண்டும் என்று போன பதிவில் சொல்லிவிட்டேன். அறிவியல் கலைச்சொற்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் என்னால் முடிந்த வரை எளிய தமிழில் சிறு பகுதிகளாக எழுதப் போகிறேன். மேற்கொண்டு எழுதப் படுபவை அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவத் துறையில் கிடைத்த அனுபவத்தை வைத்து எழுதுவது. இவை முழுவதும் “அறிவியல் சார்ந்த உண்மைகள்” என்று சொல்வதற்கு இல்லை. இங்கு நீங்கள் படிப்பதை உங்கள் சொந்த மருத்துவ சிகிச்சைக்கு அறிவுரையாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

சமீபகாலத்தில் நம் நாட்டு மக்களிடையே புற்றுநோய் அதிகமாகக் காணப்படுவதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.  இதற்கு சிக்கலான பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் எளிமையாக இரண்டு வாக்கியங்களில் விளக்கிவிடலாம்.

 1. இந்தியர்களின் ஆயுள்காலம் நீடித்திருக்கிறது. 1947-ல் சராசரி இந்தியரின் ஆயுள் எதிர்பார்ப்பு 32 வயதாக இருந்தது. அது இப்போது 66 வயதாக உயர்ந்துள்ளது.
 2. அறிவியல் சார்ந்த மருத்துவம் வளர்ந்திருக்கிறது.

அறிவியல் சார்ந்த மருத்துவத்தின் வளர்ச்சியால்தான் ஆயுள் காலம் நீண்டது என்பதும் மறுக்கப் படமுடியாத உண்மை. சென்ற நூற்றாண்டில் இந்தியர்களுக்கு ஆயுள் எதிர்பார்ப்பு குறைவாக இருந்ததற்கு ஊட்டச்சத்துக் குறை, தொற்று நோய்கள் என்னும்  இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம். எல்லா நிலை மக்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு இன்னும் தீர்ந்துவிடவில்லை. ஆனால் தொற்று நோய்களால் சென்ற நூற்றாண்டில் அவதிப்பட்டதைவிட இன்று பலமடங்கு முன்னேறியிருக்கிறோம். இன்றைய நிலையில் பொருளாதார மேல், நடுத்தரத்தில் இருப்பவர்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு எழுபது வயதிற்குமேல் என்று  ஆகிவிட்டது. அறுபது வயதிற்குமுன் ஒருவர் இறந்துவிட்டால் அகால மரணம் என்றுதான் கேள்விப்படுகிறோம்.

தொற்று நோய்கள் குறைந்த அதே காலகட்டத்தில் தொற்றாத நோய்களின் “வளர்ச்சியை” நாம் கவனிக்க வேண்டும். தொற்றாத நோய்கள் என்பவை பெரும்பாலும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் வயதினால் ஏற்படுபவை. நாம் அனைவரும் அறிந்திருப்பது நீரிழிவு / சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அதிகம் ஆவாதால் உண்டாகும் இதய நோய், மூளை-நரம்பியல் நோய்கள். தொற்றாத நோய்களின் பட்டியலில் புற்றுநோயையும் செர்த்திக்கொள்ளலாம். புற்று நோயைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு வெட்டிக் கேள்விக்கு முதல் பதில் கொடுத்துவிடுகிறேன்.

புற்று நோய் தொற்று நோய் அல்ல. புற்று நோய் இருப்பவருடன் நீங்கள் இருப்பதால், தொட்டுப் பேசிப் பழகுவதால் உங்களுக்கு “அதே புற்று நோய்” வராது.

தொற்றாத நோய்களில் தீவிரமானவையான மாரடைப்பு பக்கவாதம் போன்றவை முப்பது வருடங்களுக்கு முன் வரை ஆட்கொல்லி நோய்களாக இருந்தன. இப்போது மருத்துவத்தின் வளர்ச்சியினால் அவை சிகிச்சை அளித்து கட்டுப் படுத்தக்கூடிய நோய்களாக மாறியிருக்கின்றன. இதே காலகட்டத்தில் மருத்துவப் பரிசோதனை முறைகளும் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக மனித உடலின் பல்வேறு பாகங்களை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் ரேடியாலஜி ஸ்கேன் துறை வியக்க வைக்கும் வளர்ச்சி அடைந்துள்ளது.

நம் மக்களுடைய ஆயுள் அதிகரித்துள்ளது. ஆட்கொல்லிகளாக இருந்த தொற்று நோய்களும் தொற்றாத நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. “புதிதாக” புற்றுநோய்கள் எனும் தொற்றாத நோய்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறோம் (என்று வைத்துக் கொள்வோம்). இப்போது புற்று நோய்களை கண்டுபிடிக்க பல கருவிகளும் பரிசோதனைகளும் இருக்கின்றன. இதனால்தான் இப்போது பார்க்கும் இடம் எல்லாம் புற்று இருக்கிறது.

புற்று நோய் என்று எழுதிக் கொண்டிருந்தவன் ஏன் நோய்கள் என்று பன்மைக்கு மாறிவிட்டேன் என்று யாராவது இலக்கண ஆராய்ச்சியில் இறங்கியிருந்தால், அவர்களுக்கு ஒரு விளக்கம். புற்று நோய் என்று சொல்வதே தவறு. அது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. புற்று என்பது ஒரு நோய் குழுமத்தின் பெயர். உடலில் உச்சி முதல் பாதம் வரை எல்லா உறுப்புகளிலும் தசைகளிலும் புற்று நோய் ஏற்படலாம. உயிரணு பகுப்பு (cell division) உடலின் எல்லா தசைகளிலும் உறுப்புகளிலும் சாதரணமாக நடக்கும். ஏதாவது ஒரு உறுப்பிலோ தசையிலோ ஒரு உயிரணு கட்டுக்கடங்காமல் பகுத்து, பல்கிப் பெருகி பல்லாயிரம் லச்சம் என்று எண்ணிக்கை கூடி உருவமில்லாத கட்டியாக சேரும்பொழுது அதை புற்று நோய் என்கிறோம். எந்த உறுப்பில் எந்த விதமான தசையிலிருந்து வந்தது என்பதைப் பொறுத்து அதற்கு பெயரிடப்படும். உதாரணமாக மூளையில் உள்ள நரம்புகள் பெருகி கட்டி சேர்ந்தால் அதை க்ளையோமா (glioma) என்போம், மூளையைசுற்றியுள்ள கேட்டித்துணி போன்ற பையில் கட்டிசேர்ந்தால் அது மேனிஞ்சியோமா (meningioma). நுரையீரலில் கார்சினோமா (carcinoma), விலா எலும்பில் சார்கோமா(sarcoma), இப்படி தசைக்கு மூனு வீதம், உறுப்புக்கு இரண்டு மூன்று தசைகள் என்று பல்வகை நிலைமாற்றம் உண்டு. இத்தனையையும் விடுங்கள். கேன்சர் கட்டியாகவே இருக்க வேண்டியதில்லை. ரத்தத்தோடு ரத்தமாக ஓடிக்கொண்டே புற்று நோய் இருக்கலாம். பிளட் கேன்சர் என்றும் லுகீமியா என்றும் இதயத்தைத் திருடாதே படத்தில் காட்டினார்களே, அப்படி.

நம் மக்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வதால்தான் புற்றுநோய் வருகிறது என்று நிறுவ முயற்சி செய்திருந்தேன். அதுவும் பொய்தான். புற்றுநோய் எல்லா வயதிலும் வரும். பிறப்பதற்குமுன்னே புற்றுநோய் வரும்.

தாயின் வயிற்றுக்குள் வளர்ந்துகொண்டிருக்கும் சிசுவிற்கு டெரடொமா (teratoma) என்ற புற்றுநோய் வளரும் வாய்ப்பு உண்டு.

பிறந்த கைக்குழந்தையாய் தாயின் மாரில் பால் குடிக்கும் குழந்தையின் கண்ணில் புரைபோல் ராப்டோமா என்ற பார்வையையும், சில சமையம் உயிரையும் பறிக்கும் புற்று நோய் வரக்கூடும்.

பத்தாம் வகுப்பு பரிச்சைக்கு படித்துக்கொண்டிருக்கும் சிறுமி. தலை வலிக்கிறது என்கிறாள். எக்ஸாம் டென்ஷன் தானோ? எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துவிடுவோம் என்று பார்த்தால் மூளையில் ஆபரேஷன் செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள கேன்சர் கட்டி.

முப்பத்தியிரண்டு வயதுப் பெண் மார்புக் காம்பு உள்பக்கம் திரும்பிவிட்டதாகவும், லேசாக வலிப்பதாகவும் சொல்கிறாள். தொட்டுப் பார்த்தால் சிறு கட்டி தென்படுகிறது. பயாப்சி செய்தால் கேன்சர்.

