…நிழல்கள்…

நவம்பர் 18, 2009

ஞாபகம் வருதே – 1

தம்பி அருண் ட்விட்டரில் இன்னொரு நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் மூக்கை நுழைக்க, அருண் என்னை கேட்ட கேள்வி, “காலேஜ்ல இருக்கும்போது படம் பார்க்காம வேற எப்போ சார் பார்க்கறது??”

நியாயமான கேள்வி. நம்ம ரைட்டர் பேயோன் பாஷையில் rhetorical கேள்வி. அதாவது அதற்க்கு பதில் தேவையில்லை. Or any answer is superfluous.

அருணுடைய ட்வீட்டைப் படித்ததும் மனதில் பழைய கல்லூரி நாட்களின் ஞாபகம் flashback ஆக ஓடியது.

கோவையில் மருத்துவக் கல்லூரியில் நான் படித்த சமயம் எங்கள் வகுப்பில் அதிகம் இருந்தது சேரநாட்டு மங்கையரே. அதில் சில பேர் எனக்கு நல்ல நண்பிகள். கடைசி ஆண்டு படிக்கும்பொழுதும் ஹவுஸ் சர்ஜனாக இருந்த ஆண்டும் என்னிடம் கார் இருந்தது. அதே போல் இன்னும் இரண்டு நண்பர்களிடமும் கார் இருந்தது. ஊரில் நல்ல சினிமா, அதாவது நண்பிகள் விரும்பிப் பார்க்கும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி படம், ஏதாவது போட்டுவிட்டால் எங்கள் மூவருக்கும் கொண்டாட்டம்தான். சினிமா பார்க்க நண்பிகளைக் கூட்டிப் போவது எங்கள் வேலை.

சும்மா பொண்ணுக கூப்பிட்டா நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வாலை ஆட்டியபடி போய் விழுந்து விழுந்து செய்வோம் என்றும் நினைத்துவிடாதீர்கள். நாங்க எங்க நண்பிகளை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போற பாணியே தனி.

ஊரில் நல்ல படம் ஓடுதுன்னு தெரிஞ்சா அந்த நாள் காலையே நண்பிகள் உஷாராக ப்ளான் போட ஆரம்பித்து விடுவார்கள். எங்கள் (அதாவது கார் வைத்திருக்கும்) மூவரில் யாரவது ஒருவரிடம் சொல்லி இத்தனை டிக்கெட் மாலைக் காட்ச்சிக்கு எடுத்துவிடு என்று முதலில் காசு கொடுத்துவிடுவார்கள். ஓட்டுனராக போகும் எங்களுக்கு இலவச டிக்கெட் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எத்தனை பேர் போகிறோம் என்பதைப் பொறுத்து வண்டி வசதி ஏற்பாடு செய்து விட வேண்டும். அடுத்து, எங்கள் வகுப்பில் சக மாணவி + இந்த மாதிரி சினிமா trip-இல் கண்டிப்பாக பங்கெடுத்துக்கொள்ளும் கல்லூரி முதல்வரின் மகள் மூலமாக அவர் தந்தையிடம் இரவு மகளிர் ஹாஸ்டலுக்கு கதவடைக்கும் நேரத்திற்குப் பின் வருவதற்கு ஒரு பர்மிசன் கடுதாசி வாங்கிவிடுவார்கள் (இந்த மகளிர் விடுதி கதவடைப்பு சமாச்சாரம் கோவை மாவட்டத்தில் கல்லூரி படிப்பு படித்த அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்).

மாலை கல்லூரி முடிந்தவுடன் நண்பிகள் சிலர் பக்கத்தில் இருக்கும் பேக்கரிக்கு சென்று படம் பார்க்கும் பொழுது கொறிக்க பல விதமான ஸ்நாக்ஸ் வாங்கி வந்து எங்களிடம் பத்திரமாக காரில் வைக்கச் சொல்லி கொடுத்துவிடுவார்கள். அதற்குப் பின் அவர்களெல்லோரும் நல்ல உடை மாட்டி சிங்காரித்து வரும் வரை எங்களுக்கு வேலை இல்லை. பெண்கள் சிங்காரித்து என்று நேரத்திற்கு வந்திருக்கிறார்கள்? அங்கும் அப்படிப்பட்ட அதிசயமெல்லாம் நடக்கவில்லை. நாங்கள் சென்ற எந்த ஒரு சினிமாவாக்கும் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன் அரங்கிற்குள் சென்றதில்லை. அவசரமாகக் கிளம்பி அதிவேகமாக கார்களை ஓட்டிச் சென்று ஒரு வழியாக அரங்கிற்கு அழைத்து செல்வோம். காரில் இளம் பெண்களை,  அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவிகளை வைத்துக்கொண்டு வேகமாக ஓட்டுவது ஒரு இனிய சுகம். பெரும்பாலான நேரம் நாம் ஓட்டும் வேகத்தையும் ஓட்டும் விதத்தையும் விமர்சிப்பதும், வீரிட்டுக் கத்துவதுமாக அமளியாக இருக்கும். காரில் டேப் ரிக்கார்டர் (அந்தக் காலத்தில் CD ப்ளேயரெல்லாம் எங்கள் கார்களில் இல்லை) இருந்தாலும் அதில் பாட்டுப் போட வேண்டியதில்லை. கண்டிப்பாக யார் காதிலும் அந்த பாட்டுச் சத்தம் கேட்காது.

