…நிழல்கள்…

செப்ரெம்பர் 26, 2011

துடைத்தெடுத்தல் – 1

உலகளவில் போலியோ (இளம்பிள்ளைவாத) நோயை அடியோடு நீக்கும் திட்டத்தின் (Polio Eradication Programme) கீழ் நம் நாட்டில் 2003-ல் நடந்த துடைத்தெடுத்தல் (mop-up) நிகழ்வைப் பற்றி அதுல் கவாண்டே ந்யூ யார்க்கர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அவர் எழுதிய “பெட்டர்” (Better) புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் வெளியானது. அந்த சுவாரசியம் மிக்க விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் முப்பது ஆண்டுகளாக போலியோ நோயை உலகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகிவிடும். ஆனால் ஒரு நோயை உலகத்திலிருந்து அடியோடு ஒழிப்பது என்பது சாதாரனமான விஷயம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெறப் பெறப் பல நோய்களை அடியோடு நீக்க முயற்சி செய்திருக்கிறார்கள், அவற்றில் சில: கொக்கிப் புழு நோய் (Hook Worm), மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever), பறங்கி நோய் (Yaws, ஒரு வகையான சருமத் தொற்றுநோய்), மலேரியா (Malaria). இவற்றில் சில நோய்களின் பரவுதலைக் கட்டுப் படுத்த முடிந்தது ஆனால் ஒன்றைக் கூட அடியோடு ஒழிக்க முடியவில்லை. சொல்லப் போனால், மலேரியா மேலும் அதிகமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.  சுமார் நூறு ஆண்டுகள் முயற்சி செய்து பெரியம்மை (Small Pox) நோயை மட்டும்தான் நம்மால் ஒழிக்க முடிந்திருக்கிறது. 1979-ல் பெரியம்மை நோயை உலகத்திலிருந்து அடியோடு நீக்கியது பெரும் சாதனைதான். ஆனால் அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போலியோ நோயை ஒழிப்பது பலமடங்கு கடினமான விஷயம்.

பெரியம்மை தாக்குதலின் போது வரும் கொப்புளங்களை வைத்து நோயை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஒருவருக்கு பெரியம்மை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நோய் ஒழிப்புக் குழு நோயாளி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நோய் தொற்றாமல் இருக்கத் தடுப்பூசி போடுவார்கள். இந்த மாதிரியான வளையத் தடுப்புமருந்தேற்ற (ring immunization) முறையைப் பயன்படுத்தி பெரியம்மை நோய் பரவாமல் தடுக்கவும், அடியோடு ஒழிக்கவும் முடிந்தது.

போலியோ தொற்றுநோய் தாக்கியிருப்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. போலியோ தீநுண்மத் தாக்குதலுக்குள்ளாகும் (Polio virus infection) பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அறிகுறியும் தென்படாது. ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற எளிமையான அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு தீநுண்மத் தாக்குதலுக்கான அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். சுமாராக ஆயிரம் பேரை போலியோ தீநுண்மம் தாக்கினால், ஒன்றிலிருந்து நான்கு பேருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம்.

தாக்குதலுக்குள்ளாகி எளிமையான அறிகுறைகளை மட்டுமே வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையினரின் உடற்கழிவுகளிலிருந்து தீநுண்மம் சில வாரங்களுக்கு பரவும். இதனால் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு புதிதாக தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

போலியோ நோயைக் கண்டுபிடிப்பதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி எல்லாவற்றிற்கும் போலியோ நோய் காரணி அல்ல. ஆனால் சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும். இது சட்டம். இதற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தில் போலியோ தீநுண்மன் உள்ளதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அது போலியோ நோய்தான் என்று பரிசோதனை முடிவு வருவதற்குள் மேலும் பல நூறு பேருக்கு நோய் பரவும் அபாயத்தைத் தடுக்க இயலாமல் போகலாம்.

இப்படித் தாமதமாகத் தெரியவந்த போலியோ நோயை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பெரியம்மைத் தடுப்பை விட அதிகமான பரப்பளவில், சுற்றுப்புறத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பாதுகாக்கும்படியான முயற்சியை மேற்கொள்ள வெண்டும். இதை மந்தைத் தடுப்பு மருந்தேற்றம் (ஆங்கிலத்தில் herd immunization) என்று சொல்லுவார்கள். பெரியம்மை வராமல் தடுப்பதற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதும். ஆனால் போலியோ நோயைத் தடுக்க சொட்டு மருந்து பயன்படுத்தப் படுவதால், ஒரு முறை கொடுத்தால் போதாது. முதல் முறை சொட்டு மருந்து கொடுத்த நாளிலிருந்து நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இன்னொரு முறை கொடுக்க வேண்டும். சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரியம்மை நோயைத் தடுப்பது மெழுகுவர்த்தியை அணைப்பது போன்ற சுலபமான வேலை என்றால் போலியோ நோயைத் தடுப்பது காட்டுத்தீயை அணைப்பது போன்ற கடினமான வேலை.

உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி இவ்வளவு இடையூறுகளையும் மீறி பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை கொடுக்கப்படும் போலியோ நோய் தடுப்புச் சொட்டு மருந்து மூலமாகவும், மற்றும் சில மேலை நாடுகளில் கொடுக்கப்படும் போலியோ நோய்த் தடுப்பூசி மூலமாகவும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் போலியோ நோய் பரவுதல் கனிசமாகக் குறைக்கப் பட்டிருக்கின்றது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் மற்றும் மேற்கு பசிபிக் வட்டாரத்தில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப் பட்டுவிட்டது. 2001-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் மட்டும் 498 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது.

2001-லிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துவிடலாமென்று எண்ணும் நேரத்தில் ஆசியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ ஏதோ ஒரு நாட்டில் திடீரென்று போலியோ நோய் கிளர்ந்திருக்கிறது (outbreak). 2002-ம் ஆண்டில் வட இந்தியாவில் 1600 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது. அந்த வருடத்தில் உலகெங்கும் ஏற்பட்ட போலியோ நோய்த் தாக்குதலில் இது எண்பது சதவீதம் ஆகும். அன்றைய நிலைப்படி, இந்தியாவில் சில வட மாநிலங்களில் மட்டுமே போலியோ இன்னும் உள்ளது என்றே நம்பினோம்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சிறு பையனுக்கு போலியோ நோய் வந்தது. இதுவே மூன்று வருடங்களில் தென் இந்தியாவில் தோன்றிய முதல் போலியோ நோய்த் தாக்கம். ஒன்றிலிருந்து மேலும் பலருக்குப் போலியோ நோய் பரவினால், தென் இந்தியாவில் போலியோ ஒழிப்புப் போராட்டம் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

துடைத்தெடுத்தல் – ஆங்கிலத்தில் “mop-​up” – என்பது புதிதாகத் தோன்றியுள்ள போலியோ நோய் உள்ள குழந்தையைச் சுற்றியுள்ள, பாதிக்கப் படக்கூடிய எல்லா சிறுவர்களுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் போர்த்தொடர் போன்ற நடவடிக்கையை குறிக்கும் சொல்.

போலியோ போன்ற தொற்றுநோய் முதன்மையாகத் தோன்றும் நபர்களை “இண்டெக்ஸ் கேஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் (index case. என்னுடைய தமிழாக்கம் ‘முதன்மை நிகழ்வு’). 2003-ம் ஆண்டில் தென் இந்தியா கண்ட முதன்மை போலியோ நிகழ்வு, கர்நாடகத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள உப்பரஹல்லா என்ற குடிநீர் வசதி, மின் இணைப்பு இல்லாத மேம்படாத கிராமத்தில் நிகழ்ந்தது.

போலியோ நோய்வாய்ப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள். தாய்க்குப் படிப்பறிவு இல்லை. தந்தைக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும். மூன்று குழந்தைகளுடன் ஒற்றை அரை ஓலைக் குடிசை வீட்டில் வசிப்பவர்கள். குடிசைவாசிகள்தான் என்றாலும் மூன்று குழந்தைகளும் நல்ல போஷாக்குடன் இருந்தார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தக் குடும்பம் வட கர்நாடகத்தில் உறவினர்களை சந்திக்க பயணம் செய்தார்கள். ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்த சில நாள்களில், மே மாதம் ஒன்றாம் தேதி, அந்தச் சிறுவனுக்கு பலத்த காய்ச்சலும் வாந்தியும் வந்தது. பெற்றோர்கள் அவனை அருகில் இருந்த சிறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர் அவனுக்கு அண்டிபயாடிக் (நோய்க்கிருமிக் கட்டுப்படுத்தி) ஊசி ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தார்.

இரண்டு நாளில் காய்ச்சல் குறைந்து விட்டது, ஆனால் சிறுவனின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. பதறிப்போன பெற்றோர், சிறுவனை மீண்டும் அந்த சிறு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் உடனடியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான பெல்லாரியில் உள்ள அரசினர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். நேரம் போகப் போக காலில் மட்டும் இருந்த தசைத் தளர்ச்சி உடல் முழுவதும் பரவியது. சிறுவன் அசைவில்லாமல் மூச்சுத்திணரலுடன் படுக்கையில் கிடந்தான்.

சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும் என்பது சட்டம் என்று முன்னரே எழுதியிருந்தேன். அதன் படி மாவட்ட மருத்துவமனையிலுள்ள மருத்துவர் ஒருவர் கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரிக்கு (WHO Surveilance Medical Officer) தொலைபேசியில் தகவல் சொன்னார். அதே மருத்துவர் சிறுவனின் மலத்தில் போலியோ தீநுண்மம் உள்ளதா என்று பரிசோதிக்க மும்பையில் உள்ள சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினார்.

இது உறுதியாக போலியோதான் என்று ஆய்வு முடிவு ஜூன் 24-ம் தேதி வந்து சேர்ந்தது. புது தில்லி உலக சுகாதார அமைப்பு அலுவலகத்திலுள்ள தொழில்நுட்ப அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தென் இந்தியாவிலிருந்து ஒழிக்கப் பட்டுவிட்டதாகக் கருதிய போலியோ நோய் திடீரென்று மறுபடியும் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில் – ஜூன் 25-ம் தேதிக்குள் – அந்தத் தொழில்நுட்ப அதிகாரி, அவர் ஒரு மருத்துவர், பெயர் சுனில் பால், உலக சுகாதார அமைப்பு (WHO), UNICEF அமைப்பு மற்றும் இந்திய அரசில் பல முக்கிய புள்ளிகளுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டார். அவர்தான் இந்த விஷயத்தை மதிப்பிட்டு முதல் அறிக்கை கொடுக்க வேண்டியவர். அவருடைய அறிக்கையில், இப்பொழுது போலியோ கர்நாடகாவில் தோன்றியிருக்கும் வட்டாரம் சுகாதாரத் துறையில், முக்கியமாக நோய்த் தடுப்பெற்ற விஷயத்தில் மிக மோசமான வரலாறு உடையது என்றும், இதற்குமுன் நடத்தப் பட்ட போலியோ தடுப்பு நிகழ்வுகளில் அதிகம் போலியோ பாதிப்பு உடையதாக கண்டறியப்பட்ட இடம் என்றும், உடனடியாக விரிவான துடைத்தெடுத்தல் செய்யவில்லை என்றால் இங்கே போலியோ வேகமாகப் பரவும் அபாயம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் நடத்தப்படும் துடைத்தெடுத்தல் என்பது ஏற்கனவே போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நம்பியிருந்த இடத்தில் புதிதாகத் தோன்றும் பொழுது நடத்தப்படும் தீவிர போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு. இது ஒரு போர்க்கால நடவடிக்கை போல் திட்டமிட்டு செயல் படுத்தப்படும். “துடைத்தெடுத்தல்” நிகழ்வுகள் மூன்றே நாள்களில் முடியும்படி திட்டமிட்டு நடத்தப்படும். அந்த மூன்று நாள்களில், அந்த வட்டாரத்தில் போலியோ நோயால் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபாயத்தில் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.

பொதுவாக போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வுகளில், பல்ஸ் போலியோ என்று நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில் அரசு சார்பாக அறிவிப்புகள் வருமே, அவைகளில் குறிப்பிட்ட நாள் அன்று ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய நம் குழந்தைகளை நாம் இருக்கும் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இடத்திற்கு (ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பள்ளி, போன்ற இடத்திற்கு) அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்துக் கூட்டி வரவேண்டும். ஆனால் துடைத்தெடுத்தல் நிகழ்வு அப்படியானதல்ல. மருத்துவக் குழுக்கள் பாதிக்கப் பட்ட இடங்களில் வீடு வீடாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

துடைத்தெடுத்தல் நடத்தப்பட வேண்டிய வட்டாரத்தின் வரைபடம் ஒன்றை இணைத்திருந்தார் சுனில் பால். அது சுமார் ஐம்பதாயிரம் சதுர மைல் பரப்பளவு. கோடைகால மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் துடைத்தெடுத்தலின் முதல் சுற்று சொட்டு மருந்து விநியோகத்திற்கு ஜூலை 27-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது. அடுத்த சுற்று அதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து நடக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இந்திய போலியோ கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி ப்ரையன் வீலர் என்ற அமெரிக்கர் இந்தத் துடைத்தெடுத்தலின் நடைமுறை விவரங்களை அதுல் கவாண்டேவிற்கு விளக்கினார். அவர் சொன்னது: இந்திய அரசு இந்த நிகழ்விற்காக ஆட்களை தேர்வு செய்து மருத்துவக் குழுக்களை அமைக்கவேண்டும், போதுமான அளவு தன்னார்வத் தொண்டர்களையும் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து சரியாகக் கொடுக்கும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். சொட்டு மருந்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிர் சாதனப் பெட்டிகளும், போதுமான வாகன வசதிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவ்வளவு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கில் 90 சதவீதத்திற்கு மேலாகக் கொடுக்கப்பட்டால்தான் துடைத்தெடுத்தல் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது, அதாவது போலியோ நோய் மேலும் பரவாமல் தடுக்கப் படும். கொடுக்கப் படவேண்டிய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப் பட்டால் மொத்த நிகழ்ச்சியும் தோல்வியுற்றது என்றே கருதப்படும்.