அறுபத்தியிரண்டு வயதான, ஒரு கேட்ட பழக்கமும் இல்லாத, சைவ சிவபக்த தொழிலதிபர். அவருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய்.

அறுபத்தைந்து வயதான ஓய்வுபெற்ற மகளிர் கல்லூரி ஜூவாலஜி புரபசர். அவருக்கு நுரையீரலில் புற்றுநோய். அவருடைய கணவர்கூட சிகரட் பிடிக்கமாட்டார்.

நாற்பத்திரெண்டு வயதான வங்கி அதிகாரி. கணவர் அதே வங்கியில் வேறு கிளையில் வேலை செய்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவள் இப்பொழுது ப்ளஸ் 2. வயிற்று வலி என்று மருத்துவரிடம் வந்திருக்கிறார். ஸ்கேன் எடுக்கச்சொல்லியிருக்கிறார். அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் கல்லீரல் முழுக்க கட்டிகள். இது வேறெங்கோ கேன்சர் கட்டி இருந்து கல்லீரலுக்கு பரவியிருக்கிறது. இவ்வளவு பரவியிருக்கிறது என்றால், இந்தப் பெண்மணி இன்னும் சில மாதங்கள் கூட உயிருடன் இருக்கமாட்டார்கள். அந்த சோகத்தை முதலில் உணர்பவன் நான். கொடுமை.

 

ஜனவரி 3, 2016

தயக்கம் என்ன

நேற்று ஒரு அருமையான மருத்துவப் பேட்டிக் கட்டுரையைப் படித்தேன்.

ஹாங்காங்கில் உள்ள ஒரு ஐரிஷ் பத்திரிக்கையாளர் பிரபல அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் அதுல் கவாண்டேவை சந்தித்து உரையாடிய கட்டுரை. அதை தமிழாக்கம் செய்வது என் நோக்கம் அல்ல. அசலைப் படியுங்கள்.  உங்களுக்குப் பிடிக்கும். இந்த உரையாடலில் அவர்கள் நிறைய பேசுவது 2014ல் கவாண்டே எழுதிய பீயிங் மார்டல் என்ற இப்பொழுதும் பெஸ்ட் செல்லராக இருக்கும் புத்தகம் பற்றி தான் (Being Mortal). நான் இன்னும் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இது தமிழ் இணைய வழக்குப்படி பின் அட்டையும் வேறு கட்டுரைகளையும் படித்துவிட்டு ஒரு புத்தகத்திற்கு எழுதும் மதிப்புரையும் அல்ல.

கடந்த ஓராண்டு காலமாக பல ஊடகங்களில் பீயிங் மோர்டல் புத்தகத்துக்கு வரும் மதிப்புரைகள், கவாண்டேவின் பெட்டிகள் இவைகளை கவனித்து வருபவர்களுக்கு அதன் கான்செப்ட் மிக எளிதாகப் புரிந்துவிடும். அறிவியல் சார்ந்த மருத்துவம் நோயைக் கட்டுப் படுத்துவதிலும் மரணத்தைத் தள்ளிப் போடுவதிலும் அமோக வளர்ச்சியைக் காட்டியுள்ளது. வாழ்கையை நீடித்துள்ள மருத்துவம் வாழ்வின் தரத்தை உயர்த்தியுள்ளதா? நோயுற்ற ஒருவருடைய வாழ்வை மருத்துவரீதியாக நீடிப்பதற்குமுன் எந்த மாதிரியான எதிர்காலம் உங்களுக்கு இனி இருக்கும் என்று ஆலோசனை சொல்லப் படுகிறதா? அவர்களுடைய நியாமான பயங்களை போக்க முடியாவிட்டாலும் கேட்க, ஆறுதல் சொல்ல ஆள் இருக்கிறதா.

இதையெல்லாம் நம் நாட்டில் யோசிக்கிறோமா என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்குத் தோன்றும். நேற்று நண்பர் ஒருவர் ட்விட்டரில் நம் இந்திய மருத்துவச் சூழலில் கவாண்டேவைப் போல் ஏன் மனம் திறந்து பேசத் தயங்குகிறார்கள் என்று கேட்டுவிட்டார்.

இதைப் பற்றியெல்லாம் பேச இது ஒரு தொடக்கம். அதிகம் யோசிக்காமல் இதுநாள் வரை என் மனதில் இருந்த விஷயங்களை மட்டும் இன்று எழுதுகிறேன்.

நம் நாட்டு மருத்துவச் சூழலில் மரணத்தைப் பற்றி மருத்துவர்கள் நோயாளிகளிடம், அதாவது மரணிக்கப் போகிறவரிடம் பேசுவது மிக அரிது. குடும்பத்தாருடன் பேசுவதுதான் சராசரியாக நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது இறப்பு மரணம் போன்ற விஷயங்களை பேசுவதே நல்ல சகுனம் / ராசி இல்லை என்று பரவலாக எல்லா மதத்தினரும் நம்பும் நம் கலாச்சாரத்தில் ஒரு மருத்துவர் ஒரு நோயாளியிடம் மரணத்தைப் பற்றிப் பேசுவது எப்படி எடுத்துக் கொள்ளப் படும் என்ற பயம். இது மருத்துவத் துறையினருக்கும் நோயாளிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் அனைவருக்கும் இருக்கக்கூடிய பயம். குடும்பத்தாருடன் இந்த உரையாடல் இருந்தாலும் அது அனேகமாக தீவிர சிகிச்சை பிரிவிலோ அவசர சிகிச்சை பிரிவிலோ அவசரமாக அரைகுறையாக பேசப்படும். சினிமாத் தனமான வசனங்கள் பயன்படுத்தப்படக்கூடும் “நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்,” “இன்னும் 24 மணி நேரம் தாங்குவாரான்னு தெரியலை, சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிடுங்க.” இதெல்லாம் ஒரு புறம் இருக்க மருத்துவத்துறை சார்ந்தவர்களிடம் பொதுமக்கள் பலமுறை பார்க்கநேர்வது போருமையின்மையும் ஈரமின்மையும்தான். ஒரு குடும்பம் பேரிழப்பை எதிர்கொண்டு, அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர்களுக்கு அறிமுகமில்லாத சூழலில் தத்தளித்துக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களுக்கு ஆறுதலாக அந்த இடத்தில் வல்லுநர்களான மருத்துவத்துறையினர் நிற்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பது நியாயம்தானே. அப்படி எங்காவாது நடந்தால்தான் அது அபூர்வமாக இன்று பார்க்கப்படும். மருத்துவத் துறை நண்பர்கள் அனைவரும் கல்நேஞ்சுடையவர்கள் என்று பொருளல்ல. இன்று அவர்களுடைய தொழிற்சூழல் அப்படி இருக்கிறது. தொழிற்சூழலை விடுங்கள். மருத்துவக் கல்வியில் எந்த நிலையிலும் ஒரு நோயாளியின் இழப்பிற்கோ குடும்பத்தின் இழப்பிற்கோ எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் என்று ஒரு மருத்துவனுக்கு பயிற்சி அளிக்கப் படுவதில்லை. எல்லாமே ‘பிராக்டீஸ்ல’ பழகிக்க வேண்டியதுதான்.

எனக்குத் தெரிந்து நம் நாட்டில் பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட மருத்துவத் துறையில் நோயின் தன்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் அதை எதிர் கொள்வதைப் பற்றியும் தயக்கம் இல்லாமல் நோயாளியிடமே பேசிவிடுவார்கள். அது பல உட்பிரிவுகளைக் கொண்ட ஆன்காலஜி எனப்படும் கேன்சர் சிகிச்சை துறை. மெடிக்கல் (மருத்துவம்), சர்ஜிகல் (அறுவை சிகிச்சை), ரேடியேஷன் (கதிர்வீச்சு சிகிச்சை) ஆன்காலஜி இவை மூன்று முக்கிய பிரிவுகள். இந்த முக்கிய பிரிவுகளில் நோயின் தன்மையைப் பற்றி சொல்லிவிட்டு அதற்கான சிகிச்சை எவ்வளவு தீவிரமாக இருக்கும் அதனால் வரும் விளைவுகள் என்ன என்று விளக்கமாக  சொல்லிவிடுவார்கள். சில குடும்பங்களில் வயதானவருக்கு கேன்சர் நோய்த்தாக்கம் இருக்கிறது என்று சொல்லாதீர்கள் மனமுடைந்து போவார்கள் என்று சொல்வார்கள். என் குடும்பத்தில் நடந்திரிருக்கிறது. இன்னும் பல குடும்பங்களில்  நடக்கிறது. எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஒருவர் திட மனநிலையில் இருக்கிறார் என்றால் அவருடைய உடலில் என்ன நடக்கிறது அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமையும் சிகிச்சை வேண்டுமா என்று முடிவெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. அதை அவருடைய குடும்பத்தார் “அவருடைய மனது புண்படக்கூடாது என்று” கைப்பற்றிக்கொள்வது சரியல்ல. 

