…நிழல்கள்…

ஓகஸ்ட் 21, 2011

ரேடியாலஜி உயர் மருத்துவக் கல்விக்கு நுழைவு நன்கொடை

மூன்று நாளுக்கு முன் ட்விட்டரில் “மகாராஷ்டிரத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ரேடியாலஜி (நுண்கதிர் இயக்க மருத்துவம், எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்டு, சிடி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் பற்றிய மருத்துவத்துறை) மேற்படிப்புப் படிக்க இடம் (சீட்) ஒன்றுக்கு ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் நுழைவு நன்கொடை வாங்கியுள்ளார்கள்.” என்று ஒரு செய்திச் சுட்டி கொடுத்தார் நண்பர் அலெக்ஸ் பாண்டியன்.

அதைப் பார்த்த நண்பர் முரளி, “நம்ம ஊரு ரேட் என்ன சார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நம்மூரில் கல்லூரியைப் பொறுத்து 80 இலட்சத்திலிருந்து 2 கோடி வரை ஆகிறது,” என்று பதில் சொன்னேன்.

என் பதிலைப் பார்த்த பின் நண்பர்கள் முரளியும்  கோகுலும், படிப்பதற்குக் கொடுத்த பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்டார்கள். இது ஒரு இக்கட்டான கேள்வி என்று எண்ணி ட்விட்டரில் தனிச் செய்தியில் (டி.எம்.) கேட்டார் நண்பர் முரளி. இதில் இக்கட்டெல்லாம் ஒன்றும் இல்லை, பொதுவெளியில் பேசப்படவேண்டிய விஷயம்தான், நான் பதிவில் விரிவாக எழுதுகிறேன் என்று சொன்னேன்.

தனியார் மருத்துவ மேற்படிப்புகளில் ரேடியாலஜிக்குத்தான் அதிகம் நுழைவு நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்றும், சில கல்லூரிகளில், சில வருடங்களாகவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப் படுகிறது என்பதும் மருத்துவத் துறையில் பரவலாக அறிந்த விஷயம்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்த விஷயத்தை மையமாக வைத்து இந்திய ரேடியாலஜி சங்கத்தின் ஆய்விதழில் “The business of radiology” என்ற தலையங்கம் வெளியானது (இங்கே ஆங்கிலத்தில் படிக்கலாம்). அந்தத் தலையங்கத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களையும், அது வெளியானபின் வந்த வாசகர் கடிதங்களிலிருந்த கருத்துக்களையும் இங்கே என் கருத்துக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மருத்துவ இளநிலை மற்றும் உயர்நிலை பட்டப் படிப்பிற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் தொகைகள் நுழைவு நன்கொடை (கேபிடேஷன் ஃபீஸ்) ஆகப் பெறப் -பிடுங்கப்- படுவது பரவலாகத் தெரிந்த விஷயம்தான். இந்தப் பழக்கத்தின் நியாய-அநியாயத்தை நான் இங்கே விவாதிக்க விரும்பவில்லை. பரவலாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு மற்றவையை கவனிப்போம்.

எண்பது இலட்சத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுத்து படிக்கும் ரேடியாலஜி மருத்துவ மேற்படிப்பில் வருமானம் எவ்வளவு வரும் என்பதை முதலில் பார்ப்போம்.

ரேடியாலஜி பற்றி மேலோட்டமாகத் தெரிந்தவர்களுக்கு – இதில் ரேடியாலஜி நிபுணர்கள் அல்லாத மருத்துவர்களும் அடக்கம் – இந்தத் துறையில், சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் எல்லாம் வைத்திருந்தால் ஏனைய மருத்துவத் தனித்துறைகளை விட வருமானம் அதிகம் வரும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது.

சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரமெல்லாம் போட்டுத் தனியாக தொழில் தொடங்க முதலீடு அதிகம் தேவை. சில கோடி ரூபாய் முதலை, நாமே போடாவிட்டாலும், வங்கியில் பெரிதாகக் கடன் வாங்க வேண்டும். பெரிய முதலீடு செய்து ஆரம்பிக்கும் தனி ரேடியாலஜி தொழிலில் குறைந்த காலத்தில் இலாபம் பார்க்க முடியாது. முதலீட்டுக் கடன் தொகையைத் திருப்பித் தருவது மட்டுமல்லாமல், ஈட்டுறுதிக் காலம் (warranty period) முடிந்தபின் வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு (annual maintenance contract) பல இலட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும். தொழில் நன்றாக நடந்தால் நீண்ட – சுமார் ஐந்திலிருந்து ஏழு வருட – காலகட்டத்தில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் இலாபம் வரும் வாய்ப்பு உள்ளது (10 – 15% return on investment). அதாவது பங்குச் சந்தையில் இணையுதவி நிதிகளில் (index mutual funds) வரும் இலாப அளவுதான் நன்றாக நடக்கும் ரேடியாலஜி தனித் தொழிலிலும் வரும்.