இவ்வளவையும் செய்ய எவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்று வீலரிடம் கவாண்டே கேட்டார். வீலரின் பதில், “திட்டப்படி சொட்டு மருந்து கொடுக்கும் வேலைக்கு முப்பத்தி ஏழாயிரம் பேர், அவர்களுக்கு நான்காயிரம் மேற்பார்வையாளர்கள், இரண்டாயிரம் வண்டிகள், பதினெட்டாயிரம் குளிர்சாதனப் பேட்டிகள் தேவைப்படும். மருந்து கொடுப்பவர்கள் வீடு வீடாகச் சென்று நாற்பத்தியிரண்டு லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டவேண்டும்.

அதுவும் மூன்றே நாள்களில்.

தொடரும்…

Advertisements

செப்ரெம்பர் 24, 2011

நச்சுச் சுழல்

முன் குறிப்பு: நச்சுச் சுழல்vicious circle – a chain of events in which the response to one difficulty creates a new problem that aggravates the original difficulty —called also vicious cycle. 

நான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உதவி மேலாளரிடம் தொலைபேசியில், “சார், நான் இப்ப இருக்கற வீட்டில் இருந்து வேற வாடகை வீட்டுக்குப் போறேன். என்னோட account-ல இருக்கற correspondence address-சை மாத்தணும். அதுக்கு என்ன செய்யணும்?”

உதவி மேலாளர்: “அது ரொம்ப simple procedure சார். Subject-ல ‘Change of Address’-ன்னு போட்டு, உங்க Customer ID number, Account number, இப்பத்து address, மாத்திப் போகப் போற address எல்லாத்தையும் mention பண்ணி ஒரு letter கொடுங்க, four to five working days-ல Head Office-லர்ந்து உங்களோட புது address-க்கு ஒரு acknowledgement letter வந்துரும்.”

நான்: “Ok, சார். Address proof எதாச்சும் கொடுக்கனுமா?”

உ.மே.: “ஓ! ஆமாம் சார். சொல்ல மறந்துட்டேன். புது address இருக்கற ration card, telephone bill அல்லது gas connection book, மூணுல எதோ ஒன்னோட Xerox copy attach பண்ணீருங்க.”

நான்: “சார், இப்பதான் வீடு confirm பண்ணியிருக்கேன். அடுத்த வாரம்தான் shift பண்ணப் போறேன். இன்னும் எதுவுமே அந்த address-க்கு மாத்தலையே. Bank account-லேர்ந்து ஆரம்பிக்கலாம்னு பார்த்தேன்…”

உ.மே.: “ஐயோ, சாரி சார். அப்டி பண்ணமுடியாது. நான் சொன்ன மூணுல ஏதாச்சும் ஒன்னாவது கொடுத்தாத்தான் official-லா ‘change of address’ பண்ண முடியும்.”

நான்: “சார், மூணு வருஷத்துக்கு முன்னால உங்க branch-ல account open பண்றப்ப இவ்ளோ strict-ஆ proof எல்லாம் யாரும் கேக்கலியே?”

உ.மே.: “சார், அப்ப இந்த ஊர்ல புதுசா எங்க bank நுழைஞ்ச time. Over strict பண்ணினா account சேர்க்கறது கஷ்டம்னு எங்க marketing மக்கள் கொஞ்சம் லூஸ்ல விட்டிருப்பாங்க. இப்ப அப்படி முடியாது சார், ரொம்ப சாரி. நீங்க வேணா ஒன்னு பண்ணுங்களேன். Gas connection easy-யா மாத்திறலாம், அதை மாத்தீட்டு எங்களை approach பண்ணுங்க, நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, ‘address change’ பண்ணிக் கொடுக்க personal-ஆ ஏற்பாடு பண்றேன்.”

நான்: “Ok சார். Thanks. Gas connection மாத்தீட்டு உங்களை மறுபடியும் contact பண்றேன்.”

சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு பத்து முறைக்கும் மேல் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்று, தொடர்ச்சியாக அவர்களின் இரண்டு தொலைபேசி எண்களும் பயனில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியாமலும், பொறுமை இழந்தும் விட்டு விட்டேன். ஓரிரு மணி நேரம் கடந்து மறுபடியும் முயன்ற பொழுது உடனடியாகத் தொடர்பு கிடைத்தது.

“Consumer number-உம், பெயரும் சொல்லுங்க சார்,” என்று எடுத்தவுடன் தொலைபேசியில் பேசிய பெண்மணியிடம் நான், “Madam, நான் gas book பண்றதுக்காக கூப்பிடலை. என்னோட வீட்டு address மாறப் போகுது, அதுக்கு என்ன formality செய்யனும்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன்,” என்றேன்.

“சார், booking மட்டும்தான் phone-ல பண்ணமுடியும். Address மாத்தறதுக்கு நீங்க office-க்கு நேர்ல வரணும். வரும்போது gas connection book-ம் கடைசியா cylinder வாங்கின ரசீதும் எடுத்துட்டு வாங்க,” என்று பொறுமையே இல்லாமல் அவசரமாகச் சொன்னவர் இணைப்பைத் துண்டிக்கும் முன் நான் குறுக்கிட்டு, “Madam, address proof ஏதாச்சும் கொடுக்கனுமா?” என்று கேட்டேன்.

சற்றே எரிச்சலுடன், “Proof இல்லாம எப்டி சார் address மாத்திக்கொடுப்போம்? Ration card, இல்லாட்டி phone bill கொண்டுவாங்க, பாத்துக்கலாம்,” என்று சொன்னவரை குறுக்கிட்டு மறுபடியும் கேள்வி கேட்கும் தைரியம் இல்லாமல் “தேங்க்ஸ் மேடம்,” என்று சொல்லி வைத்துவிட்டேன்.

சொந்த ஊரில் பெற்றோர் வீட்டில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஊருக்கு தனியாக குடி வந்த போது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து, அது கிடைக்கும் வரை அவதிப்பட்டது இன்னும் நினைவில் மலர்ந்து இருந்ததால், அந்த அட்டையில் முகவரி மாற்றுவதை கடைசியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று முதலில் முடிவு செய்தது நடக்காது போலிருக்கிறதே என்று நொந்து கொண்டேன்.

மறுபடியும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று துன்பப் படுவதற்கு முன் இருக்கும் ஒரே மாற்று வழியையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் தொலைபேசி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். ஏற்கனவே இரண்டு இடங்களில் பட்ட அனுபவம் இருந்ததால் நேரடியாக கேட்டுவிடலாம் என்று ஆயத்தமாக இருந்தேன்.

“சார், நான் அஞ்சு வருஷமா உங்க company landline-தான் use பண்ணிக்கிட்டிருக்கேன். இப்ப வீடு shift பண்றேன், phone shift பண்றதுக்கு address proof என்ன கொடுக்கணும் சார்?,” என்று கேட்டேன்.

சற்றும் தாமதமில்லாமல் பதில் வந்தது, “Ration card, இல்லாட்டி gas connection book. ரெண்டுல எதோ ஒன்னு xerox copy-யோட புது address mention பண்ணி ஒரு letter கொடுங்க சார், maximum 3 days time-ல மாத்திக் கொடுத்துருவோம்.”

நன்றி சொல்லிவிட்டு பெருமூச்சுடன் தொலைபேசியை வைத்தேன். இனி வேறு வழி இல்லை, குடும்ப அட்டையில்தான் முகவரியை மாற்ற வேண்டும்.

அடுத்த நாள் காலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் போய் அங்கே உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் (Taluk Supply Office) இருந்த எழுத்தரிடம் விவரம் கேட்டேன்.

எழுத்தர்: “சொந்த வீடா, சார்?”

நான்: “இல்லைங்க சார், இப்ப இருக்கறதும் வாடகை வீடு, போகப் போறதும் வாடகை வீடுதான்.”

எ: “ஓ! அப்ப சொத்து வரி ரசீதெல்லாம் இருக்காது. சரி, புதுசா போகப் போற வீட்டு address-க்கு வேற ஏதாவது proof வச்சிருக்கீங்களா?”

நான்: “சார், அது இல்லைன்னுதான் இப்ப ration card-ல address மாத்திக்கலாம்னு உங்ககிட்ட வந்திருக்கேன்.”

எ: “சார், எங்க rules படி adress proof-க்கு voter ID, சொத்து வரி ரசீது, EB bill, phone bill, bank passbook, இல்லாட்டி gas connection book, ஏதாவது proof வேணும் சார். நீங்க ஒன்னு பண்ணுங்க, gas connection easy-யா மாத்தீறலாம், அதுல மாத்தீட்டு வாங்க, அதை வச்சு ஒரே நாள்ல ration card-ல மாத்திக் கொடுத்துடறேன்.”

எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

பின் குறிப்பு: தூய தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும். நடந்ததை நடந்தபடியே பதிக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியதால் பேச்சு வழக்கில் உள்ள ஆங்கிலம் கலந்த தமிழிலேயே எழுதினேன்.

ஓகஸ்ட் 21, 2011

ரேடியாலஜி உயர் மருத்துவக் கல்விக்கு நுழைவு நன்கொடை

மூன்று நாளுக்கு முன் ட்விட்டரில் “மகாராஷ்டிரத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ரேடியாலஜி (நுண்கதிர் இயக்க மருத்துவம், எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்டு, சிடி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் பற்றிய மருத்துவத்துறை) மேற்படிப்புப் படிக்க இடம் (சீட்) ஒன்றுக்கு ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் நுழைவு நன்கொடை வாங்கியுள்ளார்கள்.” என்று ஒரு செய்திச் சுட்டி கொடுத்தார் நண்பர் அலெக்ஸ் பாண்டியன்.

அதைப் பார்த்த நண்பர் முரளி, “நம்ம ஊரு ரேட் என்ன சார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நம்மூரில் கல்லூரியைப் பொறுத்து 80 இலட்சத்திலிருந்து 2 கோடி வரை ஆகிறது,” என்று பதில் சொன்னேன்.

என் பதிலைப் பார்த்த பின் நண்பர்கள் முரளியும்  கோகுலும், படிப்பதற்குக் கொடுத்த பணத்தைச் சம்பாதிக்க எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்டார்கள். இது ஒரு இக்கட்டான கேள்வி என்று எண்ணி ட்விட்டரில் தனிச் செய்தியில் (டி.எம்.) கேட்டார் நண்பர் முரளி. இதில் இக்கட்டெல்லாம் ஒன்றும் இல்லை, பொதுவெளியில் பேசப்படவேண்டிய விஷயம்தான், நான் பதிவில் விரிவாக எழுதுகிறேன் என்று சொன்னேன்.

தனியார் மருத்துவ மேற்படிப்புகளில் ரேடியாலஜிக்குத்தான் அதிகம் நுழைவு நன்கொடை வசூலிக்கப்படுகிறது என்றும், சில கல்லூரிகளில், சில வருடங்களாகவே ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப் படுகிறது என்பதும் மருத்துவத் துறையில் பரவலாக அறிந்த விஷயம்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இந்த விஷயத்தை மையமாக வைத்து இந்திய ரேடியாலஜி சங்கத்தின் ஆய்விதழில் “The business of radiology” என்ற தலையங்கம் வெளியானது (இங்கே ஆங்கிலத்தில் படிக்கலாம்). அந்தத் தலையங்கத்தில் உள்ள முக்கியமான கருத்துக்களையும், அது வெளியானபின் வந்த வாசகர் கடிதங்களிலிருந்த கருத்துக்களையும் இங்கே என் கருத்துக்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மருத்துவ இளநிலை மற்றும் உயர்நிலை பட்டப் படிப்பிற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெரும் தொகைகள் நுழைவு நன்கொடை (கேபிடேஷன் ஃபீஸ்) ஆகப் பெறப் -பிடுங்கப்- படுவது பரவலாகத் தெரிந்த விஷயம்தான். இந்தப் பழக்கத்தின் நியாய-அநியாயத்தை நான் இங்கே விவாதிக்க விரும்பவில்லை. பரவலாக நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு மற்றவையை கவனிப்போம்.

எண்பது இலட்சத்திலிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுத்து படிக்கும் ரேடியாலஜி மருத்துவ மேற்படிப்பில் வருமானம் எவ்வளவு வரும் என்பதை முதலில் பார்ப்போம்.

ரேடியாலஜி பற்றி மேலோட்டமாகத் தெரிந்தவர்களுக்கு – இதில் ரேடியாலஜி நிபுணர்கள் அல்லாத மருத்துவர்களும் அடக்கம் – இந்தத் துறையில், சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் எல்லாம் வைத்திருந்தால் ஏனைய மருத்துவத் தனித்துறைகளை விட வருமானம் அதிகம் வரும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது.

சி.டி ஸ்கான், எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரமெல்லாம் போட்டுத் தனியாக தொழில் தொடங்க முதலீடு அதிகம் தேவை. சில கோடி ரூபாய் முதலை, நாமே போடாவிட்டாலும், வங்கியில் பெரிதாகக் கடன் வாங்க வேண்டும். பெரிய முதலீடு செய்து ஆரம்பிக்கும் தனி ரேடியாலஜி தொழிலில் குறைந்த காலத்தில் இலாபம் பார்க்க முடியாது. முதலீட்டுக் கடன் தொகையைத் திருப்பித் தருவது மட்டுமல்லாமல், ஈட்டுறுதிக் காலம் (warranty period) முடிந்தபின் வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தத்திற்கு (annual maintenance contract) பல இலட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும். தொழில் நன்றாக நடந்தால் நீண்ட – சுமார் ஐந்திலிருந்து ஏழு வருட – காலகட்டத்தில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் இலாபம் வரும் வாய்ப்பு உள்ளது (10 – 15% return on investment). அதாவது பங்குச் சந்தையில் இணையுதவி நிதிகளில் (index mutual funds) வரும் இலாப அளவுதான் நன்றாக நடக்கும் ரேடியாலஜி தனித் தொழிலிலும் வரும்.

இது நன்றாக நடக்கும் ரேடியாலஜி தொழிலில் வரும் இலாபக் கணக்கு என்று இரண்டு முறை நான் சொல்லிவிட்டதை கவனிக்கவேண்டும். குறிப்பிட்டு இதை நான் சொல்லுவதன் நோக்கம், இந்தத் தொழிலில் நுழையும் அனைவரும் இலாபம் பெறுவதில்லை என்பதை எடுத்துக் காட்டத்தான். இந்தத் தொழிலில் போட்டி அதிகம். பல தனியார் ரேடியாலஜி மையங்களில் முதலீடுக்கடனைத் திருப்பிச்செலுத்தவும், அன்றாட மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடு செய்யும் அளவிற்குத்தான் வருமானம் வருகிறது என்பதே உண்மை. பல தனியார் ரேடியாலஜி மையங்களில் வாங்கிய இயந்திரங்களுக்கு மதிப்பிறக்கம் (depreciation) செய்வதால் மட்டுமே கணக்கில் இலாபம் காட்ட முடிகிறது.