ஆன்காலஜி துறையில் இன்னொரு முக்கியமான பிரிவு உண்டு. அது நம் நாட்டில் பிரபலம் அடையாத பேலியேடிவ் கேர் (palliative care) – நோய் தணிப்புப் பேணல். புற்றுநோய் பற்றியும் குறிப்பாக பேலியேடிவ் கேர் மற்றும் டெர்மினல் கேர் (terminal care) பற்றியும் விரிவாக எழுதவேண்டும்.

திசெம்பர் 23, 2012

மருத்துவத் துறையின் டைனசோர்கள் / டோடோக்கள்.

புவியிலிருந்து அழிந்து மறைந்த உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டாக அனேகமாக நம் அனைவருக்கும் தெரிந்திருப்பவை டைனசோர்கள் மற்றும் டோடோ பறவைகள். நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில், மருத்துவத் துறையில் டைனசோர், டோடோக்களைப் போல் அழிந்து மறைந்துவிட்ட மறைந்துகொண்டிருக்கும் உட்பிரிவு குடும்ப மருத்துவர்கள்.*

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?” இந்த வாக்கியத்தை இதைப் படிப்பவர்கள் அனைவரும் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

சுமார் இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது குடும்ப மருத்துவர்கள் என்ற டைனசோர்கள் உலவிக்கொண்டிருந்த காலத்தில், குடும்பத்தில் யாருக்கு என்ன நோய் ஏற்பட்டாலும் குடும்ப மருத்துவரிடம்தான் வைத்தியத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அவர் போடும் ஊசி, கொடுக்கும் அறிவுரை, மருந்துகளை மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டு, அவருடைய குறைந்தபட்ச கட்டணத்தையும் கட்டிவிட்டு வந்திருப்பார்கள். சற்று கடுமையான நோயாக இருந்தால், குடும்ப மருத்துவர் ‘பெரிய ஆசுபத்திரிக்குப் போய் பெரிய டாக்டரை பாருங்க,’ என்று பரிந்துரை செய்வார். வசதிக்கு ஏற்றபடி அவர் சொல்லும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருப்பார்கள்.

குடும்ப மருத்துவர் என்ற இனம் இருந்த காலகட்டத்தைக் கடந்து வந்த நம் பெற்றோரின் தலைமுறையைச் சார்ந்தோரும், இளம் வயதில் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்ட நம்மில் பலரும் நாம் பார்த்த குடும்ப மருத்துவர்கள் என்ன பட்டம் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்திருந்தோமா?

அந்தக் காலத்தில் மருத்துவரின் படிப்பு என்ன என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. ‘வெறும் MBBS’ படித்த மருத்துவர்களைப் போலவே பெரும்பாலான ‘MD, MS’ மேற்படிப்பு படித்த மருத்துவர்களும் பொதுவான மருத்துவச் சேவை (general practice) செய்தார்கள். மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்த பெரிய நகரங்களிலேயே இதுதான் நடந்தது. சிறு நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் குறைவான எண்ணிக்கையில் இருந்த மருத்துவர்கள் எல்லாவிதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்க்க வேண்டிய வலுக்கட்டாய நிலையில் இருந்தார்கள்.

நமது சமூகத்தின் சுகாதாரத் தேவைகளுக்கு பொருத்தமான மருத்துவர்களை தயாரிக்க வேண்டும் என்பது இளநிலை மருத்துவக் கல்வியின் (MBBS பட்டப் படிப்பின்) மிக முக்கியமான பணி. சமீப காலமாக (நான் சமீபம் என்று சொல்லுவது கடந்த  முப்பது ஆண்டுகளை) இந்த அடிப்படை நோக்கமே தோற்றுவிடும்படி இளநிலை மருத்துவக் கல்வி மாறி விட்டது.

MBBS படிப்பு முடித்து மருத்துவப் பணியை தொடங்கும் ஒரு இளம் மருத்துவர் மக்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களை சரியாகக் கண்டுபிடித்து தகுங்த சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதும், அவருடய நிலையில் சமாளிக்க முடியாத வியாதிகளை விரைவாக அடையாளம் கண்டு கொண்டு நோயாளிகளை தேர்ந்த வல்லுநரிடம் அல்லது பெரிய மருத்துவமனைக்கு தாமதமின்றி அனுப்புவார் என்பதும் நம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு. சமீப காலமாக இந்த அடிப்படை எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறதா என்பது கெள்விக்குறியாக உள்ளது.

பிரபல மருத்துவப் பதிவர் நண்பர் மரு.புருனோ சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் என்று ஒரு கட்டுறை எழுதியிருந்தார். அதிலிருந்து சில முக்கியமான விவரங்கள்:

எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”):

முதல் அடுக்கு – Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க.

இரண்டாவது அடுக்கு – Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க.

மூன்றாவது அடுக்கு – Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க.

இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம், தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன.

இது போல் அனைத்து நோய்களுக்கும் மூன்றடுக்கு மருத்துவநிலை உண்டு.

அதே போல் எந்த நோயை எடுத்துக்கொண்டாலும்,

அதிகம் தேவைப்படுவது முதல் அடுக்கு தான்.

குறைவான சமயமே இரண்டாவது அடுக்கு தேவைப்படும்.

மிக மிக குறைவான சமயமே மூன்றாவது அடுக்கு தேவைப்படும்.

இதில் சேர்க்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. அரிதான நோய்களை நாம் அதிகம் பார்ப்பது மூன்றாவது அடுக்கில்; அதாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தான்.

தீவிரமான, சிக்கல்களுள்ள, அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மூன்றாம் கட்ட வைத்திய மையங்களில் பயிற்சி பெற்று வெளியேறும் இளநிலை மருத்துவர்களுக்கு வழக்கமான எளிமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறமையோ மன உறுதியோ பல சமயங்களில் இருப்பதில்லை.

கவனிக்கவும்: நான் MBBS முடித்து வரும் மருத்துவர்களுக்கு வைத்தியம் தெரியவில்லை என்று சொல்லவில்லை. அவர்கள் சிரமப்பட்டு படித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை சரியான வைத்திய முறைகளாக செயலாக்கத் தெரிவதில்லை என்று சொல்லவந்தேன்.

கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் வியப்படவைக்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் பல உட்பிரிவுகள் தோன்றியிருக்கின்றன. இதனால்  மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு பொது மருத்துவம் (General Medicine), பொது அறுவை சிகிச்சை (General Surgery), மகப்பேறு, மகளிர் மருத்துவம் (Obstetrics & Gynaecology), குழந்தைகள் மருத்துவம் (Paediatrics) போன்ற அடிப்படைத்  துறைகளில் பயிற்சிக்காக இருக்கும் காலம் அவர்கள் அந்தத் துறைகளில் ஓரளவிற்காவது தேர்ச்சி பெற போதுமானதாக இருப்பதில்லை.

சமூகத்தில் அதிகம் தோன்றும் எளிமையான வழக்கமான நோய்களுக்குத் திறம்பட சிகிச்சை அளிக்கப் பயில்வதிலிருந்து மருத்துவப் புத்தகங்களில் உள்ள பாடங்களையும் கோட்பாடுகளையும் (medical theory) தெரிந்து கொள்வதே இளநிலை மருத்துவக் கல்வியின் நோக்கமாக மாறியிருக்கிறது. இப்படி மாறியிருக்கும் கல்வி அமைப்பில் ‘தேர்ச்சி’ பெற்று வரும் இளநிலை மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை முறைகளிலேயே அடி சறுக்குவதில் வியக்க ஒன்றும் இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன் என்ன வித்தியாசமாக இருந்தது?

அந்தக் காலத்தில் இளநிலை மருத்துவ மாணவர்கள் படித்த புத்தகங்கள் நிகழ்கால புத்தகங்களைவிட சற்றே குறைந்த எடையுடன் இருந்தன என்றாலும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறைவாகவெல்லாம் இல்லை. டைனசோர் காலத்தில் MBBS பட்டத்திற்கான இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டுக்கு பயிற்சி மருத்துவராக (house surgeon) பணியாற்றியபின் பெரும்பாலான மருத்துவர்கள் அரசு வேலையில் சேர்ந்தார்கள் அல்லது தனியாக பொது சேவை மருத்துவர்களாக (general practice) வேலையை தொடங்கினர். சிலர் மேலும் நடைமுறை அனுபவம் பெறுவதற்காக முதுநிலை பயிற்சி மருத்துவர்களாக (senior house surgeon) மேலும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வேலை செய்திருப்பார்கள். ஒரு சிலர் நடைமுறை அனுபவம் பெறுவதற்காக பெயர் பெற்ற, அனுபவம் மிக்க மருத்துவர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருப்பார்கள். இவ்வாறு நடைமுறை அனுபவம் தேடியவர்கள் பெரும்பாலும் சிறு நகரம் அல்லது கிராமப்புரங்களிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஊரில் சென்று தொழில் தொடங்கும்முன் எவ்வளவு பயின்றுகொள்ள முடியுமோ அவ்வளவு பயின்று செல்லலாம் என்ற எண்ணத்தில் செய்திருப்பார்கள்.

அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் செய்தார்கள் என்றால் இக்காலத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்?

இந்தக்காலத்தில் இறுதியாண்டு இளநிலைப் பட்டபடிப்பு முடிக்கும் முன்னே அடுத்ததாக எந்தச் சிறப்புத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று பெரும்பாலானோர் முடிவு செய்து விடுகிறார்கள். அவர்கள் விரும்பும் சிறப்புத்துறை முதுநிலை கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை இறுதியாண்டுத் தேர்வு முடிந்தவுடன் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் பயிற்சி மருத்துவராக இருக்கும் ஒரு வருடகாலத்தையும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் கழித்து விடுகிறார்கள். பயிற்சி மருத்துவராக இருக்கும் காலம் முடிவதற்குள் சிறப்புத் துறை முதுநிலை பட்டப்படிப்பில் சேர முடியாவிட்டால் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள் அல்லது வீட்டில் உட்கார்ந்து படிக்கிறார்கள். இளநிலை மருத்துவக் கல்வியை பயின்று முடித்தவுடன் படித்ததை சரியாக செயற்படுத்த நடைமுறை அனுபவம் பெரும் முயற்சியைவிட அவர்களுக்கு அடுத்த நிலை படிப்பில் நுழைய முற்படும் முயற்சியே முக்கியமாகிவிடுகிறது.

இன்றைய இளநிலை மருத்துவப் பட்டதாரிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த மருத்துவர்களைப்போல் படித்து முடித்தவுடன் தொழில் தொடங்காமல் ஏதாவது சிறப்புத் துறை நிபுணர் ஆகவேண்டும் என்று ஏன் ஆசைப் படுகிறார்கள் என்று பார்த்தால் அதற்கான முக்கிய காரணம் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்த வாக்கியம்.

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?”

பக்குவப்படுத்தாமல் விளக்கவேண்டும் என்றால்: நுகர்வோர் தேவைக்கு ஏற்ற பொருள் இருந்தால்தான் சந்தையில் விலை போகும்.

பொதுவாகவே நம் மக்களுக்கு மருத்துவம் பற்றிய அறிவு அதிகரித்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியுள்ள இன்றைய நிலையில் பல ஊடகங்கள் மூலமாக நோய்களைப் பற்றியும் மருத்துவத்தைப் பற்றியும் மேலும் அதிகமாக அறிந்துகொள்கிறார்கள். வயிற்று வலி வந்தால் குடலியல் நிபுணரைப் பார்க்கவேண்டும், தலைவலி அதிகமானால் நரம்பியல் நிபுணரிடம் காட்டவேண்டும் என்று மக்களே முடிவு செய்து அவர்களிடம் சென்று விடுகிறார்கள்.

சிறப்புத் துறை நிபுணர்கள் அதிகமானதால் மக்கள் அவர்களிடம் செல்கிறார்களா அல்லது மக்கள் தேவைக்காக நிபுணர்கள் உருவாக்கப் படுகிறார்களா என்பது கோழியா, முட்டையா எது முதலில் வந்தது ரகமான கேள்வி. கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ, இதனால் உருவாகியிருக்கும் நச்சுச் சூழல்தான் குடும்ப மருத்துவர் டைனசோர் இனத்தை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.

சிற்றூர்களில் கூட பல மருத்துவ சிறப்புத்துறை நிபுணர்கள் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இளநிலை மருத்துவப் பட்டத்தை வைத்துக்கொண்டு தனியாகத் தொழில் துவக்க இளம் மருத்துவர்கள் தயங்குவது நியாயம்தான். இளநிலைப் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களால் பெரிதாக ஒன்றும் சம்பாதித்துவிட முடியாது. அரசு வேலை கிடைத்தால்தான் ஓரளவாவது வெளியில் சொல்லும்படியான சம்பளம் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் MBBS மருத்துவர்களுக்கு கடைநிலை BPO ஊழியர்களுக்கு சமமாக சம்பளம் கிடைத்தாலே மேல்.

நண்பர் புருனோ பதிவில் கூறியிருப்பதுபோல் சமூகத்திற்கு அதிகம் தேவைப் படுவது முதல் அடுக்கு மருத்துவம்தான் (Primary Care). நோய்த் தடுப்பு மற்றும் துவக்க நிலை மருத்துவ சேவை புரிய இளநிலை பட்டம் பெற்ற மருத்துவர்களே போதும்.

அதாவது, நமக்கு அதிகம் தேவைப் படுபவர்கள் ‘வெறும் MBBS’ படித்த மருத்துவர்கள்தான். பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு ஏற்படும் வழக்கமான, எளிய நோய்களுக்கு வைத்தியத்திற்கு நாடிப் போகவேண்டியது ‘வெறும் MBBS’ மருத்துவர்களிடம்தான்.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?”

அந்த டைனசோர் காலத்தை இன்று திரும்பிப் பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். மருத்துவத் துறையில் இன்று காணும் இடமெல்லாம் பரவியிருக்கும் வணிகமயமாக்கல், கார்பரெட் கலாச்சாரம் அந்தக் காலத்தில் இல்லை. அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் இருந்தன, ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை தனியாக ஒரு மருத்துவர் கட்டி நடத்திய மருத்துவமனைகள், அல்லது சில மருத்துவர்கள் கூட்டாக துவக்கிய மருத்துவமனைகள்தான் (polyclinic). இவை தவிர சில ஊர்களில் தனியார் அறக்கட்டளைகள் கட்டிய மருத்துவமனைகள் இருந்தன. மருத்துவம் ஒரு தொழில் என்பதைவிட மேன்மையான சேவைத்துறை என்றே கருதப்பட்டது. பெரும்பான்மையாக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட மருத்துவர்களும் நல்ல சம்பாத்தியத்துடனும் வசதியுடனும் இருந்தார்கள். அப்படி இருந்த மருத்துவத்துறை சேவை நோக்கம் தொலைந்து பிற தொழில்களைப்போல் வணிகநோக்கத்தோடு இன்று மாறி இருக்கிறது. இந்த மாற்றத்தில் மேன்மையான சேவை நோக்கம் பலியானது மட்டுமில்லாமல் குடும்ப மருத்துவர் என்ற இனமும் மறைந்து ஒழிந்துவிட்டது.

மருத்துவத்தை மறுபடியும் புனிதமான சேவை ஆக்குவது என்பதெல்லாம் இனி நடக்கக் கூடியது அல்ல. நிலைமை இன்னும் மோசமாகாமல் போக திருத்த நடவடிக்கைதான் எடுக்க வேண்டும்.

இளநிலைப் பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளைக் கையாளத் தகுதியான செயல் திறன்களைப் பெற்றுள்ளார்கள் (skill sets, competencies) என்பதை வலியுறுத்தும் வகையில் மருத்துவக் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப் படவேண்டும்.

பொது மருத்துவம், அடிப்படை பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு-மகளிர் மருத்துவம், குழந்தைநல மருத்துவம் ஆகியவற்றில் போதுமான தேர்ச்சி ஏற்படுத்தும் குடும்ப நல மருத்துவ உயர்கல்வித்துறை (Family Medicine) வளர வேண்டும்.

அடிக்குறிப்பு:

நான் பல மாதங்களுக்கு முன் எழுதத் துவங்கி முடிக்காமல் வரைவோலைக் கோப்பில் (draft folder) கிடந்த இந்தப் பதிவை தூசி தட்டி எடுத்துப் பார்க்க வைத்தது செந்தில்நாதனின் (@4sn) ‘Family Doctors‘ என்ற பதிவு. அந்தப் பதிவில் செந்தில் குடும்ப மருத்துவர்களைப் பற்றி எழுதியிருந்ததை மையமாக வைத்து எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் பகிர்ந்திருக்கும் கருத்துகள் அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் மாணவனாகவும் மருத்துவனாகவும் நான் அனுபவித்து அறிந்துகொண்டதில் உருவானவை. சரியோ தவறோ இங்கே எழுதியிருப்பதற்கு நானே பொறுப்பு.

நவம்பர் 3, 2011

வாழ்வு.

Filed under: கதை,மருத்துவம்,Tamil — Vijay @ 11:41 பிப

வயது இருபத்துஒன்று.

கல்லூரி இறுதியாண்டு மாணவி.

பரீட்சை நேரம்.

சில நாளாக வயிற்று வலி.

பசியே இல்லை.

சாப்பிட்டால் உள்ளே இறங்குவதில்லை.