இது நன்றாக நடக்கும் ரேடியாலஜி தொழிலில் வரும் இலாபக் கணக்கு என்று இரண்டு முறை நான் சொல்லிவிட்டதை கவனிக்கவேண்டும். குறிப்பிட்டு இதை நான் சொல்லுவதன் நோக்கம், இந்தத் தொழிலில் நுழையும் அனைவரும் இலாபம் பெறுவதில்லை என்பதை எடுத்துக் காட்டத்தான். இந்தத் தொழிலில் போட்டி அதிகம். பல தனியார் ரேடியாலஜி மையங்களில் முதலீடுக்கடனைத் திருப்பிச்செலுத்தவும், அன்றாட மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடு செய்யும் அளவிற்குத்தான் வருமானம் வருகிறது என்பதே உண்மை. பல தனியார் ரேடியாலஜி மையங்களில் வாங்கிய இயந்திரங்களுக்கு மதிப்பிறக்கம் (depreciation) செய்வதால் மட்டுமே கணக்கில் இலாபம் காட்ட முடிகிறது.

மேலே பார்த்தது தொழில்முனைவோராக உள்ள மருத்துவர்களின் கதை. சொந்தத் தொழிலாக முதலீடு செய்யாமல் சம்பளத்திற்கு இருக்கும் ரேடியாலஜி நிபுணர்களின் வருமானம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் பார்ப்போம். சுமார் எண்பது சதவிகித (80%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு அவர்கள் வேலையில் இருக்கும் மருத்துவமனை அல்லது ஸ்கான் மையத்தையும், ஊரையும் பொறுத்து ஒரு இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் வரை மாத வருமானம் வர வாய்ப்பு உள்ளது. இது சராசரியாக தனியார் துறையில் மற்ற மருத்துவ தனித்துறை நிபுணர்கள் சம்பாத்தியத்திற்கு ஈடாகத்தான் உள்ளது. மீதம் உள்ள இருபது சதவிகித (20%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு, அவர்களின் தனித் திறமை, அனுபவம், வேலை செய்யும் இடம், இவற்றைப் பொறுத்து இதை விட அதிக வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வளவு நுழைவு நன்கொடை கொடுத்து ரேடியாலஜி மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களை இரண்டு வகைப் படுத்தலாம்.  மேலே குறிப்பிட்ட படி இந்தத் தொழிலில் வரும் வருமானத்தைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாதவர்கள் ஒரு சாரர். இன்னொரு சாரர் பெரும்பாலும் ரேடியாலஜி நிபுணர்களின் அல்லது பெரிய மருத்துவமனை / ஸ்கான் மையங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகள். இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் இந்தப் பெரும் தொகை கொடுப்பது தொழில் முதலீட்டுக்கு ஈடாகும்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நுழைவு நன்கொடையாகக் கொடுத்து ரேடியாலஜி பட்டம் வாங்கிவிட்டு, போட்ட முதலீட்டிற்குத் தக்க இலாபத்துடன் சம்பாதிப்பது எளிதல்ல. இதை பொதுமக்களும், ரேடியாலஜி படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளநிலை மருத்துவப் பட்டதாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த குட்டி விவாதம் ட்விட்டரில் நடந்து கொண்டிருந்த பொழுது “ஏன் ரேடியாலஜியை முன்வைத்து கேட்கிறார்கள் (தாக்குகிறார்கள்)” என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு பதில்: இப்பொழுது உள்ள மருத்துவ மேற்படிப்பு நுழைவு நன்கொடைகளில் அதிகமாக உள்ளது ரேடியாலஜிக்கே. அதனால்தான் இத்துறையைச் சார்ந்தவர்கள் முன்வைக்கப்படுகிறது. ரேடியாலஜிக்கு கோரப்படும் தொகைக்கு ஓரளவு ஒப்பிடக்கூடிய அளவில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும்கூடப் பெறப்படுகிறது.

இது முழுமையான விவாதம் அல்ல. இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுதியுள்ளேன். நியாயமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள். பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

[எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்திய சொக்கன், இலவசக்கொத்தனார் இருவருக்கும் நன்றி.]