மேலே பார்த்தது தொழில்முனைவோராக உள்ள மருத்துவர்களின் கதை. சொந்தத் தொழிலாக முதலீடு செய்யாமல் சம்பளத்திற்கு இருக்கும் ரேடியாலஜி நிபுணர்களின் வருமானம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் பார்ப்போம். சுமார் எண்பது சதவிகித (80%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு அவர்கள் வேலையில் இருக்கும் மருத்துவமனை அல்லது ஸ்கான் மையத்தையும், ஊரையும் பொறுத்து ஒரு இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் வரை மாத வருமானம் வர வாய்ப்பு உள்ளது. இது சராசரியாக தனியார் துறையில் மற்ற மருத்துவ தனித்துறை நிபுணர்கள் சம்பாத்தியத்திற்கு ஈடாகத்தான் உள்ளது. மீதம் உள்ள இருபது சதவிகித (20%) ரேடியாலஜி நிபுணர்களுக்கு, அவர்களின் தனித் திறமை, அனுபவம், வேலை செய்யும் இடம், இவற்றைப் பொறுத்து இதை விட அதிக வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

இவ்வளவு நுழைவு நன்கொடை கொடுத்து ரேடியாலஜி மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களை இரண்டு வகைப் படுத்தலாம்.  மேலே குறிப்பிட்ட படி இந்தத் தொழிலில் வரும் வருமானத்தைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாதவர்கள் ஒரு சாரர். இன்னொரு சாரர் பெரும்பாலும் ரேடியாலஜி நிபுணர்களின் அல்லது பெரிய மருத்துவமனை / ஸ்கான் மையங்களின் உரிமையாளர்களின் பிள்ளைகள். இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் இந்தப் பெரும் தொகை கொடுப்பது தொழில் முதலீட்டுக்கு ஈடாகும்.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நுழைவு நன்கொடையாகக் கொடுத்து ரேடியாலஜி பட்டம் வாங்கிவிட்டு, போட்ட முதலீட்டிற்குத் தக்க இலாபத்துடன் சம்பாதிப்பது எளிதல்ல. இதை பொதுமக்களும், ரேடியாலஜி படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் இளநிலை மருத்துவப் பட்டதாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த குட்டி விவாதம் ட்விட்டரில் நடந்து கொண்டிருந்த பொழுது “ஏன் ரேடியாலஜியை முன்வைத்து கேட்கிறார்கள் (தாக்குகிறார்கள்)” என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு பதில்: இப்பொழுது உள்ள மருத்துவ மேற்படிப்பு நுழைவு நன்கொடைகளில் அதிகமாக உள்ளது ரேடியாலஜிக்கே. அதனால்தான் இத்துறையைச் சார்ந்தவர்கள் முன்வைக்கப்படுகிறது. ரேடியாலஜிக்கு கோரப்படும் தொகைக்கு ஓரளவு ஒப்பிடக்கூடிய அளவில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும்கூடப் பெறப்படுகிறது.

இது முழுமையான விவாதம் அல்ல. இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எழுதியுள்ளேன். நியாயமான கேள்விகள் இருந்தால் கேளுங்கள். பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

[எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்திய சொக்கன், இலவசக்கொத்தனார் இருவருக்கும் நன்றி.]

மார்ச் 22, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 3

முதல் பாகம் இங்கே உள்ளது.

இரண்டாம் பாகம் இங்கே உள்ளது.

எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொடுத்த நண்பர் இலவசக் கொத்தனாருக்கு மனமார்ந்த நன்றி.

எச்சரிக்கை: இது வரை நடந்தது… கதைச் சுருக்கம்… என்பது போல சென்ற பகுதிகளில் சொன்னதின் சுருக்கத்தைத் தந்துவிட்டு மேலும் தகவல்கள் தரலாம் என்பது என் எண்ணம். எனவே இது கொஞ்சம் நீளமான பாகமாக இருக்கும். அடுத்த பகுதியில் என் தனிப்பட்ட கருத்துகளைத் தருவதுடன் இந்தத் தொடர் முடியும் என்பது மகிழ்ச்சி தரும் அறிவிப்பு.

இந்தப் பதிவுத் தொடரின் தொடக்கத்தில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி “தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.“ என்று எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் பின்னூட்டமிட்ட பதிவர் பத்மஹரி சில நாள் முன் (மார்ச் 14, 15) அவர் எழுதிய இரண்டு பதிவுகளுக்குச் சுட்டிகள் கொடுத்தார். அவை இரண்டையும் படியுங்கள்:

1. ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்.

2. அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

மார்ச் 11, வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த பயங்கர ஆழிப்பேரலையால் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ப்ரச்சினை ஆரம்பித்தது. செயல்பட்டுக் கொண்டிருந்த  மூன்று உலைகளில் வெப்பத்தைத் தணிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

மார்ச் 12, சனிக்கிழமை மாலை 1-ம் உலையில் ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றும் அன்றிரவில் இருந்து வெப்பத்தைத் தணிக்க கடல் நீரை உபயோகித்தனர் என்றும் பார்த்தோம்.

மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அதே நிலைதான் தொடர்ந்தது. கடல் நீரில் போராக்ஸ் எனும் உப்பையும் கலந்து செலுத்திக்கொன்டிருந்தார்கள். இந்த போராக்ஸ் (Borax, sodium borate) உப்பு சூடாக இருக்கும் மூலக்கருவிலிருந்து வெளியாகும் நியூட்ரான்களை (neutrons) உட்கொள்ளும் தன்மை உடையது. அதனால் மூலக் கருவில் மீண்டும் தொடர்வினை தொடங்குவதைத் தடுக்கும்.

மார்ச் 14, திங்கள்கிழமை முற்பகல் சுமார் 11 மணிக்கு 3-ம் உலையில் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பதினோரு பேர் காயமானார்கள், அருகில் உள்ள 2-ம் உலையின் குளிர்விக்கும் சாதனங்கள் சிலவும் சேதமாயின. 2-ம் உலையின் கருவில் நீர் வற்றிவிட்டதால் மூலப்பொருள் தண்டுகளும் கட்டுப்படுத்தும் தண்டுகளும் சில அடி உயரத்திற்கு நீர் காப்பற்றுத் திறந்த வெளியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் 2-ம் உலைக்குள்ளும் கடல் நீரை செலுத்த ஆரம்பித்தார்கள்.

மார்ச் 15, செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணிக்கு 2-ம் உலையிலும் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. நான்கு நாள்களில் நிலையத்தில் நடந்த மூன்றாம் வெடி விபத்து இது. இதைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் கதிரியக்க அளவு அபாயகரமாக உயர்ந்தது. கரையோர வாயுமண்டலத்தில் கதிரியக்க அளவு அதிகரித்ததால் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தள்ளிச் சென்றன. நெருக்கடியை சமாளிக்க ஐம்பது பேரை மட்டும் விட்டுவிட்டு நிலையத்தின் மற்ற அனைத்து ஊழியர்களையும் (சுமார் 800 பேர்) வெளியேற்றினார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், உலை 4-ல் கழிவுற்ற மூலத்தண்டுகளைத் தேக்கி வைத்திருக்கும் தொட்டியில் (spent fuel storage/cooling pool) தீ பிடித்தது.

4-ம் உலைதான் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்ட பொழுது செயல்பாட்டில் இல்லையே அங்கே எப்படி பிரச்சனை ஆனது? அதற்கு இன்னொரு சின்ன விளக்கம் தேவை.

அணு உலை அறையின் உள்ளே வைத்திருக்கும் மூலப்பொருள் காலப்போக்கில் நீர்த்துப் போகும். கழிவுற்ற மூலப்பொருளை ஏறக்குறைய வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவார்கள். உள்ளே இருக்கும் எல்லா மூலத்தண்டுகளையும் ஒரே சமயத்தில் மாற்ற மாட்டார்கள். சுமார் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மாற்றுவார்கள். வெளியே எடுக்கப்படும் கழிவுற்ற மூலப்பொருளில் இன்னும் கதிரியக்க பொருட்கள் இருப்பதால் அத்தண்டுகளை உருக்கு-கான்க்ரீட்டால் ஆன பிரத்தியேகத் தொட்டிகளில் தேக்கி வைப்பார்கள். இந்த நிலையத்தில் உள்ள ஆறு உலைகளிலும் உலை அறைக்கு மேலே உள்ள தளத்தில் இந்தத் தொட்டிகள் இருக்கின்றன. இவை அல்லாமல் ஏழாவதாக ஒரு தனித் தொட்டியும் சற்று தள்ளி இருக்கிறது.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

தொட்டியில் தேக்கி வைத்திருக்கும் மூலத் தண்டுகளுக்கு மேல் குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து முப்பது அடிக்கு நீர் இருக்க வேண்டும். நீர் அளவு குறைந்தால் தண்டுகளில் மீண்டும் கருப்பிளவு தொடங்கி விடும் அதனால் கரு உருகும் அபாயம் உண்டாகும்.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

தேக்கத் தொட்டிகளுக்குள் எவ்வளவு தண்டுகள் இருக்கின்றன, அவை எவ்வளவு நாள் முன் உலையிலிருந்து எடுக்கப்பட்டன என்பதைப் பொறுத்து தொட்டியின் வெப்ப நிலை மாறும், அதற்கேற்றபடி தொட்டியில் நீர் நிலையை கண்காணிக்க வேண்டும்.

இந்தப் பதிவுத் தொடரின் முதல் பாகத்தில் “செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).” என்று எழுதியிருந்தேன். 4-ம் உலை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்ததால் அதிலிருந்த அனைத்து முலப்பொருள் தண்டுகளையும் வெளியே எடுத்து தேக்கத் தொட்டியில் வைத்திருந்தார்கள். சில மாதம் முன் வரை உபயோகத்திலிருந்ததாலும், அதிக எண்ணிக்கையில் இருந்ததாலும் இந்தத் தொட்டியில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. தொட்டிக்குள் நீர் அளவு குறைந்ததை உலையில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. மற்ற இடங்களில் வெப்பமும் வெடியுமாக களேபரம் நடந்து கொண்டிருந்ததால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் போலும். என்னதான் சாக்கு சொன்னாலும், இது கவனக்குறைவு காரணமான, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விபத்து.

இந்தத் தீ விபத்தால் நேரடியாக காற்றுமண்டலத்தில் கதிர்வீச்சு வெளியாகியுள்ளது என்று சர்வதேச அணு சக்தி அமைப்பு (IAEA) செய்தி வெளியிட்டது. இந்நிலையில் கதிர்வீச்சு அதிகமானதால் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மேலே வானத்தில் முப்பது கி.மீ. சுற்றளவிற்கு விமானங்கள் பறப்பதை தடை செய்தது.

4-ம் உலையின் தேக்கத் தொட்டியில் பற்றிய தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் தேக்கத்தொட்டியில் மீதமுள்ள நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது என்றும் செவ்வாய்க்கிழமை மாலை அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் செயல்பாட்டில் இல்லாத 5-ம் உலையில் நீர் நிலை குறைந்து கொண்டிருப்பதாகவும் சரியாக இயங்கிக்கொண்டிருக்கும் 6-ம் உலையின் டீசல் மின் இயற்றியை வைத்து 5-ம் உலைக்கும் நீர் செலுத்தலாம் என்று திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மார்ச் 16, புதன்கிழமை அன்று காலை 4-ம் உலையின் மேல் தளத்தில் மீண்டும் தீப்பிடித்து அது அணைக்கப்பட்டது. ஒன்று மற்றும் மூன்றாம் உலைகளிலிருந்து வெள்ளைப் புகை அல்லது நீராவி வந்ததாலும் நிலையத்திற்குள் கதிர்வீச்சின் அளவு அதிகரித்ததாலும், மூலப்பொருள் வைக்கப்பட்டிருக்கும் அறைச்சுவர்களில் விரிசல் விட்டிருக்குமோ என்ற அச்சம் இருந்தது. நிலையத்தில் மீதமிருந்த ஐம்பது ஊழியர்களும் சுமார் ஒரு மணி நேரம் வெளியேற்றப்பட்டனர்.

ஆழிப்பேரலையால் சேதமடைந்த சாலைகளை புல்டோசர்கள் வைத்து சரி செய்து உலைகளுக்குள் நீர் இறைக்க தீயணைப்பு வண்டிகளையும் காவல் துறை உபயோகிக்கும் நீர் பீரங்கி வண்டிகளையும் கொண்டு வந்தார்கள்.

புதன் மாலை 3-ம் உலையின் தேக்கத் தொட்டியிலும் நீர் குறைந்து கொண்டிருப்பதாக அறிவித்தார்கள். புதன் இரவு 11 மணிக்குமேல் கதிர்வீச்சு அளவு குறைந்ததால் மேலும் 130 ஊழியர்கள் நிலையத்தினுள் வந்தார்கள்.

மார்ச் 17, வியாழக்கிழமை காலை விமானப் படை ஹெலிகாப்டர்களை வைத்து கடல் நீரை மேலிருந்து உலைகளின் மேல் ஊற்றினார்கள். நிலையத்தில் 22 பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக TEPCO அதிகாரிகள் அறிவித்தார்கள்.

மார்ச் 18, வெள்ளிக்கிழமை அன்று நிறுவனம் இந்த அணு நிலைய விபத்தின் அளவை நான்காம் நிலையிலிருந்து ஐந்தாம் நிலைக்கு உயர்த்தியது (சர்வதேச அணு சக்தி விபத்துச் சம்பவ அளவீடு இங்கே உள்ளது). அதாவது அமெரிக்காவில் 1979-ல் நடந்த த்ரீ மைல் ஐலன்ட் விபத்தின் நிலைக்கு இந்த விபத்தின் நிலையையும் உயர்த்தினார்கள். 1986-ல் செர்னோபிலில் நடந்த விபத்துதான் உலகிலேயே மோசமானது, அதன் அளவு 7.

மார்ச் 19, சனிக்கிழமை நிலைமை மோசமாகவில்லை. உலைகளிலும் தேக்கத் தொட்டிகளிலும் வெப்பத்தைத் தணிக்க முயற்சிகள் தொடர்ந்தன. நிலையத்திற்கு மின்சார வாரிய க்ரிடிலிருந்து மின்சாரம் கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்ந்தன.

