…நிழல்கள்…

ஜனவரி 17, 2010

தாய் நாடு திரும்பும் மருத்துவ நண்பர்கள் – பாகம் 1

குறிப்பு: மருத்துவத் துறையில் என் அனுபவங்களும் துறையை பற்றி எனக்கு தெரிந்த, தோன்றும் சில விஷயங்களை சிறு பதிவுகளாக இடும் முயற்சியில் இது முதல் பதிவு. இதில் வருபவை என்னுடைய சொந்த அபிப்ராயங்களே. பலருக்கு மாற்று கருத்துகள் அல்லது சந்தேகங்கள் இருக்கலாம். பின்னூட்டத்தில் கேள்வி கேட்டால் விடை கொடுக்க முயற்ச்சிக்கிறேன்.

நான் முன்பு வேலை செய்த மருத்துவமனையின் பிரபலமான தலைவர் அடிக்கடி சொல்லுவார் NRI என்றால் Non-Returning Indians என்று. அதாவது நாடு திரும்பாத இந்தியர்கள். அதில் உண்மை இருக்கிறதா இல்லையா, எதனால் அப்படி என்ற சர்ச்சையில் சிக்க நான் விரும்பவில்லை. இந்த பதிவு அந்தக் கருத்தை தழுவிய வேறு விஷயத்தைப் பற்றி.

கடந்த சில வருடங்களாக என்னுடைய மருத்துவ நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சரகத்தில், இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புவோர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இரண்டு வருடங்களில் சுமார் பத்து பேர் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இங்கிலாந்து சென்று மேல் படிப்பு படித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவத் தொழில் செய்வது பல வருடங்களாக நடப்பதுதானே, இதில் என்ன புதுசுன்னு படிப்பவர்கள் நினைக்கலாம். இதில் ஓரளவு உண்மை இருக்கு. ஆனால் இப்ப திரும்பி வந்த சில நண்பர்களுடன் பேசியதில் சில புது காரணங்களை தெரிந்து கொண்டேன். அந்த காரணங்களை பார்க்கும் முன் மருத்துவர்கள் வெளி நாடுகள் செல்வது பற்றி ஒரு சின்ன அலசல்.

நான் மேலே சொன்னது போல், தமிழகத்திலிருந்து வெளி நாடுகளுக்கு மருத்துவர்கள் செல்வதொன்றும் புதுசு இல்லை. இந்தியா சுதந்திர நாடு ஆவதற்கு முன்பிருந்தே இங்கிருந்து மேலை நாடுகளுக்கு மருத்துவர்கள் மேல் படிப்பு மற்றும் வேலை தேடி சென்றிருக்கிறார்கள். பல வருஷங்களா வெளி நாடு சென்ற மருத்துவர்களை தேதிவரை (dateline) படி 1970-க்கு முன் சென்றவர்கள், எழுபதுக்களுக்கு பின் சென்றவர்கள் என்று இரண்டாக பிரிக்கலாம். எழுபதுக்களுக்கு முன் சென்றவர்கள் பெரும்பாலும் மேற்கே இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா சென்றார்கள். சிலர் கிழக்கே ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து மற்றும் சிங்கபூருக்கு சென்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளி நாடு சென்றது அங்கேயே குடியேறும் நோக்கத்தில்தான். அப்படி குடியேறியவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வாழ்க்கை முறை ஏற்படுத்திக்கொண்டு செழிப்பாக இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

எழுபதுக்களுக்கு பின் அதுவும் குறிப்பாக எண்பதுகளுக்கு மேல் இங்கிருந்து சென்ற மருத்துவர்களுக்கு கனடா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுவது பெரும் கஷ்டமாகியது. ஓரளவு எளிதில் செல்லக் கூடிய நாடுகள் அமேரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து. இந்த நாடுகளுக்கு செல்லவும் கெடுபிடிகள் ஜாஸ்தியாயின. இங்கிருந்து போனதும் வேலை கிடைக்காது. அந்த நாட்டில் மருத்துவ வேலையில் சேர்வதற்கு முன் அனுமதி தேர்வில் (Licensing exams: USMLE for USA, PLAB for UK & Ireland) தேர்ச்சி பெற வேண்டும்.

அமெரிக்காவை பொறுத்த வரையில், USMLE அனுமதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் ஏதாவது மருத்துவ பிரிவில் (specialty) தேர்ச்சிபெற ரெசிடென்சி ப்ரோக்ராம் (Residency Program – நம்ம ஊர் முதுநிலை மருத்துவ படிப்பு – postgraduate specialty – போல்) ஒன்றில் சேர்ந்துவிடலாம். சில ஆண்டுகள் கழித்து முதுகலை மருத்துவ துறைகளுக்கான அமேரிக்க தேர்வாணையத்தில் (American Board of Medical Specialties) தேர்ச்சி பெற்றுவிட்டால் நன்றாக சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு கண்டிப்பாக உண்டு  என்கிற நிலைமை இருந்து வந்தது. ஆனால் எண்பதுகளில் தொடங்கிய விசா கெடுபிடிகளால் வெளிநாட்டு மருத்துவர்கள், குறிப்பாக இந்திய மருத்துவர்கள் அமெரிக்காவினுள் நுழைவது பெருமளவில் குறைந்தது. இன்று வரை எப்படியும் அமெரிக்காவில் மருத்துவராக வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று சிலர் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்று வேலையில் சேர்ந்தாலும் நிரந்தர குடியுரிமை கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது.