அரங்கினுள் சென்று சீட்டில் அமர்ந்து பெருமூச்சுவிட்டு சுத்தியும் முத்தியும் பார்த்தா ஒரே பெருமையா இருக்கும் எங்களுக்கு. அப்பவெல்லாம் ஒரு புள்ளைய தள்ளிக்கிட்டு சினிமாவுக்கு வர்றதே பெரிசு. அக்கம்பக்கம் உக்கார்ந்திருக்கிற ஆண்கள் எல்லாம் எங்களை வயிற்றெரிச்சலுடன் பார்ப்பது போல் இருக்கும். மானசீகமாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு நாங்களும் பீட்டர் விடுவோம் (அந்த வார்த்தை பிறகு பழகியது. அப்போது அதற்க்கு வெறும் படம் போடுவது என்றே விஷயம் அறிந்த அறிஞர்கள் சொல்லுவார்கள்).

படம் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. கண்டிப்பாக பத்து நிமிடத்திற்கு ஒரு முறையாவது கேக், பப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ், கூடவே பேப்பர் கப்பில் தம்ஸ்-அப், லிம்கா போன்று ஏதாவது எங்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

படம் முடிந்ததும் ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வோம். மூக்கு முட்ட நாங்கள் தின்று முடித்த பிறகு எங்கள் பக்கம் நண்பிகளால் சாப்பிட்டு முடிக்க முடியாமல் போனவை எல்லாம் வரும். விடுவோமா. Background-இல், “How can they eat this much yaa!?” போன்ற வசனங்கள் ஒலிக்க அதையும் சாப்பிடுவோம். (சாப்பாடும் நண்பிகள் செலவுதான்.)

சாப்பிட்டு முடித்து வண்டியை கிளப்பியவுடன் அடுத்த டென்ஷன் ஆரம்பித்துவிடும். விடுதி வார்டன் உள்ளே விடுவார்களா என்று. நம்ம நண்பிகளுக்கும் அந்த வார்டன் அம்மையாருக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. எதோ ஸ்கூல் டீச்சர் போல் இவர்களை ஒடுக்கி வைக்க அவிங்க முயற்சி பண்ண, நாங்கெல்லாம் வருங்கால டாக்டர்களாக்கும் என்கிற திமிரோடு நண்பிகள் எதிர்த்து நிற்பதும் எப்பொழுதுமே நடப்பதுதான்.

விடுதி வாயிலில் நண்பிகளை இறக்கி விட்டு நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டியததுதான். ஓரிரு நிமிட பேச்சுவார்த்தைக்குப் பின் முதல்வரிடமிருந்து வாங்கி வந்த கடித்தத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளே விட்டுவிடுவார் வார்டன் அம்மையார். வேலிக்கு வெளியே இருந்தே கோரஸாக “குட் நைட்” சொல்லிவிட்டு ஒரு நல்ல காரியத்தை செய்த திருப்தியுடன் நாங்கள் வெளியே தங்கியிருந்த வீடுகளுக்கு திரும்புவோம்.

நவம்பர் 8, 2009

நிழல்களில் நிஜத்தைத் தேடி…

Filed under: சொந்தக்கதை — Vijay @ 10:10 பிப

பல மாதங்களாக ட்விட்டரில் கஷ்டப்பட்டு எனக்கு தெரிந்த தமிழில் எழுதி தேற்றிக்கொண்ட தைரியத்தில் துவக்கப்பட்ட சோதனை ஓட்டம் இது. ட்விட்டரில் என்னுடைய ஏராளமான எழுத்துப் பிழைகளை கண்டுபிடித்து கிண்டல் செய்து திருத்திய நல்ல உள்ளங்களுக்கு1 (?) முதலில் ஒரு ஈடுகாய் போட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இங்கேயும் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயமாக உண்டு! 🙂

உனக்கெதற்கு இந்த விஷப் பரிட்சை என்று கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் பதில், “Why not?!”