மார்ச் 20, ஞாயிற்றுக்கிழமை உலைகள் 5 மற்றும் 6-ல் மின் வாரிய மின்சாரம் மற்றும் தடையில்லாமல் கிடைப்பதால் அங்கு இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கை வந்தது. இந்நிலையில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் உணவுப் பொருட்களில் (பால் மற்றும் காய்கறிகளில்) கதிரியக்கத் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மார்ச் 21, திங்கள்கிழமை முடியும் வரை மற்ற நான்கு உலைகளுக்கு இன்னும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கவில்லை. உலைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வேலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விபத்து நடந்து ஒரு வாரம் கழிந்தபின் ஃபுகுஷிமா நிலையத்தின் தோற்றம்…

[படம் இங்கிருந்து எடுத்தது]

உலைகளின் தற்போதைய நிலைமை…

உலை 1 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கருவில் சுமார் 70 சதவிகிதம் சேதம். தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 2 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. வெளிப்புறக் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதம். மூலக்கருவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு சேதமாகியிருக்கலாம் என்று சந்தேகம். உலை அழுத்த அறை சேதமாகியிருக்கிறது. தேக்கத் தொட்டியைப் பற்றி தகவல் இல்லை. கடல் நீர் செலுத்தியுள்ளார்கள்.

உலை 3 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கரு சேதமாகியிருக்கிறது, அளவு தெரியவில்லை. தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 4 – செயல்பாட்டில் இல்லை. ஆனால் தேக்கத் தொட்டியில் தீ விபத்து. அதனால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

தொடரும்…

மார்ச் 19, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 2

முதல் பாகம் இங்கே உள்ளது.

எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார், வெற்றிராஜ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

ஃபுகுஷிமாவில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) பிற்பகல் தொடங்கி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி முக்கியமான விளக்கத்தை (தமிழ்ப் பதிவுலகில் பரவலாக டிஸ்கி என்று சொல்லப்படும் disclaimer) முதலில் பார்க்கலாம்.

எட்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சரியான செய்தி மூலங்கள் இல்லை என்பதே உண்மை. ஜப்பான் அரசு கொடுக்கும் செய்தி அறிக்கைகள் மற்றும் சில சர்வதேச அணுசக்தி அமைப்புகள் கொடுக்கும் செய்திகள், விளக்கங்களையும் வைத்துத்தான் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. யார் சரியான தகவல்கள் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க சாமானியரால் முடியாது. இந்நிலையில் இங்கே நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் சரியானவைதான் என்று என்னால் உறுதியளிக்க முடியாது.

இந்தப் பதிவுத்தொடரின் முதல் பாகத்தில் “ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.” என்று எழுதியிருந்தேன். “இப்பொழுது குழப்பம் இல்லை” என்பது உண்மை. ஆனால் சுனாமி தாக்கியதில் அங்கேயும் பிரச்சனை ஆனது. இரண்டு நிலையங்களையும் சுனாமியிலிருந்து பாதுகாக்க கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் சுவர் எழுப்பியிருந்தார்கள். இருபது அடிக்குக் குறைவான பேரலைகள் இந்தச் சுவர்களைத் தாண்டி நிலையத்தைத் தாக்க முடியாது. ஆனால் அன்று தாக்கிய பேரலைகள் முப்பது அடிக்கும் மேலான உயரத்தில் இருந்ததால் சுவர்களைத் தாண்டி இரண்டு நிலையங்களையும் தாக்கின. ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் குளிர்ந்த நீர் கொண்டுவரும் பம்புகள் (முதல் பாகத்தில் போட்டிருந்த இந்தப் படத்தில் 16 எண்ணிட்டது) பேரலை தாக்குதலால் பாதிக்கப்பட்டு செயலிழந்தன. இதனால் அங்கே உள்ள நான்கு உலைகளிலும் வெப்பத்தைத் தணிக்கமுடியவில்லை. ஆனால் 48 மணி நேரத்தில் மாற்றுப் பம்புகளை வைத்து பிரச்சனை பெரிதாகாமல் தடுத்துவிட்டார்கள்.

இந்த எட்டு நாள்களில் நடந்த சம்பவங்களை காலக்கோடுகளாக விக்கிப்பீடியாவில் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனை விபரங்களையும் முழுமையாக என்னால் விளக்க இயலாது. அறிந்துகொள்ள விரும்புவோர் அங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.

CNN வலைத்தளத்தில் விக்கிப்பீடியாவை விட எளிமையாக இருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் விவரிக்கிறேன்.

[முதல் பாகத்திலிருந்து தொடர்ச்சி] மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் (units 1, 2, 3) செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன. மூலப்பொருள் மையத்தில் தொடர்வினை நிறுத்தப்பட்டபின் வெளியாகும் வெப்பத்தைத் தணிக்க நீர் சுற்றோட்டப் பம்புகளை இந்த மின் இயற்றிகள் செயல்படுத்திக்கொண்டிருந்தன.

அப்பொழுதே இரண்டு உலைகளில் (1 & 2) வெப்பத்தைக் குறைப்பதில் பிரச்சனை இருப்பதாக இந்த நிலையத்தை இயக்கும் டோக்கியோ மின் வாரியம் (Tokyo Electric Power Company, TEPCO) மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் சேதமின்றித் தப்பித்தது என்றும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது என்றும் ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நெருக்கடி நிலை மின்கலங்களைக் கொண்டும் (emergency battery backup), “mobile power units” – நகர்த்தக்கூடிய மின் இயற்றிகளைத்தான் (portable generators) வைத்து உலைகள் 2, 3-ல் ஓரளவு நிலைப்படுத்தியிருக்கிறார்கள் (stabilized). ஜப்பான் ராணுவம் நிலையத்திற்கு மின்கலங்களைக் (batteries) கொண்டு சென்றதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் உலை 1-ல் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது.

ஜப்பான் அரசின் அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவனத்தின் நெருக்கடி நிலை தலைமை அலுவலகம் (Emergency Headquarters of the Nuclear & Industrial Safety Agency – NISA) அந்நாட்டில் உள்ள ஐம்பத்தைந்து அணு உலைகளின் நிலவரத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

அன்று மாலை ஜப்பான் அரசு அணு சக்தி அவசரநிலை அறிவித்து ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மூன்று கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றவும் மூன்றிலிருந்து பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும் ஆணை பிறப்பித்தது. 1-ம் உலையில் வெப்பத்தைத் தணிக்க முடியாததால் அழுத்தம் சாதாரணமாக இருப்பதைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருப்பதாகவும், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் TEPCO நிறுவனம் அறிவித்தது. கதிரியக்கக் கசிவு (radioactive leak) இருப்பதாக அறிவிப்பு எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை.

சில ஊடகங்களில் நிலையத்திற்கு அருகில் வாழும் இருபத்தி இரண்டு பேருக்குக் கதிரியக்கக் கசிவுத்தாக்கம் (radiation exposure) ஏற்பட்டிருப்பதாகவும், உலை ஊழியர்கள் மூன்று பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் (radiation sickness) செய்திகள் வந்தன.

மார்ச் 12, சனிக்கிழமை அதிகாலையிலிருந்து உலை 1-ல் கதிர் வீச்சு அளவு அதிகரித்து வருவதாகவும் கதிரியக்க கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வந்தன. கட்டுப்படுத்த முடியாத வெப்பத்தினால் மூலப்பொருள் மையத்தைச் சுற்றி உள்ள நீர் கொதித்து நீராவியாகி உலை அறையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அழுத்தத்தைக் குறைக்க சனிக்கிழமை முற்பகல் இரண்டு முறை நீராவியை வெளியிட்டார்கள் (venting). இதனால் சிறிதளவு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது.

சனிக்கிழமை பிற்பகல் ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆரம்பித்தது ஜப்பான் அரசு. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு NISA வெளியிட்ட அறிக்கையில் சிறிதளவு சீஸியம் (radioactive Cesium) கசிவு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். எதனால் என்று விபரம் சொன்னதாகத் தெரியவில்லை. சீஸியம் கசிவு ஏற்பட்டுள்ளது என்றால் உலையில் மூலப்பொருள் நீர்காப்பற்று திறந்தவெளியில் இருந்திருக்க வேண்டும் (uncovered fuel core) அல்லது அணுக்கரு உருக ஆரம்பித்திருக்கவேண்டும் (core meltdown) என்பதே அனுமானம்.

சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் திடீரென்று 1-ம் உலையின் வெளிப்புறக் கட்டிடத்தின் கூரை வெடித்துச் சிதறியது. உலை ஊழியர்கள் நான்கு பேர் இந்த வெடி விபத்தில் காயமானார்கள். அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இதைப் பற்றி பேசுகையில் கதிரியக்க வாயுக்கள் எதுவும் கசியவில்லை என்றும் நீராவி அழுத்தம் அதிகமானதால்தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டது என்றும், கட்டிடத்தின் உள்ளே உலையின் அழுத்த அறைக்கு சேதாரம் ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னார்களாம். பின்னர் வந்த செய்திகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களும் அந்த வெடி விபத்து நீராவியால் ஆனது அல்ல என்றும் அது ஹைட்ரஜன் வெடி விபத்து என்றும் கூறின.

[படம் இங்கிருந்து எடுத்தது]

இவ்விடத்தில் ஹைட்ரஜன் வெடி விபத்து என்றால் என்ன என்று ஒரு சிறு விளக்கம் தேவை. முதல் பாகத்தில் உலையின் பாகங்களை விளக்கும் பகுதியில் அணுசக்தி மூலப்பொருட்கள் சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி இருப்பார்கள் என்று பார்த்தோம். உலை செயல்பாட்டை நிறுத்தியபின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டோம். வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை என்றால் என்ன ஆகும் என்று இப்பொழுது பார்ப்போம். மூலக்கருவில் வெப்பம் சுமார் 1200 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால் ஜிர்க்கோனியம் உருகி சுற்றி இருக்கும் நீராவியுடன் கலக்கும். ஜிர்க்கோனியம் நீராவியில் (steam – H2O) இருக்கும் ஹைட்ரஜனை வெளிப்படுத்திவிட்டு ஆக்சிஜனுடன் சேர்ந்து ஜிர்க்கோனியம் டையாக்சைடு ஆக மாறும். உலை அழுத்த அறையில் அழுத்தத்தை குறைக்க நீராவியை வெளியே விட்டார்கள் என்று மேலே பார்த்தோம். அப்படி வெளிப்படும் நீராவியுடன், ஹைட்ரஜன் வாயுவும் இருக்கும். அழுத்த அறைக்கு வெளியே இருக்கும் வெளிப்புறக் கட்டிடத்திலும் நீராவி மற்றும் ஹைட்ரஜன் அழுத்தம் அதிகமானால், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் கலந்து பெரிதாக வெடிக்கும்.

இங்கே நாம் முக்கியமாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வெடி விபத்திற்கு காரணம் ஹைட்ரஜன்தான் என்றால், அதிகாரத்தரப்பில் சொன்னது முற்றிலும் பொய் என்று நிரூபணமாகும். ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றாலே மூலக்கரு (fuel core) பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். அதாவது குழாயிலிருந்து வெளியே வந்து நீராவியுடன் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மூலக்கரு அல்லது கிளர்மின் விளைவுப் பொருட்கள் (radioactive decay products from fuel core) கலந்த நீராவிதான் வெளியே வந்திருக்கவேண்டும். ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது உலை ஊழியர்கள் நீராவி அழுத்தத்தைக் குறைக்க கசிய விட்டதால்தானா அல்லது உலை அழுத்த அறை சுவர்களில் விரிசல் ஏதாவது உள்ளதா என்ற சந்தேகமும் எழ வேண்டும்.

இந்த வெடி விபத்து நடந்த பின் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு இருபது கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை ஜப்பான் அரசு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியடவில்லை.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அதிகாரிகள் உலை 1-ல் வெப்பத்தை தணிக்க நேரடியாக கடல் நீரை உள்ளே செலுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவே நிலைமையின் தீவிரத்தை விவரமறிந்த பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்கியது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்புநீரை உலைக்குள் செலுத்தினால் அதுவே உலைக்கு சாவு மணி என்று விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அதற்குப்பின் அந்த உலையை உபயோகிக்க முடியாது.

தொடரும்…

மார்ச் 18, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 1

ஜப்பானில் ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட விபத்தும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

இணையம், செய்தித்தளங்கள் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுகள் பலவற்றிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி தமிழில் எழுதலாம் என்று இந்த முயற்சி.

முதலில் இந்த இடம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்…

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.

மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது.

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்திற்கு முழு பொறுப்பும் இந்த ஆழிப்பேரலைதான். அதைப் பார்க்கும் முன் இன்னொரு சின்ன விளக்கம்.

செய்திகளில் பல்வேறாக ஃபுகுஷிமா டாய் இச்சி (Fukushima Dai-ichi) அல்லது ஃபுகுஷிமா 1 என்று இந்த நிலையத்தின் பெயர் வருகிறது. ஃபுகுஷிமா என்ற பெயரில் இரண்டு அணு மின் நிலையங்கள் உள்ளன. விபத்து நடந்திருப்பது ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் (டாய் இச்சி என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்று – விக்கிப்பீடியாவில் படித்தேன்). இதற்கு சுமார் 11 கி.மீ. தெற்கே ஃபுகுஷிமா இரண்டாம் நிலையம் உள்ளது (Fukushima Dai-ni; டாய் நி = இரண்டு).

 

[படங்கள் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் ஆறு (6) அணு உலைகள் உள்ளன அதில் நான்கு பழைய உலைகள் (Nuclear Plants 1, 2, 3 & 4) அருகருகே இருக்கும் ஒரு தொகுப்பாகவும், இரண்டு புது உலைகள் (Nuclear Plants 5 & 6) சற்றே தள்ளியும் அமைந்துள்ளன.

[படம் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

செய்திகளில் 1, 2, 3, 4 என்று வரும் எண்களிட்டு வரும் உலைகளை காண்பிக்க இன்னொரு படம்.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன.  இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.

[படம் என் மருத்துவப் பதிவுலக நன்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் டோக்கியோ நகரப் பகுதியிலிருந்து இந்த அணு மின் நிலையம் சுமார் 225 கி.மீ. தொலைவில்தான் உள்ளது (முதல் படத்தைப் பார்க்கவும்).