ஜெலுசில் குடித்தாலும் வலி குறையவில்லை.

பரீட்சை முடிந்து மருத்துவரிடம் ஆலோசனை.

அல்சராகத்தான் இருக்கும்.

வேணும்னா ஒரு என்டோஸ்கோபி பண்ணலாம்.

பண்ணியாச்சு.

சின்ன பிரச்சனை.

ஒரு சிடி ஸ்கான் பண்ணி பாத்துறலாமே.

பண்ணலாம்.

இரைக் குழாயும் இரைப்பையும் சேரும் இடத்தில் புற்றுநோய்.

நேரிக்கட்டிகளுக்கும் கல்லீரலுக்கும் பரவியிருக்கிறது.

பெற்றோரிடம் எப்படிச் சொல்லுவது?

சொல்லித்தான் ஆகவேண்டும்.

சொல்லியாயிற்று.

என்ன செய்யலாம்.

ஒன்னும் செய்ய முடியாது.

குணப் படுத்த வாய்ப்பேயில்லை.

மீறிப் போனால் மூன்று அல்லது நான்கு மாதம்.

சாகப் போகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும்.

செப்ரெம்பர் 28, 2011

இளம்பிள்ளைவாதம் (துடைத்தெடுத்தல் பாகம் 2)

பாகம் 1 இங்கே உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்று போலியோ நோயின் தமிழ் பெயரைக் கேட்டாலே அது சிறுவர்களைத் தாக்கும் நோய் என்பது தெரியும். போலியோ பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தாக்கும். மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்று நோய். பொதுச் சுகாதாரம் மோசமாக உள்ள இடங்களில், மனிதக்கழிவுகளினால் (மலத்தினால்) மாசடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்ளும்போது தொற்றுகிறது. உட்கொள்ளப்பட்ட தீநுண்மங்கள் குடல் சுவற்றை ஊடுருவி அருகில் உள்ள நிணநீர்க்கணுக்களில் (lymph nodes, பொதுவழக்கில் நெரிக்கட்டி என்று சொல்லுவோம்) குடி கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். வயிற்றுப்போக்கில் (மலத்தில்) மீண்டும் தீநுண்மங்கள் வெளியேறும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆடைகளிலும், அவர்கள் மலம் கழிக்கும் இடங்களிலும், அவர்களை குளிப்பாட்டும் இடங்களிலும் தீநுண்மம் அதிகம் பரவியிருக்கும். பொதுவெளியில் மலம் கழித்தால், அந்தப் பொதுவெளிகளிலுள்ள குடிநீர் வழங்கும் இடங்களிலும் பரவி மற்றவர்களைத் தாக்கும். போலியோ தீநுண்மம் வெளிப்புறத்தில் அறுபது நாள் வரை உயிருடன் இருக்கும்.

முதல் பாகத்தில் சொன்னதுபோல் போலியோ தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் 99 சதவீதக் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற எளிமையான விளைவுகள் மட்டுமே உண்டாகும். மீதமுள்ள ஒரு சதவீதக் குழந்தைகளில், போலியோ தீநுண்மங்கள் குடலுக்கு அருகில் உள்ள நிணநீர்கணுக்களிலிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து இயக்க நரம்பணுக்களைத் தாக்கும் (இயக்க நரம்பணுக்கள் என்பவை தண்டுவடத்திலும், மூளைத்தண்டிலும் காணப்படும் சிறப்பு அணுக்கள். இவை உடலில் தசைகளை இயக்கச் செய்யும். Motor neurons present in the spinal cord and brainstem). மூளைத்தண்டில் உள்ள இயக்க நரம்பணுக்கள் மூச்சு இயக்கம், உணவு விழுங்குதல் போன்ற மிக முக்கிய இயக்கங்களை கட்டுப்படுத்துபவை. இந்த அணுக்களை போலியோ தாக்கினால் உயிருக்கே ஆபத்து. இந்த வகையான போலியோ தாக்குதல் மிக மிக அரிது. போலியோ நோய்வாய்ப்படும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு தண்டுவடத்தில் உள்ள நரம்பணுக்களில்தான் தாக்கம் ஏற்படுகிறது. இந்த அணுக்கள் கைகள், கால்கள் மற்றும் வயிற்றில் உள்ள தசைகளை இயக்கும். போலியோ நோய்த் தாக்கத்தினால் இந்த நரம்பணுக்கள் அழிந்து, அவை இயக்கும் தசைகள் செயலிழந்து போகும். நோய்த் தாக்கத்தின் வீரியத்தைப் பொறுத்தும் பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்தும் ஒரு கால், அல்லது இரு கால்கள் மட்டும், அல்லது வயிற்று தசைகளும், கைகளும் சேர்ந்து செயலிழந்து போகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் போலியோ நோய் எதிர்ப்பை 1938-ம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் துவக்கி வைத்தார். அன்றைய நாளில் உலகத்தில் மிகப் பிரபலமான போலியோ நோயாளியான ரூஸ்வெல்ட் துவக்கி வைத்த மார்ச் ஆஃப் டைம்ஸ் நிறுவனம் (March of Dimes Foundation) போலியோ தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்தது.

அந்த நிறுவனத்திடமிருந்து ஆராய்ச்சி நிதி பெற்ற ஜோனாஸ் சால்க் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் 1955-ம் ஆண்டில் போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். கவனிக்க. அவர் கண்டுபிடித்தது தடுப்பூசி. இந்த ஊசி கொல்லப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.

ஜோனாஸ் சால்க்

நம் நாட்டில் கொடுக்கப் படும் போலியோ சொட்டு மருந்தை 1960-ம் ஆண்டில் ஆல்பர்ட் சாபின் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் கண்டுபிடித்தார். இந்தச் சொட்டு மருந்து உயிருடன் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.

ஆல்பர்ட் சாபின்

அமெரிக்காவில் சால்க் தடுப்பூசி மட்டும் தான் போடுகிறார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டிய கால அட்டவணை: குழந்தையின் வயது இரண்டு மாதம் ஆகும்பொழுது முதல் முறை, நான்கு மாதத்தில் இரண்டாம் முறை, ஆறு மாதத்திலிருந்து ஒன்றரை வயதிற்குள் மூன்றாம் முறை. நான்கிலிருந்து ஆறு வயதிற்குள் ஒரு உயரூட்ட ஊசி (booster dose).

நம் நாட்டில் சாபின் சொட்டு மருந்து கொடுக்கப்படும் கால அட்டவணை: குழந்தை பிறந்து ஒரிரு நாளில் முதல் முறை (இதற்கு Zero dose என்று பெயர்); ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களில் மூன்று முறை (டிபிடி/DPT தடுப்பூசிகளுடன் சேர்த்து); ஒன்றரை வயதிலும் ஐந்து வயதிலும் ஒவ்வொரு முறை. இது தவிர குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை அறிவிக்கப் படும் ஒவ்வொரு பல்ஸ் போலியோ நாளிலும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

பல்ஸ் போலியோ போன்ற நிகழ்வுகளில் ஒரே நாளில் லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்க சொட்டு மருந்துதான் வசதியாக உள்ளது. சொட்டு மருந்தில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. சொட்டு மருந்தில் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்கள், நோய் பரவும் அதே வழியில், அதாவது மனிதக்கழிவுகளால் மாசடைந்த நீர் மற்றும் உணவின் மூலம் சொட்டு மருந்து வழங்கப் படாத குழந்தைகளுக்கும் பரவி, அவர்களின் உடலிலும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.

துவக்கத்தில் தடுப்பூசிக்குக் கிடைத்த ஆதரவு சொட்டு மருந்துக்குக் கிடைக்கவில்லை. மேலே கூறிய இரண்டு ஆதாயங்களை முன்னிட்டு சொட்டு மருந்து உபயோகம் அதிகரித்தது. 1962-ம் ஆண்டில் ஆரம்பித்து அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களிலிருந்து போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. அமெரிக்க கண்டங்களில் கடைசியாக போலியோ நோய் 1991-ம் ஆண்டில் பெரு நாட்டில் ஒரு சிறுவனைத் தாக்கியது.

பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் போலியோ நோய்த் தாக்கம் குறைந்துள்ளது என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தது. இந்த வெற்றிகள் கொடுத்த உந்துதலில், உலகம் முழுவதும் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி உலக சுகாதார அமைப்பால் 1988-ம் ஆண்டு துவக்கப் பட்டது. அதே வருடம் சர்வதேச ரோட்டரி அமைப்பு இந்த முயற்சிக்காக இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர் கொடுப்பதாக உறுதி அளித்தது. (இதுவரை ரோட்டரி அமைப்பு போலியோ ஒழிப்புக்காக, ரோட்டரி போலியோ பிளஸ் நிதி என்ற பெயரில் எழுபது கோடி அமெரிக்க டாலர் கொடுத்திருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபௌண்டேஷன் மூலமாக முப்பத்தைந்து கோடி அமெரிக்க டாலர் வழங்கியிருக்கிறார்). UNICEF அமைப்பு உலகளவில் தேவைப்படும் சொட்டு மருந்தை தயாரித்து, பட்டுவாடா செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இது தவிர அமெரிக்க அரசும் தன் பங்கிற்கு நிதி உதவி அளித்தும், போலியோ ஒழிப்பை அதனுடைய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention) முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவித்தது.