மருத்துவக் கல்லூரியில் என் வகுப்பில் இருந்த பலருக்கு இதுவே தாரக மந்திரம்.

இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது என்னுடைய தமிழ் அறியாமைக்கு ஒரு வரியில் disclaimer போட்டுவிட்டு ஏதாவது எழுதலாம் என்று இருந்தேன். யோசித்து எழுதத் தொடங்கியவுடன், தன்னிலைவிளக்கமே ஒரு பதிவாகப் போட்டுவிடலாமே என்று தோன்றியது. அப்படியே செய்துவிட்டேன்.

பயங்கரமா யோசிச்சு என்னுடைய தரத்திர்க்கப்பாற்பட்ட சூப்பரான (?) தலைப்பை போட்டுவிட்டேன். நிழல்களில் நிஜத்தைத் தேடுவது என் தொழில்.

சில மாதங்களாகவே என்னுடைய (ஆங்கில) மருத்துவ வலைப் பதிவில் எழுத ஒன்றும் தோன்றுவதில்லை.  வேலைச் சுமை அதிகமானதால் நேரமின்மை ஒரு காரணம். அந்தப் பதிவில் பெரும்பாலும் என்னுடைய மருத்துவத் துறை (ரேடியாலஜி – radiology – நுண் கதிரியல் மருத்துவம்) பற்றிய இடுகைகளையே இட்டு வந்தேன். பொழுதுபோக்கிற்கு ஆரம்பித்த பதிவில் வேலை சம்பந்தமாகவே எழுதியதால் ஏற்பட்ட மனச்சோர்வு இன்னொரு காரணம். இவை இரண்டையும்விட முக்கியமான காரணம், ட்விட்டர், ஃபெஸ்புக் போன்ற நுண்பதிவகங்களில் மற்றும் சமூகக் கட்டமைப்பு வலைத்தளங்களில் நேரத்தை போக்குவது.

மூன்றாண்டுகளுக்கு முன் என் வலைப் பதிவை ஆரம்பித்தபோது எனக்கென்னவோ மருத்துவத்தை மையமாக வைத்து குறுங்கதைகள் சொல்லவேண்டும் என்று ஒரு ஆவல் இருந்தது. பதிவு எழுதுவதின் மூலம் என்னுடைய படைப்பாற்றலை வளர்திக்கொள்ளலாம் என்று ஒரு நப்பாசையும் இருந்தது. பதிவுலகில் எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் பெரும்பாலும் அமெரிக்க மருத்துவப் பதிவர்களே. அவர்களில் சிலரின் எழுத்துத்திரனைக் கண்டு இன்றும் பிரம்மிக்கிறேன். தமிழ் பதிவுலகைப் பற்றித் தெரிந்து கொண்டது ட்விட்டரில் தமிழ் நண்பர்கள் மூலமாகத்தான். இங்கே எழுதிக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களை திறந்த வாய் மூடாமல் விழி பிதுங்கி இந்த நிமிடம் வரை பார்த்துகொண்டிருக்கிறேன்.

சரி தொழில் பற்றியும் ஆங்கிலத்திலும் எழுத வரவில்லை (அல்லது விருப்பமில்லை) என்றாகிவிட்டதால் தமிழில் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்ற (விபரீத) எண்ணத்தின் விளைவே இந்த புது முயற்சி. இதுவும் என்னுடைய தமிழ் ட்விட்டர் சோதனை ஓட்டம்போல் சத்தமில்லாமல் செத்துபோகாமல் இருக்க முயற்ச்சிக்கிறேன்.

கண்டிப்பாக ட்விட்டரில் போஸ்டர் ஒட்டி கூவிக் கூவி அழைப்பேன். வந்து பூமாரி பொழியுங்கள் அல்லது அழுகின முட்டையோ தக்காளியோ வீசுங்கள்.

அடிக்குறிப்புகள்:

  1. ட்விட்டரில் என்னுடைய எழுத்துப் பிழைகளை இன்றுவரை திருத்திக் கொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் – பாலா, கொத்தனார், ஸ்ரீதர், சொக்கன், டைனோ, ஸ்வாமி, ஆயில்யன், ரவி.  வேறு யாரையாவது விட்டிருந்தால் மறுமொழியில் சொல்லுங்கள், இணைத்துவிடுகிறேன்.