நான் பார்த்த பல ஆங்கில வலைதளங்களில் எளிதாகவும் சாமானியருக்குப் புரியும்படியாகவும் இருந்தது நில இயல் (geology) துறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பதிவர் ஈவ்லின் மெர்வைன் தன் வலைப்பூவில் (Georneys by Evelyn Mervine) வெளியிட்டிருக்கும் தொடர் பதிவுகள்தான். ஈவ்லின் அவர் தந்தையை தொலைபேசியில் பேட்டி கண்டு அந்த உரையாடல்களை தொடர் பதிவுகளாக வெளியிட்டுள்ளார். ஈவ்லினின் தந்தை மார்க் மெர்வைன் ஒரு அணுமின் துறை பொறியாளர், பல வருடங்கள் அமெரிக்க கடற்படையில் அணுமின் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் தனியார் துறை அணு உலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

அந்த ஆங்கில உரையாடல்கள் மற்றும் எழுத்துப்படிகளை இங்கே கேட்டு / படித்துக் கொள்ளலாம்.

இடம் எங்கே என்று பார்த்தாயிற்று. இனி அணு மின் நிலையம் என்றால் என்ன என்றும் இந்த நிலையத்தின் செயல்பாடு பற்றியும் பார்ப்போம்.

மிக எளிமையாகச் சொன்னால் அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்தான் அணு மின் நிலையம்.

மின்உற்பத்தி பல வகையாகச் செய்யலாம். உதாரணத்திற்கு மேட்டூர் அணையில் நீராற்றலை வைத்து மின்உற்பத்தி செய்கிறார்கள். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை (உம். நிலக்கரி) எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவியை உற்பத்தி செய்து, நீராவி உருளையை (steam turbine) இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் இயற்றியிலிருந்து (generator) மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

நிலக்கரியை எரித்து நீராவி உற்பத்தி செய்வதற்கு பதிலாக அணுக்கருப் பிளவிலிருந்து (nuclear fission) வெளியாகும் அதீத வெப்பத்தை வைத்து நீராவி உற்பத்தி செய்வதே அணு மின் நிலையம்.

அணுக்கருப் பிளவு ஏற்படும் இடத்தை அணு உலை (Nuclear Reactor) என்கிறோம். இதை வைத்து மின்உற்பத்தி செய்யும் இடத்தை அணு மின் நிலையம் (Nuclear Power Plant/Station) என்கிறோம். அணு உலைகளில் பல வகைகள் உள்ளன அதில் கொதிநீர் உலைகள் (Boiling Water Reactor) பழைய தொழில்முறை வகையைச் சார்ந்தவை.

விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் இருக்கும் ஆறு அணு உலைகளுமே கொதிநீர் உலைகள்தான். அவை அனைத்துமே 1971-லிருந்து 1979-க்குள் தொடங்கப்பட்டன, அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பான தொழில்நுட்பத்தைச் சார்ந்தவை.

கொதிநீர் அணு உலை எப்படி வெலை செய்கிறது என்பதை கீழே உள்ள படமும், தமிழில் உள்ள பாகப் பெயர்களும் விளக்கும் என்று நம்புகிறேன்…

[படம் விக்கிப்பீடியாவிலிருந்து எடுத்தது]

பாகங்கள்:

 1. அணு உலை அழுத்த அறை (Pressurized Reactor Vessel)
 2. அணுசக்தி மூலப்பொருள் மையம் (fuel core. யுரேனியம் 235 அல்லது ப்ளூடோனியம் 239)
 3. கட்டுப்படுத்தும் தண்டுகள் (control rods)
 4. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 5. கட்டுப்படுத்தும் தண்டுகளை இயக்கும் மோட்டார்கள்
 6. கொதிநீராவி (steam)
 7. சுற்றோட்டத் தண்ணீர் உள்ளே வரும் குழாய் (circulation water inlet)
 8. உயர் அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (High pressure steam turbine)
 9. குறைந்த அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (Low pressure steam turbine)
 10. மின் இயற்றி (electric generator)
 11. மின் இயற்றி (electric generator exciter)
 12. கொதிநீராவிச் சுருக்கி (steam condenser)
 13. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் (அருகில் உள்ள கடல், ஆறு அல்லது குளத்திலிருந்து) கொண்டு வரும் குழாய்
 14. சுருக்கியிலிருந்து வரும் நீரின் வெப்பத்தை அதிகரிக்க ஹீட்டர்
 15. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 16. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் கொண்டு வரும் பம்புகள்
 17. கான்க்ரீட் கட்டிடம்
 18. மின்சார வாரியத்தின் க்ரிட்.

அணுசக்தி மூலப்பொருட்களை சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி, சில நூறு குழாய்களை ஒன்றாகச் சேர்த்து வைத்திருப்பார்கள் (fuel assembly – மூலப்பொருள் தண்டு). சில நூறு தண்டுகளை மூலப்பொருள் மையமாக (fuel core) அணு உலையின் அழுத்த அறையில் வைத்திருப்பார்கள் (pressurrized reactor vessel).

மூலப்பொருள் மையத்தில் அணுக்கருப் பிளவு தொடங்கிவிட்டால் அது சங்கிலித்தொடர் வினையாகத் தொடரும் (fission chain reaction). கருப்பிளவின் விளைவாக வெளிப்படும் அதீத வெப்பத்தால் மையத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நீர் கொதித்து நீராவியாகி மேலேழும்பி வெளியே சென்று நீராவிச்சுழலியைச் சுழற்றும். கருப்பிளவுத் தொடர்வினையை நிறுத்த வேண்டும் என்றால் கட்டுப்படுத்தும் தண்டுகளை மூலப்பொருள் தண்டுகளுக்கு மத்தியில் பதிக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் காண்பது போல, கட்டுப்படுத்தும் தண்டுகளை மோட்டார்கள் மூலம் ஏற்றி மூலப்போருள் தண்டுகளின் நடுவே நிறுத்தினால் சில நொடிகளில் கருப்பிளவுத் தொடர்வினை நின்றுவிடும்.

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தொடர்வினை நின்றுவிட்டாலும், மூலப்பொருளிலிருந்து வெப்பம் வெளியாவது உடனடியாக நிற்காது. கருப்பிளவின் விளைவுப் பொருள்களில் (radioactive fission products – கிளர்மின் விளைவுகள்) தொடர்ந்து கதிரியக்கச் சிதைவு (radioactive decay) ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் வெப்பம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணிவதற்கு பல நாள்கள் ஆகும். அதனால் தொடர்வினையை நிறுத்திவிட்டாலும் நீர் சுற்றோட்டத்தை நிறுத்தமாட்டார்கள். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணியும் வறை நீர் சுற்றோட்டம் தொடரவேண்டும். நீர் சுற்றோட்டப் பம்புகளுக்கும் நிலையத்தில் உள்ள மற்ற மின்சாரத் தேவைகளுக்கும், மின்வாரிய க்ரிட்டிலிருந்துதான் மின்சாரம் வரும். அவசரத் தேவைக்கு டீசலில் ஓடும் மின் இயற்றிகள் உண்டு.

இந்த இடத்தில்தான் ஃபுகுஷிமாவில் பிரச்னை ஆனது.

நிலநடுக்கம் நடந்த அன்று ஃபுகுஷிமா 1 நிலையத்தில் மூன்று உலைகள்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன (படத்தில் உலை 1, 2, 3). உலைகள் 4, 5, 6 பராமரிப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).

மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன.

ஜப்பானில் நிலநடுக்கங்கள் குறித்த தகவற்சேர்கை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. உலகத்தின் ஐந்து அதிபயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இதைச் சொல்கிறார்கள். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா 1 நிலையத்தின் கட்டிடங்களுக்கோ இயந்திரங்களுக்கோ சேதாரம் ஒன்றுமே ஏற்படவில்லை. இதற்கு ஜப்பானில் அணு மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த கட்டிடம் கட்டுவதென்றாலும் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. (ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் தப்பித்தது என்று சொன்னார்கள்.)

தொடரும்…

[பி.கு. எழுத்துப் பிழைகள சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார்,  இராதாகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.]

ஜூன் 22, 2010

உலக நாயகன் – 4

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 2:55 பிப

முன்கதை: உலக நாயகன் – 12, 3

இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.

“ஆமாம்மா ரெண்டு நிமிஷம் கை காலெல்லாம் இழுத்துக்கிட்டு, கருவிழி மேலே போய் மயக்கமாயிட்டா. கீழே உங்க டாக்டரும் நர்ஸுகளும் கை நரம்புல ஊசி குத்தி குளுகோஸ் போட்டாங்க. ஒரு நர்ஸ் பார்த்துட்டு கொழந்தை வெளிய வர்றமாதிரி இருக்குன்னு சொல்லிச்சு, அப்புறம் என்னை வெளிய அனுப்பீட்டாங்க.”

“ஒன்னு சொல்ல மறந்த்துட்டேனேம்மா! கார்ல வரும்போதே பனிக்குடம் ஒடஞ்சு போச்சுன்னு எனக்கு சந்தேகம். ஆனா தண்ணி ரொம்பக் கம்மியாத்தான் வந்த மாதிரி இருந்திச்சு.”

“ஓ! அப்படியா,” என்று கேட்ட ரேவதி தொடர்ந்து, “கர்பமா இருக்கும்போது வெறு ஏதாவது பிரச்சினை இருந்ததாம்மா?” என்றாள்.

“அதை ஏம்மா கேக்குற, ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை தான். இது அவ கர்ப்பமாகிற நாலாவது முறை. முதல் மூனு தடவை மூனு, நாலு மாசத்துலயே அபார்ஷன் ஆயிருச்சு. இந்தத் தடவை அஞ்சாவது மாசத்திலிருந்து பிரஷர் அதிகமாகி மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா.”

“நாலாவது கர்ப்பமா?! மீனாட்ச்சிக்கு இப்ப என்னம்மா வயசு?” என்று குறுக்கிட்டுக் கேட்டாள் ரேவதி.

“இருபத்திநாலு நடக்குதும்மா”

“இருபத்திநாலுதானா?! கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு?”

“அது ஆச்சும்மா ஆறு வருஷம்.”

“பதினெட்டு வயசிலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்களா?”

“ஆமாம்மா. எப்படி இருந்தாலும் அத்தை மகனைத்தானே கட்டிக்க போறான்னு ப்ளஸ் டூ படிச்சு முடிச்சதும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டோம்.”

“சரி. இந்த முறை கர்ப்பமான ஆரம்பத்திலிருந்தே டாக்டரை பார்த்தீங்களா?”

“கர்ப்பமானதே கலைவாணி அம்மாகிட்ட டிரீட்மெண்டு எடுத்துதானே!”

“Dr. கலைவாணி மகப்பேறு மருத்துவரா? அவங்களேதான் முந்தைய மூணு தடவையும் பார்த்தாங்களா?”

“அமாம்மா. அதே டாக்டரம்மாதான். எங்க ஊர்ல நல்ல ராசியான டாக்டர்ன்னு அவிங்களுக்கு நல்ல பேரும்மா. மூணு அபார்ஷன் ஆனதுக்கப்புறம் இந்தத் தடவை கர்ப்பமாகி இவ்வளவு தூரம் வந்ததே அவிங்க கை ராசின்னுதான் சொல்லணும். மீனாட்சிக்கு பிரஷர் வந்ததுமே பத்து மாசத்துக்கு முன்னையே டெலிவரி ஆகிடறது கொழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லதுன்னு டாக்டரம்மா சொன்னாங்க. ஏழு மாசத்துல செக்கப்புக்கு போனப்ப கொழந்தையச் சுத்தி நீர் கம்மியா இருக்குன்னு சொல்லி ஸ்கான் பன்னி பார்க்கச் சொன்னாங்க. நீர் கம்மியாத்தான் இருந்தது. கொழந்தை எடையும் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. பிரஷர் அதிகமா இருந்து, பொண்ணு ஒடம்பெல்லாம் நீர் கோர்த்து ஊதிப்போயிருந்துச்சு, வீட்ல போய் பெட் ரெஸ்ட்ல இருக்கனும்னு மிரட்டி அனுப்பிச்சாங்க. அதனாலதான் வளைகாப்பை சீக்கிரமா வச்சு எங்க வீட்டுக்கு கூட்டீட்டு வந்துட்டோம். எட்டு மாசம், அதாம்மா இந்த மாசம், முடியும்போது பிரஷர் ஜாஸ்த்தியா இருந்தா ஆஸ்பத்திரியில பெட்டுல சேற வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. என் மகன் கிட்ட கொழந்தை எடை ஒழுங்கா ஏறலைன்னா பிரசவமானதும் அதுக்கு கண்ணாடி பெட்டியில வச்சு வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கும், அதனால அந்த வசதியெல்லாம் இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடறேன்னு தனியா கூப்பிட்டு சொல்லியிருக்காங்க.”

“சரி. உங்க டாக்டர் கலைவாணி கிட்ட பார்த்த சீட்டெல்லாம் எடுத்துட்டு வந்தீங்களா?”

“எல்லாம் ஒரு பையில போட்டு வச்சிருந்தேன். மாப்பிள்ளை அதை எடுத்துட்டு வந்திருக்கார்.”

“அப்படியா. சரி. கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்திருங்கம்மா. நான் போய் டாக்டர் ரமேஷை பார்த்து இதெல்லாம் சொல்லீட்டு உங்க மாப்பிளையையும் மேலெ வரச் சொல்கிறேன்.” என்று சொல்லி எழுந்து வெளியே சென்றாள் ரேவதி.

வெளிக்கதவை திறந்து ரேவதி வருவதை உட்கதவின் கண்ணாடி வழியாகக் கவனித்த ரமேஷ், அவளை வெளி அறையிலேயே இருக்கும்படி சைகை செய்தார்.

“செல்வி, நான் போய் attenders கிட்ட பேசி விட்டு வர்றேன், பார்த்துக்க,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

வெளி அறையின் சுவற்றில் மாட்டியிருந்த தொலைபேசியில் ரேவதி அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்தாள். “Hello. Dr. Revathi here. நீங்க யாரு?…ஓ, ராதா சிஸ்டரா… Good morning… Sister, Emergency delivery ஆச்சே, மீனாட்ச்சி, அந்தப் பொண்ணுக்கு fits வந்ததாமே? இப்ப எப்படி இருக்காங்க? … ICU-க்கு போயாச்சா. யார் பார்க்குறாங்க?… OK, நான் அங்கேயே கேட்டுக்கறேன். அந்தப் பொண்ணோட husband அங்கே இருந்தா… ஓ. இங்கேதான் வந்திருக்காறா, சரி நான் பார்த்துக்கறேன். Thanks.” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

திரும்பி ரமேஷை பார்த்துப் புன்னகைத்து, “Hello again, Dr. Ramesh. A busy morning has become busier, இல்லையா?!”

