…நிழல்கள்…

திசெம்பர் 23, 2012

மருத்துவத் துறையின் டைனசோர்கள் / டோடோக்கள்.

புவியிலிருந்து அழிந்து மறைந்த உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டாக அனேகமாக நம் அனைவருக்கும் தெரிந்திருப்பவை டைனசோர்கள் மற்றும் டோடோ பறவைகள். நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில், மருத்துவத் துறையில் டைனசோர், டோடோக்களைப் போல் அழிந்து மறைந்துவிட்ட மறைந்துகொண்டிருக்கும் உட்பிரிவு குடும்ப மருத்துவர்கள்.*

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?” இந்த வாக்கியத்தை இதைப் படிப்பவர்கள் அனைவரும் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

சுமார் இருபத்தைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன், அதாவது குடும்ப மருத்துவர்கள் என்ற டைனசோர்கள் உலவிக்கொண்டிருந்த காலத்தில், குடும்பத்தில் யாருக்கு என்ன நோய் ஏற்பட்டாலும் குடும்ப மருத்துவரிடம்தான் வைத்தியத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அவர் போடும் ஊசி, கொடுக்கும் அறிவுரை, மருந்துகளை மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டு, அவருடைய குறைந்தபட்ச கட்டணத்தையும் கட்டிவிட்டு வந்திருப்பார்கள். சற்று கடுமையான நோயாக இருந்தால், குடும்ப மருத்துவர் ‘பெரிய ஆசுபத்திரிக்குப் போய் பெரிய டாக்டரை பாருங்க,’ என்று பரிந்துரை செய்வார். வசதிக்கு ஏற்றபடி அவர் சொல்லும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருப்பார்கள்.

குடும்ப மருத்துவர் என்ற இனம் இருந்த காலகட்டத்தைக் கடந்து வந்த நம் பெற்றோரின் தலைமுறையைச் சார்ந்தோரும், இளம் வயதில் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்ட நம்மில் பலரும் நாம் பார்த்த குடும்ப மருத்துவர்கள் என்ன பட்டம் பெற்றிருந்தார்கள் என்பதை அறிந்திருந்தோமா?

அந்தக் காலத்தில் மருத்துவரின் படிப்பு என்ன என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. ‘வெறும் MBBS’ படித்த மருத்துவர்களைப் போலவே பெரும்பாலான ‘MD, MS’ மேற்படிப்பு படித்த மருத்துவர்களும் பொதுவான மருத்துவச் சேவை (general practice) செய்தார்கள். மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்த பெரிய நகரங்களிலேயே இதுதான் நடந்தது. சிறு நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் குறைவான எண்ணிக்கையில் இருந்த மருத்துவர்கள் எல்லாவிதமான நோய்களுக்கும் வைத்தியம் பார்க்க வேண்டிய வலுக்கட்டாய நிலையில் இருந்தார்கள்.

நமது சமூகத்தின் சுகாதாரத் தேவைகளுக்கு பொருத்தமான மருத்துவர்களை தயாரிக்க வேண்டும் என்பது இளநிலை மருத்துவக் கல்வியின் (MBBS பட்டப் படிப்பின்) மிக முக்கியமான பணி. சமீப காலமாக (நான் சமீபம் என்று சொல்லுவது கடந்த  முப்பது ஆண்டுகளை) இந்த அடிப்படை நோக்கமே தோற்றுவிடும்படி இளநிலை மருத்துவக் கல்வி மாறி விட்டது.

MBBS படிப்பு முடித்து மருத்துவப் பணியை தொடங்கும் ஒரு இளம் மருத்துவர் மக்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்களை சரியாகக் கண்டுபிடித்து தகுங்த சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதும், அவருடய நிலையில் சமாளிக்க முடியாத வியாதிகளை விரைவாக அடையாளம் கண்டு கொண்டு நோயாளிகளை தேர்ந்த வல்லுநரிடம் அல்லது பெரிய மருத்துவமனைக்கு தாமதமின்றி அனுப்புவார் என்பதும் நம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு. சமீப காலமாக இந்த அடிப்படை எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறதா என்பது கெள்விக்குறியாக உள்ளது.

பிரபல மருத்துவப் பதிவர் நண்பர் மரு.புருனோ சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம் என்று ஒரு கட்டுறை எழுதியிருந்தார். அதிலிருந்து சில முக்கியமான விவரங்கள்:

எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”):

முதல் அடுக்கு – Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க.