இந்தக் கூட்டு முயற்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. 1988-ம் ஆண்டில் மூன்றரை லட்சம் பேரைத் தாக்கிய போலியோ நோய், பதினைந்து ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களைத்தான் தாக்கியது. 2003-ம் ஆண்டில் உலகத்தில் ஆறு நாடுகளில் – நைஜீரியா, நைஜர், எகிப்து, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா – மட்டும்தான் போலியோ உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டு முயற்சியில் ஒரு முக்கிய அங்கம், போலியோ நோய்த் தாக்கம் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் தேசிய நோய்த் தடுப்பேற்ற நாள்கள் (பல்ஸ் போலியோ நாள்கள்). அந்த நாடுகளில் குழந்தைகளுக்கு ஐந்து வயது வறை கால அட்டவணைப் படி கொடுக்கப் படும் தடுப்பு மருந்து போக கூடுதலாக வருடம் இரு முறையாவது இந்த பல்ஸ் போலியோ நாள்களிலும் கொடுக்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டு. உலக சுகாதார அமைப்புக்கு இதையேல்லாம் செய்ய தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. இந்த அமைப்பின் கிளைகள் ஒவ்வொரு நாட்டின் அரசு விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுதான் செயல்புரியவேண்டும். சொட்டு மருந்து தயாரிப்பு, பட்டுவாடா, மருந்து கொடுக்க ஆள் பலம் சேர்ப்பது, இவை எதையுமே இந்த அமைப்பு செய்வதில்லை. உலக சுகாதார அமைப்பின் நம் நாட்டுக் கிளையில் சுமார் இருநூற்றைம்பது மருத்துவர்கள் போலியோ நோய் கண்காணிப்பிற்காக வேலை செய்கிறார்கள். இந்த அமைப்புக்கு ஆள் பலம் குறைவாக இருந்தாலும், தகவல் வளமும், நிபுணத்துவமும் கணிசமாக உள்ளன.

(மேலும் ஒரு பாகம் வரலாம்…)

செப்ரெம்பர் 26, 2011

துடைத்தெடுத்தல் – 1

உலகளவில் போலியோ (இளம்பிள்ளைவாத) நோயை அடியோடு நீக்கும் திட்டத்தின் (Polio Eradication Programme) கீழ் நம் நாட்டில் 2003-ல் நடந்த துடைத்தெடுத்தல் (mop-up) நிகழ்வைப் பற்றி அதுல் கவாண்டே ந்யூ யார்க்கர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அவர் எழுதிய “பெட்டர்” (Better) புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் வெளியானது. அந்த சுவாரசியம் மிக்க விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் முப்பது ஆண்டுகளாக போலியோ நோயை உலகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகிவிடும். ஆனால் ஒரு நோயை உலகத்திலிருந்து அடியோடு ஒழிப்பது என்பது சாதாரனமான விஷயம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெறப் பெறப் பல நோய்களை அடியோடு நீக்க முயற்சி செய்திருக்கிறார்கள், அவற்றில் சில: கொக்கிப் புழு நோய் (Hook Worm), மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever), பறங்கி நோய் (Yaws, ஒரு வகையான சருமத் தொற்றுநோய்), மலேரியா (Malaria). இவற்றில் சில நோய்களின் பரவுதலைக் கட்டுப் படுத்த முடிந்தது ஆனால் ஒன்றைக் கூட அடியோடு ஒழிக்க முடியவில்லை. சொல்லப் போனால், மலேரியா மேலும் அதிகமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.  சுமார் நூறு ஆண்டுகள் முயற்சி செய்து பெரியம்மை (Small Pox) நோயை மட்டும்தான் நம்மால் ஒழிக்க முடிந்திருக்கிறது. 1979-ல் பெரியம்மை நோயை உலகத்திலிருந்து அடியோடு நீக்கியது பெரும் சாதனைதான். ஆனால் அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போலியோ நோயை ஒழிப்பது பலமடங்கு கடினமான விஷயம்.

பெரியம்மை தாக்குதலின் போது வரும் கொப்புளங்களை வைத்து நோயை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஒருவருக்கு பெரியம்மை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நோய் ஒழிப்புக் குழு நோயாளி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நோய் தொற்றாமல் இருக்கத் தடுப்பூசி போடுவார்கள். இந்த மாதிரியான வளையத் தடுப்புமருந்தேற்ற (ring immunization) முறையைப் பயன்படுத்தி பெரியம்மை நோய் பரவாமல் தடுக்கவும், அடியோடு ஒழிக்கவும் முடிந்தது.

போலியோ தொற்றுநோய் தாக்கியிருப்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. போலியோ தீநுண்மத் தாக்குதலுக்குள்ளாகும் (Polio virus infection) பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அறிகுறியும் தென்படாது. ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற எளிமையான அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு தீநுண்மத் தாக்குதலுக்கான அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். சுமாராக ஆயிரம் பேரை போலியோ தீநுண்மம் தாக்கினால், ஒன்றிலிருந்து நான்கு பேருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம்.

தாக்குதலுக்குள்ளாகி எளிமையான அறிகுறைகளை மட்டுமே வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையினரின் உடற்கழிவுகளிலிருந்து தீநுண்மம் சில வாரங்களுக்கு பரவும். இதனால் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு புதிதாக தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

போலியோ நோயைக் கண்டுபிடிப்பதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி எல்லாவற்றிற்கும் போலியோ நோய் காரணி அல்ல. ஆனால் சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும். இது சட்டம். இதற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தில் போலியோ தீநுண்மன் உள்ளதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அது போலியோ நோய்தான் என்று பரிசோதனை முடிவு வருவதற்குள் மேலும் பல நூறு பேருக்கு நோய் பரவும் அபாயத்தைத் தடுக்க இயலாமல் போகலாம்.

இப்படித் தாமதமாகத் தெரியவந்த போலியோ நோயை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பெரியம்மைத் தடுப்பை விட அதிகமான பரப்பளவில், சுற்றுப்புறத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பாதுகாக்கும்படியான முயற்சியை மேற்கொள்ள வெண்டும். இதை மந்தைத் தடுப்பு மருந்தேற்றம் (ஆங்கிலத்தில் herd immunization) என்று சொல்லுவார்கள். பெரியம்மை வராமல் தடுப்பதற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதும். ஆனால் போலியோ நோயைத் தடுக்க சொட்டு மருந்து பயன்படுத்தப் படுவதால், ஒரு முறை கொடுத்தால் போதாது. முதல் முறை சொட்டு மருந்து கொடுத்த நாளிலிருந்து நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இன்னொரு முறை கொடுக்க வேண்டும். சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரியம்மை நோயைத் தடுப்பது மெழுகுவர்த்தியை அணைப்பது போன்ற சுலபமான வேலை என்றால் போலியோ நோயைத் தடுப்பது காட்டுத்தீயை அணைப்பது போன்ற கடினமான வேலை.

உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி இவ்வளவு இடையூறுகளையும் மீறி பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை கொடுக்கப்படும் போலியோ நோய் தடுப்புச் சொட்டு மருந்து மூலமாகவும், மற்றும் சில மேலை நாடுகளில் கொடுக்கப்படும் போலியோ நோய்த் தடுப்பூசி மூலமாகவும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் போலியோ நோய் பரவுதல் கனிசமாகக் குறைக்கப் பட்டிருக்கின்றது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் மற்றும் மேற்கு பசிபிக் வட்டாரத்தில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப் பட்டுவிட்டது. 2001-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் மட்டும் 498 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது.

2001-லிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துவிடலாமென்று எண்ணும் நேரத்தில் ஆசியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ ஏதோ ஒரு நாட்டில் திடீரென்று போலியோ நோய் கிளர்ந்திருக்கிறது (outbreak). 2002-ம் ஆண்டில் வட இந்தியாவில் 1600 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது. அந்த வருடத்தில் உலகெங்கும் ஏற்பட்ட போலியோ நோய்த் தாக்குதலில் இது எண்பது சதவீதம் ஆகும். அன்றைய நிலைப்படி, இந்தியாவில் சில வட மாநிலங்களில் மட்டுமே போலியோ இன்னும் உள்ளது என்றே நம்பினோம்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சிறு பையனுக்கு போலியோ நோய் வந்தது. இதுவே மூன்று வருடங்களில் தென் இந்தியாவில் தோன்றிய முதல் போலியோ நோய்த் தாக்கம். ஒன்றிலிருந்து மேலும் பலருக்குப் போலியோ நோய் பரவினால், தென் இந்தியாவில் போலியோ ஒழிப்புப் போராட்டம் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

துடைத்தெடுத்தல் – ஆங்கிலத்தில் “mop-​up” – என்பது புதிதாகத் தோன்றியுள்ள போலியோ நோய் உள்ள குழந்தையைச் சுற்றியுள்ள, பாதிக்கப் படக்கூடிய எல்லா சிறுவர்களுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் போர்த்தொடர் போன்ற நடவடிக்கையை குறிக்கும் சொல்.