அவளைப் பார்த்து ரமேஷும் புன்னகைத்து, “Good morning Revathi. NICU setting-ல இதெல்லாம் சகஜம்தானே! History, pregnancy details ஏதாச்சும் கிடைச்சுதா?” என்று கேட்டார்.

“Yes. Delivery ஆன பொண்ணு பெயர் மீனாட்ச்சி, அவளோட அம்மா கிட்ட பேசினேன். She’s 24. Consanguineous marriage1. அத்தை, அதாவது அப்பாவோட அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுத்திருக்காங்க. பதினெட்டு வயசுல கல்யாணம். இது fourth pregnancy. Three previous abortions, all at 3 to 4 months gestation. Present pregnancy booked2, being seen by Dr. Kalaivani in their town. Complicated by PIH3 and IUGR4. Possible pre-eclampsia5. Case records இப்ப கையில் இல்லை. Husband கொண்டு வந்திருக்கிறதா சொன்னாங்க. Check பண்ணனும். She developed pains early this morning. Taken to Dr. Kalaivani’s hospital. She referred them to a higher centre. டாக்சியில் வரும்போதே membranes rupture6 ஆயிட்டதா அம்மா சந்தேகமா சொல்றாங்க. She’s not sure because she says there was very little liquor leakage7. Mother had one episode of what sounds like generalized seizures8 after they reached our casualty. Then she lost consciousness and delivered. இப்ப mother has been shifted to the ICU. ராதா சிஸ்டர் husband இங்கே வந்திருக்கிறதா சொன்னாங்க.”

“Wow! இவ்வளவு details கேட்டு, case present பன்ற மாதிரி சொல்லீட்டியே. Good job, ரேவதி.” சிரித்தார் ரமேஷ். “சரி என் கூட வா, husband வந்திருந்தா அவரையும் விசாரிப்போம்,” என்று சொல்லிக் கதவைத் திறந்தார்.

வெளியே இருபத்தைந்திலிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ரமேஷ், “மீனாட்சியோட வீட்டுக்காறர்…” என்று இழுத்தபடி கேட்டான்.

“சார், நான்தான் சார். என் பெயர் சுந்தர் சார்,” என்று சொல்லிக் கொண்டு அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.

“வணக்கம், நான் டாக்டர் ரமேஷ், Neonatologist, அதாவது பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை நிபுனர்.” சுந்தரிடம் இதைச் சொல்லிக்கொண்டே அருகில் நின்றிருந்த இன்னொருவனை உற்றுப் பார்த்தார் ரமெஷ். அவனிடம், “உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கேனே?” என்று கேட்டான்.

அவன் சிரித்தபடி முன்னால் வந்து, “சார், நல்லா முகம் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்!” என்றான். “ரெண்டு வருஷம் முன்னால நீங்க கோயம்பத்தூர்ல பிருந்தாவன் ஹாஸ்பிடல்ல இருந்தப்ப அடிக்கடி உங்க சீனியர் டாக்டர் செல்வக்குமாரை பார்க்க வந்திருக்கேன் சார். அப்ப மெடிக்கல் ரெப்பா இருந்தேன் சார். என் பெயர் சேகர். சுந்தரோட நன்பன் சார்.”

“அப்படியா. நல்லது! வாங்க, இங்கே உள்ளே உட்கார்ந்து பேசுவோம்,” என்று அவர்கள் இருவரையும் மீனாட்சியின் தாய் உட்கார்ந்திருந்த ஆலோசனை அறைக்கு அழைத்துச் சென்றார் ரமேஷ்.

“அந்த ரெண்டு chair இழுத்துப் போட்டு உட்காருங்க … நீங்களும் உட்காருங்க Dr. ரேவதி,” என்று சொல்லி சுழற்நாற்காலியை மேஜைக்குப் பின் தள்ளி அதில் உட்கார்ந்தார் ரமேஷ்.

“Dr. ரேவதி நீங்க சொன்னதெல்லாம் என்கிட்ட சொன்னாங்கம்மா. உங்க டாக்டரைப் பார்த்த சீட்டெல்லாம் …” என்று மீனாட்சியின் தாயிடம் கேட்டவரைக் குறுக்கிட்டு சுந்தர், “கொண்டுவந்திருக்கேன் சார். இதோ …” என்று தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு தடித்த கோப்பை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கி மேஜையின் மேல் வைத்து சில நிமிடங்கள் புரட்டினார் ரமேஷ். அவர் அருகில் நின்றுகொண்டு அவர் பார்த்துக்கொண்டிருந்ததை தானும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. தேவையான தகவல்களைப் பார்த்ததும் கோப்பை மூடிவிட்டு சுந்தரையும், மீனாட்ச்சியின் தாயையும் பார்த்துப் பேசத் தொடங்கினார் ரமேஷ். “நீங்க சொன்னது, உங்க டாக்டரம்மா பார்த்திருக்கிற வைத்தியம் எல்லாத்தையும் பார்த்தா மீனாட்ச்சியோட கர்ப்பம், பிரசவத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கணும். இப்ப அதனால குழந்தைக்கு என்ன தொந்தரவுகள் வரலாம்னு நான் முதலில் சொல்றேன். நான் முடிச்சதுக்கப்புறம் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் விளக்கம் சொல்றேன்.”

“முதல் விஷயம், நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் செய்ததனாலேயே பிரச்சினைகள் தொடங்கியிருக்கும். அவங்களுக்கு இதற்கு முன் கலைந்த மூன்று கர்ப்பங்களுக்கும் அதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். உங்க பழைய சீட்டுப்படி Dr. கலைவாணி மீனாட்ச்சிக்கு APLS-ன்னு நாங்க சொல்ற தொந்தரவு இருக்குன்னு கண்டுபிடித்திருக்கிறார். அந்தப் பிரச்சினைக்கு வைத்தியம் செய்து இந்த முறை கர்ப்பம் தங்கியிருந்தது நல்ல விஷயம். ஆனா ஐந்தாவது மாசத்திலிருந்து இரத்தக் கொதிப்பு வந்ததனால பிரச்சினை ஜாஸ்தி ஆயிருக்கு. அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால், அதைக் கட்டுப்படுத்தி வைத்தாலுமே குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். சாதாரணமா ஆறாவது மாசத்திலிருந்து குழந்தையின் எடை வாரத்திற்கு 200 கிராம் அதிகமாகணும். அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால் அந்த அளவுக்கு எடை அதிகமாகாது. குழந்தையை சுற்றி பனிக்குடத்தில் இருக்கும் நீர் குறைந்துவிடும். இது இரண்டுமே இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கு. உங்க சீட்டில் குறித்திருக்கும் கடைசியாக வீட்டுக்கு தூரமான தேதிப்படி இது 32-வது வாரம், அதாவது 8 மாதம் முடியப்போகும் நேரம். 32 வாரத்திற்கு சாதாரணமாக குழந்தையின் எடை 1500-1600 கிராம் இருக்கணும். மீனட்சியோட குழந்தைக்கு இப்ப எடை பார்த்தோம். 820 கிராம் தான் இருக்கு. அதாவது 7 மாதங்களுக்கான வளர்ச்சி தான் இருக்கு.”

“இந்த மாதிரி குறை மாதத்தில் எடை மிகக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்கே NICU-வில், அதாவது பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பல நாட்கள் கண்காணிக்க வேண்டி வரும். இந்தக் குழந்தைக்கு பல தொந்தரவுகள் வர வாய்ப்பிருக்கிறது. மிக முக்கியமாக, நுரையீரல் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூச்சு விடத் தொந்தரவு வரலாம். அப்படி வந்தால் நுரையீரல் விரிவடைய விலை அதிகமான மருந்துகள் கொடுக்க வேண்டும், மோசமாக இருந்தால் முச்சுக் குழாயில் tube போட்டு ventilator, அதாவது செயற்கை சுவாச இயந்திரத்தில் பொறுத்த வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்படலாம். குழந்தைக்கு பால் குடிக்கப் பிரச்சினை வரலாம்.

குழந்தை ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுயமாக மூச்சு விட்டு, பால் குடித்து, நன்றாக இருக்கும் வரை இங்கே NICU-வில் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளே வைத்திருந்தால் ஒரு நாளுக்கு சுமார் எழுநூற்று ஐம்பது ரூபாய் செலவாகும். இது போக மருந்துகள், ட்ரிப்ஸ் போன்றவைகளை தேவைக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். தோராயமாக ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக் கொள்ளலாம். நான் ஏற்கனவே சொன்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் செலவு அதிகம் ஆகும். Ventilator மாட்டினால் ஒரு நாளுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகும். இந்த அளவிற்கு செலவு செய்ய உங்களுக்குக் கஷ்டம் என்றால் சொல்லுங்கள் இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறேன்.” என்று சொல்லி, “இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.” என்றார்.

தொடரும்…

வாசக நண்பர்களுக்கு: முதல் மூன்று பாகங்களுக்கு பதிவில் மறுமொழியாகவும் ட்விட்டரிலும் நண்பர்கள் சிலர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். முதலாவதாக ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் பேச்சில் ஆங்கிலம் அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து. இது என்னைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத விஷயம். இன்றைய நிலையில் (என் மானசீக குருநாதர் பேயோன் சமகாலத்தில் என்பார்) ஒரு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் எப்படி பேசிக்கொள்கிறார்களோ அப்படியே எழுதியிருக்கிறேன். அதனால் தான் முதல் இரண்டு பாகங்களில் நீளமான அடிக்குறிப்புகளில் விளக்கம் அளித்திருந்தேன். அடிக்குறிப்புகளின் நீளத்தை குறைத்துவிட்டேன். கதையில் உபயோகித்திருக்கும் மருத்துவத் துறை கலைச்சொற்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு கதையிலேயே விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன். பல மருத்துவக் கலைச்சொற்களை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் கலைச்சொற்கள் பட்டியலில் இருந்து எடுத்தேன்.

 1. Consanguineous marriage – நெருங்கிய இரத்த உறவினருடன் திருமணம்.
 2. Booked Pregnancy – கர்ப்பம் தரித்ததில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்திருக்கிறார்கள் என்று குறிக்கும்.
 3. PIH – Pregnancy Induced Hypertension – கருவுற்றதால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்.
 4. IUGR – Intra-Uterine Growth Retardation – கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி குன்றியுள்ளதை குறிக்கும்.
 5. Pre-eclampsia – பேற்றுக்கு முன் மருட்சி. இது இரத்த அழுத்தம் அதிகமாக (மேலே குறிப்பிட்டுள்ள PIH) இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்.
 6. Rupture of Membranes – பிரசவத்தின் பொழுது பனிக்குடம் உடைதல்.
 7. Liquor amnii – also known as Amniotic Fluid – பனிக்குட நீர் – கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீர்.
 8. Generalized seizures – கால்-கை வலிப்பு.

ஜூன் 20, 2010

உலக நாயகன் – 3

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 11:41 பிப

முன்கதை: உலக நாயகன் – 1, 2

நஞ்சுக்கொடியில் catheter பொட்டு முடித்ததும் கையுறையைக் கழற்றிக் கொண்டே உஷாவிடம், “ஒரு Order Sheet எடும்மா, IV fluids (ட்ரிப்ஸ்), medicines and monitoring instructions எழுதிடறேன்,” என்று சொல்லிவிட்டு நிதானமாகக் குழந்தையை முழுவதுமாக பரிசோதிக்க ஆரம்பித்தார் ரமேஷ்.

Order sheet-ட்டுடன், TPR chart, IO chart,1, 2 மற்றும் சில வெற்றுத் தாள்களையும் NICU-வில் ஆண் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் இளநீல பிளாஸ்டிக் கோப்பினுள் இணைத்து, சுவற்றில் பதித்திருந்த பளிங்கு மேஜையில் வைத்து விட்டு, “சார் admission போட்டு வந்ததும் நீங்க case notes எழுதுனதுக்கப்புறம் இதுல சேர்த்துக்கறேன். இப்போதைக்கு orders எழுதீருங்க,” என்று ரமேஷிடம் சொன்னாள்.

“செல்வி, இந்தக் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கனும். நேத்து Caesarean delivery ஆன குழந்தையும், அந்த நல்லாயிருக்கிற neonatal jaundice baby-யும் இப்பவே வெளிய ward-க்கு மாத்தீறு,” என்று சொல்லிக்கொண்டே மேஜை அருகில் வந்து கோப்பை திறந்து எழுத ஆரம்பித்தார் ரமேஷ். வேகமாக எழுதிக்கொண்டு இரு செவிலியர்களுக்கும் கேட்கும்படி தொடர்ந்து சொன்னார், “இப்பவே radiology-ல சொல்லி ஒரு bedside check x-ray எடுக்க சொல்லீடுங்க, warmer probe-ஐ நெஞ்சில் ஒட்டீட்டு temperature maintain ஆகுதான்னு பார்த்துக்கங்க, 15 நிமிஷத்துக்கு ஒரு முறை heart rate, respiratory rate record பண்ணீருங்க, hood-க்கு oxygen full flow-ல வச்சிருங்க, குழந்தை urine, meconium3 போகிற நேரத்தைக் குறிச்சுக்கோங்க, நாளைக்கு காலை நான் வர்றதுக்கு முன்னாடி repeat bedside x-ray ஒன்னு எடுத்துருங்க.” சொல்லி முடித்துவிட்டு மௌனமாக மருந்துகள் மற்றும் இரத்தப் பரிசொதனைகளுக்கான உத்தரவுகளை சில நிமிடங்களில் எழுதினார்.

செல்வி தொலைபேசியில் கூப்பிட்டு, ரமேஷ் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளையும் வெளியே குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கு மாற்றும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள்.

எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது மாணவி ராணி NICU-விற்குள் வந்திருந்ததை கவனித்த ரமேஷ் அவளை நோக்கி, “ஏம்மா attender யார் வந்திருக்காங்க?” என்று கேட்டார்.