இரண்டாவது அடுக்கு – Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க.

மூன்றாவது அடுக்கு – Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க.

இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம், தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன.

இது போல் அனைத்து நோய்களுக்கும் மூன்றடுக்கு மருத்துவநிலை உண்டு.

அதே போல் எந்த நோயை எடுத்துக்கொண்டாலும்,

அதிகம் தேவைப்படுவது முதல் அடுக்கு தான்.

குறைவான சமயமே இரண்டாவது அடுக்கு தேவைப்படும்.

மிக மிக குறைவான சமயமே மூன்றாவது அடுக்கு தேவைப்படும்.

இதில் சேர்க்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. அரிதான நோய்களை நாம் அதிகம் பார்ப்பது மூன்றாவது அடுக்கில்; அதாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தான்.

தீவிரமான, சிக்கல்களுள்ள, அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மூன்றாம் கட்ட வைத்திய மையங்களில் பயிற்சி பெற்று வெளியேறும் இளநிலை மருத்துவர்களுக்கு வழக்கமான எளிமையான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறமையோ மன உறுதியோ பல சமயங்களில் இருப்பதில்லை.

கவனிக்கவும்: நான் MBBS முடித்து வரும் மருத்துவர்களுக்கு வைத்தியம் தெரியவில்லை என்று சொல்லவில்லை. அவர்கள் சிரமப்பட்டு படித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை சரியான வைத்திய முறைகளாக செயலாக்கத் தெரிவதில்லை என்று சொல்லவந்தேன்.

கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக மருத்துவத்துறையில் வியப்படவைக்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் பல உட்பிரிவுகள் தோன்றியிருக்கின்றன. இதனால்  மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களும், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு பொது மருத்துவம் (General Medicine), பொது அறுவை சிகிச்சை (General Surgery), மகப்பேறு, மகளிர் மருத்துவம் (Obstetrics & Gynaecology), குழந்தைகள் மருத்துவம் (Paediatrics) போன்ற அடிப்படைத்  துறைகளில் பயிற்சிக்காக இருக்கும் காலம் அவர்கள் அந்தத் துறைகளில் ஓரளவிற்காவது தேர்ச்சி பெற போதுமானதாக இருப்பதில்லை.

சமூகத்தில் அதிகம் தோன்றும் எளிமையான வழக்கமான நோய்களுக்குத் திறம்பட சிகிச்சை அளிக்கப் பயில்வதிலிருந்து மருத்துவப் புத்தகங்களில் உள்ள பாடங்களையும் கோட்பாடுகளையும் (medical theory) தெரிந்து கொள்வதே இளநிலை மருத்துவக் கல்வியின் நோக்கமாக மாறியிருக்கிறது. இப்படி மாறியிருக்கும் கல்வி அமைப்பில் ‘தேர்ச்சி’ பெற்று வரும் இளநிலை மருத்துவர்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சை முறைகளிலேயே அடி சறுக்குவதில் வியக்க ஒன்றும் இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன் என்ன வித்தியாசமாக இருந்தது?

அந்தக் காலத்தில் இளநிலை மருத்துவ மாணவர்கள் படித்த புத்தகங்கள் நிகழ்கால புத்தகங்களைவிட சற்றே குறைந்த எடையுடன் இருந்தன என்றாலும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறைவாகவெல்லாம் இல்லை. டைனசோர் காலத்தில் MBBS பட்டத்திற்கான இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டுக்கு பயிற்சி மருத்துவராக (house surgeon) பணியாற்றியபின் பெரும்பாலான மருத்துவர்கள் அரசு வேலையில் சேர்ந்தார்கள் அல்லது தனியாக பொது சேவை மருத்துவர்களாக (general practice) வேலையை தொடங்கினர். சிலர் மேலும் நடைமுறை அனுபவம் பெறுவதற்காக முதுநிலை பயிற்சி மருத்துவர்களாக (senior house surgeon) மேலும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே வேலை செய்திருப்பார்கள். ஒரு சிலர் நடைமுறை அனுபவம் பெறுவதற்காக பெயர் பெற்ற, அனுபவம் மிக்க மருத்துவர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருப்பார்கள். இவ்வாறு நடைமுறை அனுபவம் தேடியவர்கள் பெரும்பாலும் சிறு நகரம் அல்லது கிராமப்புரங்களிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஊரில் சென்று தொழில் தொடங்கும்முன் எவ்வளவு பயின்றுகொள்ள முடியுமோ அவ்வளவு பயின்று செல்லலாம் என்ற எண்ணத்தில் செய்திருப்பார்கள்.