அமேரிக்கா செல்லும் வாய்ப்புகள் குறைந்ததால் இங்கிலாந்து செல்ல முயர்சிப்போரின் எண்ணிக்கை அதிகமாகியது. உள்ளே நுழைய முயர்ச்சிப்பவர்கள் அதிகாமனதாலோ என்னவோ அவர்களை உள்ளே அனுமதிக்க கெடுபிடிகள் அதிகரித்தன.

எண்பதுகளில் தொடங்கி இங்கிலாந்து சென்ற மருத்துவர்களை இரண்டு வகைப் படுத்தலாம். ஒரு வகை, இங்கே எம்.பி.பி.எஸ் இளநிலை பட்டம் படித்து முடித்தவுடன் அங்கே சென்று PLAB தேர்வில் தேர்ச்சி பெற்று வேலையில் சேருவோர். இவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்திலேயே நிரந்தரமாக தங்கிவிடலாம் என்று சென்றவர்கள். வேலையில் சேர்ந்த சில வருடங்களுக்குள் ஏதாவது மருத்துவ சிறப்பு பிரிவில் (specialty) தேர்ச்சி பெற்று விடுவார்கள். அங்கே சிறப்பு துறை தேர்வுகளை கடந்தால் ராயல் காலேஜ் உறுப்பினர் அல்லது உயர் அங்கத்தினர் (Member or Fellow of the Royal College of Physicians, Surgeons, ie, MRCP, FRCP, MRCS, FRCS, etc,.) என்று பட்டம் அளிப்பார்கள். இப்படி ஏதாவது சிறப்பு பிரிவில் தேர்ச்சி பெற்றுவிட்டால் நல்ல சம்பளத்துடன் மருத்துவ ஆலோசகர் (கன்சல்டன்ட்/consultant) பதவி கிடைக்கும்.

இரண்டாவது வகை, இங்கேயே ஏதாவது சிறப்பு மருத்துவ பிரிவில் முதுநிலை பட்டம் (postgraduate diploma or masters degree. Eg. DGO, DCH, DOrtho, MD, MS, etc,.) பெற்றபின் சில வருடங்கள் இங்கிலாந்தில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காக செல்பவர்கள். இவர்கள் கண்டிப்பாக திரும்பி வரும் எண்ணத்தோடு செல்பவர்கள். நாடு திரும்பும் போது கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு பட்டம், சேமிப்பு கணக்கில் கணிசமான தொகையோடு வருவார்கள். இவர்களை பற்றி நான் வேறு எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

நான் ஆரம்பத்தில் நாடு திரும்பும் நண்பர்கள் என்று குறிப்பிட்டது முதல் வகையில் இங்கிலாந்து சென்றவர்களை. அனைவருமே 1990-க்கு பின் சென்றவர்கள். திரும்பி வந்தவர்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் இங்கிருந்து போகும் போது அங்கேயே நிரந்தரமாக தங்கிடலாம்னுதானே போனீங்க, ஏன் இப்போ திரும்பி வந்துட்டீங்கன்னு நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில்களில் இருக்கும் பொதுவான கருத்துக்களை அடுத்த பதிவில் பார்ப்போம்…

ஜனவரி 13, 2010

நண்பர் @TBCD-உடன் திடீர் சந்திப்பு

Filed under: 1 — Vijay @ 3:17 பிப

இன்று காலை ஆஸ்பத்திரியில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது 11:30 மணிக்கு ட்விட்டர் நண்பர் @TBCD செல் போனில் அழைத்தார்.

“பெங்களூரிலிருந்து மதுரைக்கு காரில் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன், இப்போ சேலம் எல்லையில் இருக்கிறேன், மதிய உணவு சாப்பிட நல்ல ஹோட்டல் ஏதாவது சொல்லுங்கள்,” என்று கேட்டார்.  அவர் வந்து கொண்டிருக்கும் பைபாஸ் ரோட்டிற்கு மிக அருகில் உள்ள என் நண்பருடைய  ஹோட்டலுக்கு வழி சொன்னேன். மதிய உணவு இவ்வளவு சீக்கிரமாக தயாராக இருக்குமா என்று சந்தேகமாக இருந்ததால், ஓட்டல் உரிமையாளருக்கு போனில் பேசி, குடும்பத்துடன் என் நண்பர் ஒருவர் சில நிமிடங்களில் வருவார் கவனித்துகொள்ளுங்கள் என்று சொல்லி வைத்தேன்.

சிறிது நேரத்தில், “வந்து சேர்ந்துவிட்டேன். சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்,” என்று போனில் அழைத்து கூறினார் TBCD. “சாப்பிட்டு முடித்ததும் கூப்பிடுங்கள், வேலை கம்மியாக இருந்தால் வந்து நேரில் உங்களை சந்திக்கிறேன்,” என்று சொன்னேன்.

TBCD சாப்பிட்டு முடித்து அழைக்கையில் வேலை அதிகம் இல்லாததால், ஹோட்டலுக்கு சென்று அவரையும், அவர் மனைவி மற்றும் பொம்மை போல் உள்ள அவரது மகளையும் சந்தித்து சில நிமிடங்கள் பேசி வழியனுப்பி வந்தேன்.

எங்கள் இருவரையும் திருமதி.TBCD எடுத்த போட்டோ இங்கே…

@TBCD & @scanman

இன்னொரு ட்விட்டர் நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி. அடுத்த முறை சந்திப்பு சில மணி நேரங்களாவது இருக்க வேண்டும்.