“ச… சார், baby-யோட பாட்டி சார்,” என்று பதட்டத்தோடு சொன்னாள். டாக்டர் ரமேஷ் ராணியிடம் நேரடியாகப் பேசுவது இதுவே முதல் முறை. அவளுக்கு NICU-வில் இருக்கும் மூத்த செவிலியர்களிடம் பேசுவதற்கே பயம். மருத்துவரிடம் பேசுவதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

அவள் முகத்திலும் குரலிலும் தெரிந்த பயத்தை கவனித்த ரமேஷ் மெலிதான புன்னகையுடன் அவளிடம், “பாட்டின்னா யாரும்மா?” என்று மெதுவாகக் கேட்டான். துளியும் பதட்டம் குறையாமல், “ச… சார்,  delivery ஆன பொண்ணோட அம்மான்னு சொன்னாங்க சார்,” என்று சொன்னாள் ராணி.

“ஓ, அப்படியா!” என்று சொன்ன ரமேஷ், தொடர்ந்து, “செல்வி, Casualty-க்கு கூப்பிட்டு குழந்தையோட அப்பாவை மேலே அனுப்பச் சொல்லு. ரேவதி கிட்ட History கேட்டுட்டு நான் அவருக்கு baby-யோட இப்போதைய condition, future prognosis4 explain பண்ணனும். செலவு எவ்வளவு ஆகும், அவரால் செலவு செய்ய முடியுமான்னும் கேக்கணும்.”

“Ok, Doctor.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தொலைபேசி பக்கம் திரும்பினாள் செல்வி.

ஆலோசனை அறைக்குள் மீனாட்சியின் தாயை அழைத்துச் சென்ற மருத்துவர் ரேவதி அங்கிருந்த மேஜையின் முன் இருந்த நாற்காலியில் அவரை அமர்த்திவிட்டு, ஃபேன் பொத்தானை அழுத்திவிட்டு, மேஜைக்கு மறுபுறமிருந்த சுழற்நாற்காலியை இழுத்து அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். மீனாட்சியின் தாய் மறுபடியும் ஏதோ கேட்க வாயைத் திறப்பதை கவனித்த ரேவதி அவசரமாக, “அம்மா, நான் இங்கே Junior Doctor. குழந்தைகள் specialist Dr. ரமேஷ் இப்போ உள்ளே குழந்தையைப் பார்த்துக் கிட்டிருக்கார். அவர் வந்து குழந்தை எப்படி இருக்குன்னு உங்களுக்கு விவரம் சொல்லுவார். இப்ப எனக்கு நீங்க கொஞ்சம் விவரங்களை சொல்லணும். நான் கேட்கிற கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு பதில் சொல்லுங்க,” என்று சொல்லி, மேஜை மேல் இருந்த ஒரு வெற்றுத் தாளை தன் அருகில் இழுத்து வைத்து, கையில் பேனாவை எடுத்துக் கொண்டாள்.

“சரிம்மா,” என்று சொன்னார் மீனாட்சியின் தாய்.

உடனே முதல் கேள்வியை கேட்டாள் ரேவதி, “எத்தனை மாசம் பிரசவம்மா? கடைசியா மீனாட்சி வீட்டுக்கு தூரமான தேதி உங்களுக்கு தெரியுமா?”

“தூரமான தேதி தெரியாதும்மா. அது எங்கூர் ஆஸ்பத்திரிச் சீட்டுல எழுதியிருக்கும். எழு மாசம் முடிஞ்சு எட்டு நடக்குதும்மா.”

“ஓ. எட்டு மாசம்தான் ஆகுதா. இன்னைக்கு என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? மீனாட்சி எங்க இருந்தா? உங்க வீட்லையா இல்ல அவங்க வீட்லையா?”

“அதான் அப்பவே சொன்னேனெம்மா. போன மாசம்தான் வளைகாப்பு செஞ்சாங்க. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு கூட்டியாந்துட்டோம். ஆனா ஒரே ஊருதான்ம்மா. ரெண்டு தெரு தள்ளியிருக்கும் எங்க வீட்டுக்காரரோட அக்கா பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். நேத்து ராத்திரி படுக்கப் போறப்ப நல்லாதாம்மா இருந்தா. என் பக்கத்துலதான் படுத்திருந்தா. ஒன்னும் பிரச்சினைன்னு சொல்லலை. விடியக் காத்தால என்னை எழுப்பி, அம்மா அடி வயிறு வலிக்குதும்மான்னு சொன்னா. நானும் எழுந்திருச்சுப் போய் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுத்து குடிக்கச்சொல்லிவிட்டு பத்து நிமிஷம் பார்த்தேன். வலி குறையலைன்னு சொன்னா. அப்புறம் எங்க வீட்டுக்காறரை எழுப்பி மாப்பிள்ளைய செல்போன்ல கூப்பிடச் சொன்னேன்.”

“அவரு வரும்போதே ஆட்டோ ஒன்னு கூட்டீட்டு வந்துட்டார். அந்த ஆட்டோவிலேயே எங்க டாக்டரம்மா ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போனோம். போகிற வழியில் அவங்களுக்கும் ஃபோன் போட்டுப் பேசினோம். சரி நான் வந்து பார்த்துடறேன்னு சொன்னாங்க. அவங்களோட ஆஸ்பத்திரியில போய் நாங்க சேர்ந்து பத்து நிமிஷத்துக்குள்ள அந்தம்மாவும் வந்துட்டாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, பிரசவ வலிதான், இவ்வளவு சீக்கிரம் வலி வந்தது கொழந்தைக்கு நல்லதில்லை, நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருங்கன்னு சொல்லீட்டாங்க. அப்புறம் ஒரு கால் டாக்சி புடிச்சு இங்கே வந்தோம்.”

“எங்க ஊரிலிருந்து இங்கே வர முக்கால்மணி நேரம் ஆச்சும்மா. அவ்வளவு நேரமும் வலி, வலின்னு அனத்திக்கிட்டே வந்தா. இங்கே வந்து உங்க எமர்ஜன்சி ரூம்ல படுக்கவச்சுட்டு நர்ஸ்கிட்ட என்ன விஷயம்னு சொல்லிக் கிட்டிருக்கும்போது திடீர்னு ஜன்னி வந்த மாதிரி கையும் காலையும் இழுத்துக்கிட்டு நினைவில்லாம போயிட்டாம்மா.”

இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 4

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

 1. TPR chart – Temperature, Pulse, Respiratory rate chart – உடல் வெப்பம், இருதயத் துடிப்பு அளவு, நிமிடத்திற்கு எத்தனை முச்சு என்ற அளவு குறிக்கும் தாள்.
 2. IO chart – Intake-Output chart – வாய் வழியாகவும், ட்ரிப்ஸ் வழியாகவும் கொடுக்கப்படும் நீர் அளவு, சிறுநீர் அளவு குறிக்கும் தாள்.
 3. Meconium – காட்டுப் பீ, பிறந்த குழந்தையின் முதல் மலக் கழிச்சல்.
 4. Prognosis – முன் கணிப்பு, நோய் தாக்கக் கணிப்பு, சிகிச்சை முடிவுக் கணிப்பு.

ஜூன் 16, 2010

உலக நாயகன் – 2

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 1:49 பிப

முன்கதை: உலக நாயகன் – 1

வேகமாகப் பார்த்ததில் ட்ரிப்ஸ் போடுவதற்கு ஏதுவாக குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் மண்டையில் ரத்த நாளங்கள் எதுவும் டாக்டர் ரமேஷுக்குத் தென்படவில்லை. அறுத்துத் தற்காலிகமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் நஞ்சுக் கொடியிலே உள்ள ரத்த நாளத்திலேயே ட்ரிப்ஸ் போட குழாயை பொருத்திவிடலாம் என்று முடிவு செய்து, பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் உஷாவிடம், “Umbilical catheter1 போட tray ready பண்ணும்மா!” என்று சொன்னார்.

இடைப்பட்ட நேரத்தில் Pulse-oximeter probe-பை பொருத்திவிட்டு stethoscope-பைக் குழந்தையின் நெஞ்சில் வைத்துக் கேட்டுவிட்டு நிமிர்ந்த நர்ஸ் செல்வி, “Respiratory rate 60, Lungs clear, Heart rate 140, No murmurs, O2 saturation 94,”2,3,4,5,6 என்று ரமெஷிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் விலகி நின்று இந்தக் கலவரத்தை மிரண்ட விழிகளுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த NICU-விற்கு சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்த மூன்றாம் ஆண்டு செவிலியத்துறை மானவியிடம், “ரானி, hand wash7 பண்ணீட்டு, weighing machine-ல clean towel ஒன்னு போட்டு இங்க எடுத்துட்டு வா.” என்று கட்டளையிட்டாள்.

ரமேஷ் கை கழுவி கையுறை அணிந்து catheter tray-யிலிருந்த சாதனங்களை சரி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தையை வார்மரிலிருந்து எடுத்து எடை பார்த்துவிட்டு, “டாக்டர், வெறும் 820 கிராம்தான் இருக்கு,” என்று சொன்ன செல்வியின் குரலில் லேசான கலக்கம் இருந்தது. இதைக் கேட்டதும் சட்டென்று தலை நிமிர்ந்து அவளைப் பார்த்த ரமேஷின் கண்களிலும் லேசான கலக்கம் இருப்பதை செல்வி கவனித்தாள்.

நஞ்சுக் கோடியில் catheter போட ரமேஷுக்கும் உஷாவிற்கும் தேவையான பொருட்களெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று ஒரு எட்டு பார்த்துவிட்டு திரும்பிய செல்வி intercom தொலைபேசியில் அவசர சிகிச்சை பிரிவுக்கான எண்களை அழுத்தினாள். மறுமுனையில் தொலைபேசியை எடுத்து “Hello, Casualty,” என்று சொன்னது அவளது சிநேகிதி சீனியர் நர்ஸ் ராதா என்று அறிந்துகொண்ட செல்வி, “ராதா, NICU-லிருந்து செல்வி பேசறேன். இப்ப டெலிவரியாச்சே? அந்தப் பொண்ணு பெயர் என்ன? … மீனாட்ச்சியா, சரி. கூட வந்த விவரம் தெரிஞ்ச attender – புருஷனோ, அம்மாவோ – இருந்தா மேலே அனுப்பறியா, history கேக்கணும்!” மறுமுனையில் ராதா ஏதோ கேட்க, “அதை ஏண்டி கேக்கற, வெறும் 820 கிராம்தான் இருக்கு! இப்போதைக்கு நல்லாயிருக்கு! ஹ்ம்ம்…” என்று பெருமூச்சுடன் தொலைபேசியை கீழே வைத்தாள்.

“ஏய் ராணி, வெளிய வார்ட்ல டாக்டர் ரேவதி இருப்பாங்க, அவங்கள இங்கே கொஞ்சம் வரச் சொல்லேன்,” என்று எடை பார்க்கும் கருவியை அதன் இடத்தில் வைத்துவிட்டு நின்றிருந்த ராணியிடம் சொன்னாள் செல்வி.

அடுத்த சில நிமிடங்களுக்கு NICU-வில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கண்காணிப்புக் கருவிகளின் பீப் பீப் சத்தத்தைத் தவிர அமைதி நிலவியது.

ரமேஷ் உஷாவின் உதவியோடு நஞ்சுக் கோடியில் catheter போடுவதை பார்த்துக் கொண்டிருக்க செல்விக்கு நேரமில்லை. NICU-வில் ஏற்கனவே இருந்த மூன்று குழந்தைகளுக்கு காலை ரவுண்ட்ஸில் ரமேஷ் சொல்லியிருந்ததேல்லாம் செய்யவேண்டும். கையில் பேனாவை எடுத்துக் கொண்டு கேஸ் ஷீட்டுகளை புரட்டினாள். நல்ல வேளை இப்போ உள்ளே இருக்கிற மூணும் stable-ஆ இருக்கு. மூன்றில் ஒன்றையாவது டாக்டர் ரமேஷிடம் கேட்டு வெளிய வார்டுக்கு மாற்றிவிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

NICU-வின் கண்ணாடிக் கதவை சிறிதளவு திறந்து தோள் நீள சுருட்டை முடி சூழ்ந்திருந்த அழகிய பெண் முகம் எட்டிப் பார்த்தது … டாக்டர் ரேவதி. போட்டிருந்த சன்னமான மூக்குக் கண்ணாடியை படு ஸ்டைலாக ஒரு விரல் நுனியில் மேலே உயர்த்திவிட்டு, வேலையில் மும்முரமாக இருந்த ரமேஷைப் பார்த்து, “Good morning Dr. Ramesh. So busy in the wards that I didn’t get to see you this morning!” என்று சொல்லிவிட்டு செல்வி இருந்த பக்கம் திரும்பி, “என்ன செல்வி சிஸ்டர், என்னை வரச்சொன்னீங்களாமே?” என்று கேட்டாள்.

ரமேஷிடம் ரேவதி கொஞ்சும் தொனியில், எதோ இன்றுதான் ந்யூ யார்க் ஃப்ளைட்டிலிருந்து இறங்கிவந்தவள் போல் அமெரிக்க உச்சரிப்பில், ஆங்கிலத்தில் பேசிவிட்டுத் தன்னிடம் கேட்டது மட்டும் ஏளனம் கலந்த அதிகாரத் தொனியில் இருந்தது போல் செல்விக்கு உறுத்தியது. மனதில் பொங்கிய ஆத்திரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ஆமாம் டாக்டர். இப்பத்தான் ஒரு 820 கிராம் premature neonate8 receive பண்ணினோம். சார் umbilical line போட்டுக்கிட்டிருக்கார். Attender casualty-யிலிருந்து வந்துட்டிருக்காங்க. அவங்க கிட்ட details கேக்கணும். அதான் நீங்க இருந்தா வசதியா இருக்கும்னு கூப்பிட்டேன்.” என்று சிரித்த முகத்துடன் ரேவதியிடம் சொல்லிவிட்டு, “Baby of மீனாட்ச்சி, attender வந்துட்டாங்களான்னு பார்த்து madam கிட்ட சொல்லிடு.” என்று மறுபடியும் ராணிக்கு உத்தரவிட்டாள்.

“Oh!!” அழகாக வாயைப் பிளந்து, வலது கையின் மூன்று விரல்களால் திறந்திருந்த வாயை பாதி பொத்திக்கொண்டு, “Only 820 grams!! I’ve never seen such a small preemie in my life yaa!! Okay. I’ll go get the history.”  என்று சொல்லிக் கதவை மூடிவிட்டுச் சென்றாள் ரேவதி.