அந்தக்காலத்தில் அப்படியெல்லாம் செய்தார்கள் என்றால் இக்காலத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்?

இந்தக்காலத்தில் இறுதியாண்டு இளநிலைப் பட்டபடிப்பு முடிக்கும் முன்னே அடுத்ததாக எந்தச் சிறப்புத் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று பெரும்பாலானோர் முடிவு செய்து விடுகிறார்கள். அவர்கள் விரும்பும் சிறப்புத்துறை முதுநிலை கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை இறுதியாண்டுத் தேர்வு முடிந்தவுடன் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் பயிற்சி மருத்துவராக இருக்கும் ஒரு வருடகாலத்தையும் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் கழித்து விடுகிறார்கள். பயிற்சி மருத்துவராக இருக்கும் காலம் முடிவதற்குள் சிறப்புத் துறை முதுநிலை பட்டப்படிப்பில் சேர முடியாவிட்டால் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள் அல்லது வீட்டில் உட்கார்ந்து படிக்கிறார்கள். இளநிலை மருத்துவக் கல்வியை பயின்று முடித்தவுடன் படித்ததை சரியாக செயற்படுத்த நடைமுறை அனுபவம் பெரும் முயற்சியைவிட அவர்களுக்கு அடுத்த நிலை படிப்பில் நுழைய முற்படும் முயற்சியே முக்கியமாகிவிடுகிறது.

இன்றைய இளநிலை மருத்துவப் பட்டதாரிகள் முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த மருத்துவர்களைப்போல் படித்து முடித்தவுடன் தொழில் தொடங்காமல் ஏதாவது சிறப்புத் துறை நிபுணர் ஆகவேண்டும் என்று ஏன் ஆசைப் படுகிறார்கள் என்று பார்த்தால் அதற்கான முக்கிய காரணம் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்த வாக்கியம்.

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?”

பக்குவப்படுத்தாமல் விளக்கவேண்டும் என்றால்: நுகர்வோர் தேவைக்கு ஏற்ற பொருள் இருந்தால்தான் சந்தையில் விலை போகும்.

பொதுவாகவே நம் மக்களுக்கு மருத்துவம் பற்றிய அறிவு அதிகரித்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியுள்ள இன்றைய நிலையில் பல ஊடகங்கள் மூலமாக நோய்களைப் பற்றியும் மருத்துவத்தைப் பற்றியும் மேலும் அதிகமாக அறிந்துகொள்கிறார்கள். வயிற்று வலி வந்தால் குடலியல் நிபுணரைப் பார்க்கவேண்டும், தலைவலி அதிகமானால் நரம்பியல் நிபுணரிடம் காட்டவேண்டும் என்று மக்களே முடிவு செய்து அவர்களிடம் சென்று விடுகிறார்கள்.

சிறப்புத் துறை நிபுணர்கள் அதிகமானதால் மக்கள் அவர்களிடம் செல்கிறார்களா அல்லது மக்கள் தேவைக்காக நிபுணர்கள் உருவாக்கப் படுகிறார்களா என்பது கோழியா, முட்டையா எது முதலில் வந்தது ரகமான கேள்வி. கேள்விக்கு பதில் இருக்கிறதோ இல்லையோ, இதனால் உருவாகியிருக்கும் நச்சுச் சூழல்தான் குடும்ப மருத்துவர் டைனசோர் இனத்தை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.

சிற்றூர்களில் கூட பல மருத்துவ சிறப்புத்துறை நிபுணர்கள் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இளநிலை மருத்துவப் பட்டத்தை வைத்துக்கொண்டு தனியாகத் தொழில் துவக்க இளம் மருத்துவர்கள் தயங்குவது நியாயம்தான். இளநிலைப் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களால் பெரிதாக ஒன்றும் சம்பாதித்துவிட முடியாது. அரசு வேலை கிடைத்தால்தான் ஓரளவாவது வெளியில் சொல்லும்படியான சம்பளம் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் MBBS மருத்துவர்களுக்கு கடைநிலை BPO ஊழியர்களுக்கு சமமாக சம்பளம் கிடைத்தாலே மேல்.