போலியோ போன்ற தொற்றுநோய் முதன்மையாகத் தோன்றும் நபர்களை “இண்டெக்ஸ் கேஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் (index case. என்னுடைய தமிழாக்கம் ‘முதன்மை நிகழ்வு’). 2003-ம் ஆண்டில் தென் இந்தியா கண்ட முதன்மை போலியோ நிகழ்வு, கர்நாடகத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள உப்பரஹல்லா என்ற குடிநீர் வசதி, மின் இணைப்பு இல்லாத மேம்படாத கிராமத்தில் நிகழ்ந்தது.

போலியோ நோய்வாய்ப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள். தாய்க்குப் படிப்பறிவு இல்லை. தந்தைக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும். மூன்று குழந்தைகளுடன் ஒற்றை அரை ஓலைக் குடிசை வீட்டில் வசிப்பவர்கள். குடிசைவாசிகள்தான் என்றாலும் மூன்று குழந்தைகளும் நல்ல போஷாக்குடன் இருந்தார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தக் குடும்பம் வட கர்நாடகத்தில் உறவினர்களை சந்திக்க பயணம் செய்தார்கள். ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்த சில நாள்களில், மே மாதம் ஒன்றாம் தேதி, அந்தச் சிறுவனுக்கு பலத்த காய்ச்சலும் வாந்தியும் வந்தது. பெற்றோர்கள் அவனை அருகில் இருந்த சிறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர் அவனுக்கு அண்டிபயாடிக் (நோய்க்கிருமிக் கட்டுப்படுத்தி) ஊசி ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தார்.

இரண்டு நாளில் காய்ச்சல் குறைந்து விட்டது, ஆனால் சிறுவனின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. பதறிப்போன பெற்றோர், சிறுவனை மீண்டும் அந்த சிறு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் உடனடியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான பெல்லாரியில் உள்ள அரசினர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். நேரம் போகப் போக காலில் மட்டும் இருந்த தசைத் தளர்ச்சி உடல் முழுவதும் பரவியது. சிறுவன் அசைவில்லாமல் மூச்சுத்திணரலுடன் படுக்கையில் கிடந்தான்.

சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும் என்பது சட்டம் என்று முன்னரே எழுதியிருந்தேன். அதன் படி மாவட்ட மருத்துவமனையிலுள்ள மருத்துவர் ஒருவர் கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரிக்கு (WHO Surveilance Medical Officer) தொலைபேசியில் தகவல் சொன்னார். அதே மருத்துவர் சிறுவனின் மலத்தில் போலியோ தீநுண்மம் உள்ளதா என்று பரிசோதிக்க மும்பையில் உள்ள சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினார்.

இது உறுதியாக போலியோதான் என்று ஆய்வு முடிவு ஜூன் 24-ம் தேதி வந்து சேர்ந்தது. புது தில்லி உலக சுகாதார அமைப்பு அலுவலகத்திலுள்ள தொழில்நுட்ப அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தென் இந்தியாவிலிருந்து ஒழிக்கப் பட்டுவிட்டதாகக் கருதிய போலியோ நோய் திடீரென்று மறுபடியும் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில் – ஜூன் 25-ம் தேதிக்குள் – அந்தத் தொழில்நுட்ப அதிகாரி, அவர் ஒரு மருத்துவர், பெயர் சுனில் பால், உலக சுகாதார அமைப்பு (WHO), UNICEF அமைப்பு மற்றும் இந்திய அரசில் பல முக்கிய புள்ளிகளுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டார். அவர்தான் இந்த விஷயத்தை மதிப்பிட்டு முதல் அறிக்கை கொடுக்க வேண்டியவர். அவருடைய அறிக்கையில், இப்பொழுது போலியோ கர்நாடகாவில் தோன்றியிருக்கும் வட்டாரம் சுகாதாரத் துறையில், முக்கியமாக நோய்த் தடுப்பெற்ற விஷயத்தில் மிக மோசமான வரலாறு உடையது என்றும், இதற்குமுன் நடத்தப் பட்ட போலியோ தடுப்பு நிகழ்வுகளில் அதிகம் போலியோ பாதிப்பு உடையதாக கண்டறியப்பட்ட இடம் என்றும், உடனடியாக விரிவான துடைத்தெடுத்தல் செய்யவில்லை என்றால் இங்கே போலியோ வேகமாகப் பரவும் அபாயம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் நடத்தப்படும் துடைத்தெடுத்தல் என்பது ஏற்கனவே போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நம்பியிருந்த இடத்தில் புதிதாகத் தோன்றும் பொழுது நடத்தப்படும் தீவிர போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு. இது ஒரு போர்க்கால நடவடிக்கை போல் திட்டமிட்டு செயல் படுத்தப்படும். “துடைத்தெடுத்தல்” நிகழ்வுகள் மூன்றே நாள்களில் முடியும்படி திட்டமிட்டு நடத்தப்படும். அந்த மூன்று நாள்களில், அந்த வட்டாரத்தில் போலியோ நோயால் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபாயத்தில் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.

பொதுவாக போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வுகளில், பல்ஸ் போலியோ என்று நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில் அரசு சார்பாக அறிவிப்புகள் வருமே, அவைகளில் குறிப்பிட்ட நாள் அன்று ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய நம் குழந்தைகளை நாம் இருக்கும் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இடத்திற்கு (ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பள்ளி, போன்ற இடத்திற்கு) அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்துக் கூட்டி வரவேண்டும். ஆனால் துடைத்தெடுத்தல் நிகழ்வு அப்படியானதல்ல. மருத்துவக் குழுக்கள் பாதிக்கப் பட்ட இடங்களில் வீடு வீடாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

துடைத்தெடுத்தல் நடத்தப்பட வேண்டிய வட்டாரத்தின் வரைபடம் ஒன்றை இணைத்திருந்தார் சுனில் பால். அது சுமார் ஐம்பதாயிரம் சதுர மைல் பரப்பளவு. கோடைகால மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் துடைத்தெடுத்தலின் முதல் சுற்று சொட்டு மருந்து விநியோகத்திற்கு ஜூலை 27-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது. அடுத்த சுற்று அதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து நடக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இந்திய போலியோ கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி ப்ரையன் வீலர் என்ற அமெரிக்கர் இந்தத் துடைத்தெடுத்தலின் நடைமுறை விவரங்களை அதுல் கவாண்டேவிற்கு விளக்கினார். அவர் சொன்னது: இந்திய அரசு இந்த நிகழ்விற்காக ஆட்களை தேர்வு செய்து மருத்துவக் குழுக்களை அமைக்கவேண்டும், போதுமான அளவு தன்னார்வத் தொண்டர்களையும் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து சரியாகக் கொடுக்கும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். சொட்டு மருந்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிர் சாதனப் பெட்டிகளும், போதுமான வாகன வசதிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவ்வளவு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கில் 90 சதவீதத்திற்கு மேலாகக் கொடுக்கப்பட்டால்தான் துடைத்தெடுத்தல் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது, அதாவது போலியோ நோய் மேலும் பரவாமல் தடுக்கப் படும். கொடுக்கப் படவேண்டிய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப் பட்டால் மொத்த நிகழ்ச்சியும் தோல்வியுற்றது என்றே கருதப்படும்.

இவ்வளவையும் செய்ய எவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்று வீலரிடம் கவாண்டே கேட்டார். வீலரின் பதில், “திட்டப்படி சொட்டு மருந்து கொடுக்கும் வேலைக்கு முப்பத்தி ஏழாயிரம் பேர், அவர்களுக்கு நான்காயிரம் மேற்பார்வையாளர்கள், இரண்டாயிரம் வண்டிகள், பதினெட்டாயிரம் குளிர்சாதனப் பேட்டிகள் தேவைப்படும். மருந்து கொடுப்பவர்கள் வீடு வீடாகச் சென்று நாற்பத்தியிரண்டு லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டவேண்டும்.

அதுவும் மூன்றே நாள்களில்.

தொடரும்…

ஓகஸ்ட் 21, 2011

ரேடியாலஜி உயர் மருத்துவக் கல்விக்கு நுழைவு நன்கொடை

மூன்று நாளுக்கு முன் ட்விட்டரில் “மகாராஷ்டிரத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ரேடியாலஜி (நுண்கதிர் இயக்க மருத்துவம், எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்டு, சிடி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் பற்றிய மருத்துவத்துறை) மேற்படிப்புப் படிக்க இடம் (சீட்) ஒன்றுக்கு ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் நுழைவு நன்கொடை வாங்கியுள்ளார்கள்.” என்று ஒரு செய்திச் சுட்டி கொடுத்தார் நண்பர் அலெக்ஸ் பாண்டியன்.

அதைப் பார்த்த நண்பர் முரளி, “நம்ம ஊரு ரேட் என்ன சார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நம்மூரில் கல்லூரியைப் பொறுத்து 80 இலட்சத்திலிருந்து 2 கோடி வரை ஆகிறது,” என்று பதில் சொன்னேன்.

என் பதிலைப் பார்த்த பின் நண்பர்கள் முரளியும்  கோகுலும், படிப்பதற்குக் கொடுத்த பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்டார்கள். இது ஒரு இக்கட்டான கேள்வி என்று எண்ணி ட்விட்டரில் தனிச் செய்தியில் (டி.எம்.) கேட்டார் நண்பர் முரளி. இதில் இக்கட்டெல்லாம் ஒன்றும் இல்லை, பொதுவெளியில் பேசப்படவேண்டிய விஷயம்தான், நான் பதிவில் விரிவாக எழுதுகிறேன் என்று சொன்னேன்.

தனியார் மருத்துவ மேற்படிப்புகளில் ரேடியாலஜிக்குத்தான் அதிகம் நுழைவு நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்றும், சில கல்லூரிகளில், சில வருடங்களாகவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப் படுகிறது என்பதும் மருத்துவத் துறையில் பரவலாக அறிந்த விஷயம்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்த விஷயத்தை மையமாக வைத்து இந்திய ரேடியாலஜி சங்கத்தின் ஆய்விதழில் “The business of radiology” என்ற தலையங்கம் வெளியானது (இங்கே ஆங்கிலத்தில் படிக்கலாம்). அந்தத் தலையங்கத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களையும், அது வெளியானபின் வந்த வாசகர் கடிதங்களிலிருந்த கருத்துக்களையும் இங்கே என் கருத்துக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மருத்துவ இளநிலை மற்றும் உயர்நிலை பட்டப் படிப்பிற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் தொகைகள் நுழைவு நன்கொடை (கேபிடேஷன் ஃபீஸ்) ஆகப் பெறப் -பிடுங்கப்- படுவது பரவலாகத் தெரிந்த விஷயம்தான். இந்தப் பழக்கத்தின் நியாய-அநியாயத்தை நான் இங்கே விவாதிக்க விரும்பவில்லை. பரவலாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு மற்றவையை கவனிப்போம்.

எண்பது இலட்சத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுத்து படிக்கும் ரேடியாலஜி மருத்துவ மேற்படிப்பில் வருமானம் எவ்வளவு வரும் என்பதை முதலில் பார்ப்போம்.

ரேடியாலஜி பற்றி மேலோட்டமாகத் தெரிந்தவர்களுக்கு – இதில் ரேடியாலஜி நிபுணர்கள் அல்லாத மருத்துவர்களும் அடக்கம் – இந்தத் துறையில், சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் எல்லாம் வைத்திருந்தால் ஏனைய மருத்துவத் தனித்துறைகளை விட வருமானம் அதிகம் வரும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது.

சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரமெல்லாம் போட்டுத் தனியாக தொழில் தொடங்க முதலீடு அதிகம் தேவை. சில கோடி ரூபாய் முதலை, நாமே போடாவிட்டாலும், வங்கியில் பெரிதாகக் கடன் வாங்க வேண்டும். பெரிய முதலீடு செய்து ஆரம்பிக்கும் தனி ரேடியாலஜி தொழிலில் குறைந்த காலத்தில் இலாபம் பார்க்க முடியாது. முதலீட்டுக் கடன் தொகையைத் திருப்பித் தருவது மட்டுமல்லாமல், ஈட்டுறுதிக் காலம் (warranty period) முடிந்தபின் வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு (annual maintenance contract) பல இலட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும். தொழில் நன்றாக நடந்தால் நீண்ட – சுமார் ஐந்திலிருந்து ஏழு வருட – காலகட்டத்தில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் இலாபம் வரும் வாய்ப்பு உள்ளது (10 – 15% return on investment). அதாவது பங்குச் சந்தையில் இணையுதவி நிதிகளில் (index mutual funds) வரும் இலாப அளவுதான் நன்றாக நடக்கும் ரேடியாலஜி தனித் தொழிலிலும் வரும்.

இது நன்றாக நடக்கும் ரேடியாலஜி தொழிலில் வரும் இலாபக் கணக்கு என்று இரண்டு முறை நான் சொல்லிவிட்டதை கவனிக்கவேண்டும். குறிப்பிட்டு இதை நான் சொல்லுவதன் நோக்கம், இந்தத் தொழிலில் நுழையும் அனைவரும் இலாபம் பெறுவதில்லை என்பதை எடுத்துக் காட்டத்தான். இந்தத் தொழிலில் போட்டி அதிகம். பல தனியார் ரேடியாலஜி மையங்களில் முதலீடுக்கடனைத் திருப்பிச்செலுத்தவும், அன்றாட மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடு செய்யும் அளவிற்குத்தான் வருமானம் வருகிறது என்பதே உண்மை. பல தனியார் ரேடியாலஜி மையங்களில் வாங்கிய இயந்திரங்களுக்கு மதிப்பிறக்கம் (depreciation) செய்வதால் மட்டுமே கணக்கில் இலாபம் காட்ட முடிகிறது.

மேலே பார்த்தது தொழில்முனைவோராக உள்ள மருத்துவர்களின் கதை. சொந்தத் தொழிலாக முதலீடு செய்யாமல் சம்பளத்திற்கு இருக்கும் ரேடியாலஜி நிபுணர்களின் வருமானம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் பார்ப்போம். சுமார் எண்பது சதவிகித (80%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு அவர்கள் வேலையில் இருக்கும் மருத்துவமனை அல்லது ஸ்கான் மையத்தையும், ஊரையும் பொறுத்து ஒரு இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் வரை மாத வருமானம் வர வாய்ப்பு உள்ளது. இது சராசரியாக தனியார் துறையில் மற்ற மருத்துவ தனித்துறை நிபுணர்கள் சம்பாத்தியத்திற்கு ஈடாகத்தான் உள்ளது. மீதம் உள்ள இருபது சதவிகித (20%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு, அவர்களின் தனித் திறமை, அனுபவம், வேலை செய்யும் இடம், இவற்றைப் பொறுத்து இதை விட அதிக வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வளவு நுழைவு நன்கொடை கொடுத்து ரேடியாலஜி மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களை இரண்டு வகைப் படுத்தலாம்.  மேலே குறிப்பிட்ட படி இந்தத் தொழிலில் வரும் வருமானத்தைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாதவர்கள் ஒரு சாரர். இன்னொரு சாரர் பெரும்பாலும் ரேடியாலஜி நிபுணர்களின் அல்லது பெரிய மருத்துவமனை / ஸ்கான் மையங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகள். இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் இந்தப் பெரும் தொகை கொடுப்பது தொழில் முதலீட்டுக்கு ஈடாகும்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நுழைவு நன்கொடையாகக் கொடுத்து ரேடியாலஜி பட்டம் வாங்கிவிட்டு, போட்ட முதலீட்டிற்குத் தக்க இலாபத்துடன் சம்பாதிப்பது எளிதல்ல. இதை பொதுமக்களும், ரேடியாலஜி படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளநிலை மருத்துவப் பட்டதாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த குட்டி விவாதம் ட்விட்டரில் நடந்து கொண்டிருந்த பொழுது “ஏன் ரேடியாலஜியை முன்வைத்து கேட்கிறார்கள் (தாக்குகிறார்கள்)” என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு பதில்: இப்பொழுது உள்ள மருத்துவ மேற்படிப்பு நுழைவு நன்கொடைகளில் அதிகமாக உள்ளது ரேடியாலஜிக்கே. அதனால்தான் இத்துறையைச் சார்ந்தவர்கள் முன்வைக்கப்படுகிறது. ரேடியாலஜிக்கு கோரப்படும் தொகைக்கு ஓரளவு ஒப்பிடக்கூடிய அளவில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும்கூடப் பெறப்படுகிறது.

இது முழுமையான விவாதம் அல்ல. இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுதியுள்ளேன். நியாயமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள். பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

[எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்திய சொக்கன், இலவசக்கொத்தனார் இருவருக்கும் நன்றி.]

அடுத்த பக்கம் »