நண்பர் புருனோ பதிவில் கூறியிருப்பதுபோல் சமூகத்திற்கு அதிகம் தேவைப் படுவது முதல் அடுக்கு மருத்துவம்தான் (Primary Care). நோய்த் தடுப்பு மற்றும் துவக்க நிலை மருத்துவ சேவை புரிய இளநிலை பட்டம் பெற்ற மருத்துவர்களே போதும்.

அதாவது, நமக்கு அதிகம் தேவைப் படுபவர்கள் ‘வெறும் MBBS’ படித்த மருத்துவர்கள்தான். பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு ஏற்படும் வழக்கமான, எளிய நோய்களுக்கு வைத்தியத்திற்கு நாடிப் போகவேண்டியது ‘வெறும் MBBS’ மருத்துவர்களிடம்தான்.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?

“அந்த டாக்டரையா பார்க்கப்போற, அவர் வெறும் MBBS டாக்டர்தானே! வேற யாராவது MD, MS படிச்ச ஸ்பேஷலிஸ்ட்டை பார்க்கலாமே?”

அந்த டைனசோர் காலத்தை இன்று திரும்பிப் பார்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். மருத்துவத் துறையில் இன்று காணும் இடமெல்லாம் பரவியிருக்கும் வணிகமயமாக்கல், கார்பரெட் கலாச்சாரம் அந்தக் காலத்தில் இல்லை. அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் இருந்தன, ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை தனியாக ஒரு மருத்துவர் கட்டி நடத்திய மருத்துவமனைகள், அல்லது சில மருத்துவர்கள் கூட்டாக துவக்கிய மருத்துவமனைகள்தான் (polyclinic). இவை தவிர சில ஊர்களில் தனியார் அறக்கட்டளைகள் கட்டிய மருத்துவமனைகள் இருந்தன. மருத்துவம் ஒரு தொழில் என்பதைவிட மேன்மையான சேவைத்துறை என்றே கருதப்பட்டது. பெரும்பான்மையாக சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட மருத்துவர்களும் நல்ல சம்பாத்தியத்துடனும் வசதியுடனும் இருந்தார்கள். அப்படி இருந்த மருத்துவத்துறை சேவை நோக்கம் தொலைந்து பிற தொழில்களைப்போல் வணிகநோக்கத்தோடு இன்று மாறி இருக்கிறது. இந்த மாற்றத்தில் மேன்மையான சேவை நோக்கம் பலியானது மட்டுமில்லாமல் குடும்ப மருத்துவர் என்ற இனமும் மறைந்து ஒழிந்துவிட்டது.

மருத்துவத்தை மறுபடியும் புனிதமான சேவை ஆக்குவது என்பதெல்லாம் இனி நடக்கக் கூடியது அல்ல. நிலைமை இன்னும் மோசமாகாமல் போக திருத்த நடவடிக்கைதான் எடுக்க வேண்டும்.

இளநிலைப் பட்டம் பெற்று வரும் மருத்துவர்கள் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளைக் கையாளத் தகுதியான செயல் திறன்களைப் பெற்றுள்ளார்கள் (skill sets, competencies) என்பதை வலியுறுத்தும் வகையில் மருத்துவக் கல்வித்திட்டம் மாற்றி அமைக்கப் படவேண்டும்.

பொது மருத்துவம், அடிப்படை பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு-மகளிர் மருத்துவம், குழந்தைநல மருத்துவம் ஆகியவற்றில் போதுமான தேர்ச்சி ஏற்படுத்தும் குடும்ப நல மருத்துவ உயர்கல்வித்துறை (Family Medicine) வளர வேண்டும்.

அடிக்குறிப்பு:

நான் பல மாதங்களுக்கு முன் எழுதத் துவங்கி முடிக்காமல் வரைவோலைக் கோப்பில் (draft folder) கிடந்த இந்தப் பதிவை தூசி தட்டி எடுத்துப் பார்க்க வைத்தது செந்தில்நாதனின் (@4sn) ‘Family Doctors‘ என்ற பதிவு. அந்தப் பதிவில் செந்தில் குடும்ப மருத்துவர்களைப் பற்றி எழுதியிருந்ததை மையமாக வைத்து எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. இதில் பகிர்ந்திருக்கும் கருத்துகள் அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் மாணவனாகவும் மருத்துவனாகவும் நான் அனுபவித்து அறிந்துகொண்டதில் உருவானவை. சரியோ தவறோ இங்கே எழுதியிருப்பதற்கு நானே பொறுப்பு.