அவள் தலை மறைந்ததும், செல்வி தன் கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, தலையை பொம்மையைப் போல் அசைத்ததை ஓரக்கண்ணால் பார்த்து முகமூடிக்குப்பின் லேசாகச் சிரித்தார் ரமேஷ்.

NICU-வின் வெளிப்புற அறையின் கதவைத் திறந்து ரேவதி வெளியே வந்ததும் எதிரில் இருந்த குடும்பத்தார் காத்திருக்கும் அறையின் முன் ராணியின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் பதட்டத்துடன் நின்றிருப்பதை கவனித்தாள்.

“நீங்க மீனாட்சியோட அம்மாவா, மாமியாரா?” என்று கேட்டு முடிப்பதற்குள் அந்தப் பெண் அவசரமாக அருகே வந்து, “நான் மீனாட்ச்சியோட அம்மாங்க. நீங்கதான் குழந்தையைப் பாத்துக்கற டாக்டரா? குழந்தை எப்படிம்மா இருக்கு? பொழைக்குமா? பொறந்ததும் பார்த்தேனே! ஒரு ஜான் அளவுகூட இல்லியே! ஐயோ!! இத்தனை கஷ்டப்பட்டு பொத்திப் பொத்திப் பார்த்தும் இப்படி எட்டு மாசத்துல பெத்துப் போட்டுட்டாளே. ஏம்மா, பொழச்சுக்குமில்ல? போன மாசந்தான் வளைகாப்பு செஞ்சோமே!” என்று படபடப்புடன் நிறுத்தாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே ரேவதியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணின் கையை தானும் பிடித்துக் கொண்டு, “பதட்டப்படாம வாங்கம்மா, இங்கே உட்கார்ந்து பேசலாம்.” என்று சொல்லியபடி அருகில் இருந்த ஆலோசனை அறைக்கு அழைத்து சென்றாள் ரேவதி.

தொடரும்…

தொடர்ச்சிஉலக நாயகன் – 3

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

 1. Umbilical vein catheterization – குழந்தைகளுக்கு ட்ரிப்ஸ் போட கைகள், கால்கள் அல்லது மண்டையில் (scalp vein) உள்ள ரத்த நாளங்களில் கதீடர் (intravenous [IV] catheter/cannula) என்றழைக்கப்படும் சிறு குழாய் பொருத்தப்படும். பச்சிளம் குழந்தைகளுக்கு நஞ்சுக் கொடியில் உள்ள மூன்று ரத்த நாளங்கள் (1 சிரை / vein , 2 தமனிகள் / arteries) முழுவதுமாக மூடி செயலிழந்து போக ஒரு வாரம் ஆகும். ட்ரிப்ஸ் போட வேறு எங்கும் சிரை (vein) கிடைக்கவில்லை என்றால் நஞ்சுக் கொடியில் இருக்கும் சிரையில் சிறிய குழாய் ஒன்று பொருத்தப் படும். இது கண்டிப்பாக NICU-வில் மருத்துவர் முன்னிலையில் தான் செய்யவேண்டும். இது போல் கதீடர் (catheter) போடுவதற்கு, மற்ற மருத்துவக் காரியங்களைச் செய்வதற்கு (medical procedures) தேவையான சாதனங்களை கட்டி ஸ்டெரிலைஸ் (sterilize – நுண்ணுயிரகற்றல்) செய்து வைத்திருப்பார்கள். அவைகளை பேக் அல்லது ட்ரே (pack or tray) என்று சொல்லுவது வழக்கம். உதாரணமாக – காயங்களுக்குத் தையல் போடுவதற்கு உபயோகமாகும் பொருட்கள் சூச்சரிங் ட்ரேயில் (suturing tray/pack) இருக்கும்.
 2. Respiratory rate – ஒரு நிமிடத்தில் குழந்தை எத்தனை முறை மூச்செடுக்கிறது என்ற அளவு. சாதாரனமாக, பிறந்தவுடன் குழந்தை நிமிடத்திற்கு சுமார் முப்பதிலிருந்து அறுபது மூச்சுக்கள் எடுக்கும்.
 3. Lungs clear – இரண்டு பக்கமும் நுறையீரலில் மூச்சுச் சத்தம் நன்றாக கேட்கிறது. சந்தேகப்படும்படி வேறு சத்தம் எதுவுமில்லை.
 4. Heart rate – நிமிடத்திற்கு இருதயத் துடிப்பு எவ்வளவு உள்ளது என்ற அளவு. பிறந்த குழந்தைக்கு சுமார் நூறிலிருந்து நூற்று அறுபது இருக்கும்.
 5. Heart murmur – stethoscope-பில் இதய சுருங்கல், மற்றும் இதய விரிவு ஒலிக்கு (லப் டப்) மேலதிகமாகக் கேட்கும் ஒலிகள். இவை சாதாரணமாகவும், இதயத்தில் ஓட்டை போன்ற நோய் இருந்தாலும் கேட்கலாம்.
 6. O2 saturation – Pulse-oximeter கறுவியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு.
 7. கை கழுவுதல்Hand Washing – பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் மிக முக்கியமான சடங்கு. இதை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். காப்பகம் சுத்தமான நுண்ணுயிரற்ற இடமாக இருக்க வேண்டும் (sterile zone). காப்பகத்தின் உள்ளேயே வேலை செய்யும் செவிலியர்களுக்கு அறுவை சிகிச்சை அரங்கில் உடுத்துவது போல் தலைக்கு தொப்பி முகமூடியுடன் பிரத்யேகமான சீருடை இருக்கும். பல மருத்துவமனைகளில் உள்ளே பணியாற்றும் மருத்துவர்களுக்கும் சீருடை இருக்கும். சிறிய மருத்துவமனைகளில் அல்லது ஓரிரு குழந்தை நல மருத்துவர்களே இருக்கும் இடங்களில் மருத்துவர்(கள்) அடிக்கடி வெளியே சென்று வருமாறு இருக்கும். அவர்கள் காப்பகத்தினுள் வரும்பொழுது அணிந்திருக்கும் சாதாரண உடையை முழுவதுமாக மூடக் கூடிய பெரிய அங்கி (gown) மற்றும் தொப்பி முகமூடி அணிந்து வருவார்கள். வெளியே போட்டுக்கொள்ளும் காலணிகளை உள்ளே அணிந்து செல்லக் கூடாது. உள்ளே அணிந்து செல்ல செருப்புகள் இருக்கும். குழந்தைகளைப் பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாளுக்கு ஒரு முறை குழந்தையின் தாய் அல்லது தந்தையை அழைத்து கண்ணாடி கதவிற்கு வெளியே இருந்தபடி குழந்தையை பார்க்க அனுமதிப்பார்கள். குழந்தைகளை தொடுவது யாராக இருந்தாலும் சோப்புப் போட்டு தண்ணீரில் அல்லது ஆல்கஹால் உள்ள திரவத்தை (Hand sanitizer containing alcohol) உபயோகித்துக் கை கழுவிவிட்டுத்தான் தொடவேண்டும். ஒரு குழந்தையைப் பார்த்துவிட்டு அடுத்த குழந்தையைத் தொடுவதற்கு முன் மறுபடியும் கை கழுவ வேண்டும். வெளியிலிருந்தும், ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கும் கிருமிகள் பரவாமலிருக்க இந்த முன்னெச்சரிக்கைகள் தேவை.
 8. Premature Neonate / Preterm Baby / Preemie – குறை பிரசவத்தில், 37 வாரங்களுக்கு முன் (அதாவது 9 மாதங்களுக்கு முன்) பிறக்கும் குழந்தை. குறைப் பிரசவக் குழந்தைகளில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் பிரசவக் காலம் மற்றும் பிறக்கும் பொழுது குழந்தையின் எடை. பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் துறையின் வளர்ச்சியால் இப்பொழுதெல்லாம் மேலைநாடுகளில் 24 வாரத்தில் பிறக்கும் குழந்தையைக் கூட பிழைக்க வைத்து விடுகிறார்கள். நம் நாட்டில் 28 வாரங்களுக்கு முன்னும், 800 கிராம்களுக்கு குறைவான எடையுடனும் பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது கஷ்டம். பொதுவாக தெரிந்த தகவல் என்றாலும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது: சாதாரணமாக 9 மாத பிரசவக் காலத்திற்கு பிறகு (37 வாரங்களுக்கு பிறகு) பிறக்கும் குழந்தைக்கு எடை 2.5 கிலோவுக்கு (2500 கிராம்) குறைவாக இருந்தால் எடை குறைவு (low birth-weight baby) என்று சொல்லுவோம்.

உலக நாயகன் – 1

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 10:11 முப

நர்ஸ் அவசரமாக எடுத்து வந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் டாக்டர் ரமேஷுக்கு இது பிழைப்பது கஷ்டம் என்று தோன்றியது. இந்த மருத்துவமனையில் பச்சிளம்குழந்தைகள் நிபுணராக1 ரமேஷ் வேலைக்கு சேர்ந்தபின் அவர் பார்த்ததிலேயே சிறிய குழந்தை இதுதான். நர்ஸ் குழந்தையை warmer-இல்2 கிடத்தியதும், ஆக்சிஜன் அளிக்கும் கண்ணாடிப் பெட்டியை3 குழந்தையின் தலையை முழுவதுமாக மூடும்படி பொருத்திவிட்டு, உச்சிமுதல் பாதம் வரை பார்வையை ஒட விட்டார்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே உரிய குட்டிக் குரங்கு பொன்ற பெரிய தலை, சுருங்கிய முகம். தலையில் இருந்த சில முடிகள் தோலுடன் ஒட்டிக்கொண்டிருந்தன. கண்களை இறுக்கி மூடிக்கொண்டு சிறிய சிவந்த வாயை திறந்து பூனையைப்போல் முனகிக்கொண்டிருந்தது. காதுகள் மண்டையோடு ஒட்டியிருந்தன. உடலை சுற்றியிருந்த மருத்துவமனை பச்சைத் துண்டை அகற்றினார் ரமெஷ்.

ஆண் குழந்தை. எலும்பும் தோலுமாக வற்றிய உடல். விலா எலும்புகள் விரிய வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. இடது நெஞ்சில் வேகமான இதயத் துடிப்பின் அதிர்வு தெரிந்தது. கை, கால், விரல்கள் எல்லாம் இருக்கவேண்டிய அளவில், இருக்கவேண்டிய இடங்களில் இருந்தன. வெட்டப்பட்ட தொப்புள் கொடியில் பொறுத்தியிருந்த க்ளிப் சரியாக இருந்தது. ரத்தக் கசிவு எதுவும் இல்லை. Vernix4 அதிகமாக இல்லை, இருந்த அளவிற்கு சுத்தமாக வெள்ளையாக இருந்தது, இது குழந்தையை துடைத்ததாலும் இருக்கலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டே நர்ஸிடம், “என்னம்மா history5,” என்று கேட்டார் ரமெஷ்.

குழந்தையின் வலது கால் கட்டை விரலில் சிறிய Band-aid அளவிலான pulse-oximeter probe-பை6 பொருத்திக்கொண்டே படபடவென பேச ஆரம்பித்தாள் நர்ஸ் செல்வி, “டாக்டர், பத்து நிமிஷத்துக்கு முன் Casualty-யிலிருந்து7 கால். Emergency Deliver, வந்து baby-யை receive பண்ணுங்கன்னு. நான் free-யா இருந்ததால கீழே ஒடினேன். நான் அங்கே போனப்பவே தலை வெளியே வந்திருச்சு. ரெண்டு நிமிஷத்துல full delivery ஆயிருச்சு. Baby மூச்சு விடலை, அழுகலை. Activity ஒன்னும் இல்லை.  Full delivery ஆனதுக்கப்புறம் கையில மல்லாக்க புடிச்சு முதுகுல தட்டினேன். Breathing and cry ஆரம்பிச்சுருச்சு. மூக்கிலும், வாயிலும் suction8 போட்டேன். Placenta9 வெளியே வந்ததும், cord10 cut பண்ணி, clamp பண்ணிட்டு, குழந்தையை தூக்கிட்டி NICU-க்கு ஒடி வந்துட்டேன்.” இன்னும் மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

ட்ரிப்ஸ் போடுவதற்கு ஏதுவாக ஏதாவது ரத்த நாளம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார் ரமேஷ்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 2

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

 1. பச்சிளம்குழந்தைகள் நிபுணர் – Neonatologist – பிறப்பில் இருந்து ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கான மருத்துவத் துறை நிபுணர். பெரும்பாலும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் (NICU – Neonatal Intensive Care Unit – பச்சிளம் குழந்தைகள் காப்பகம்) வைத்துப் பார்த்துகொள்பவர்.
 2. வார்மர் (warmer) – முன்னெ இன்க்யுபெடர் (incubator) என்று அழைக்கபட்ட பச்சிளம்குழந்தைகளை பராமரிக்க உபயோகபடுத்தப்படும் கண்காணிப்புக் கருவிகள் (monitor) மற்றும் சூடாக வைத்துக்கொள்ள விளக்குகள் பொருத்தப்பட்ட சிறு படுக்கை.
 3. ஆக்சிஜன் (பிரானவாயு) அளிக்கும் கண்ணாடிப் பெட்டி – ஆக்சிஜன் ஹுட் (Oxygen hood).
 4. Vernix – முழுப் பெயர் வெர்னிக்ஸ் கெஸியோஸா (vernix caseosa) கருவில் குழந்தையின் சருமத்தில் ஒட்டியிருக்கும் வெள்ளையான தயிர் போன்ற திரவம்.
 5. History – மருத்துவத்தில், இதுவரை நடந்தது என்ன என்பதற்கு உபயோகபடுத்தப்படும் வார்த்தை.
 6. பல்ஸ்-ஆக்ஸிமீட்டர் ப்ரோப் – (pulse-oximeter probe) – குழந்தையின் இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் கருவி. பெரும்பாலும் கால் கட்டை விரலின் மேல் மடக்கிப் பொருத்தி ப்ளாஸ்த்திரி சுத்திக் கட்டிவிடுவார்கள்.
 7. Casualty – அவசர சிகிச்சைப் பிரிவு. அமெரிக்காவில் எமெர்ஜன்சி ரூம் / டிபார்ட்மெண்ட் (ER / ED)
 8. Vacuum suction – குழந்தையின் முக்கிலும் வாயிலும் விட்டு உறிஞ்சி சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும்.
 9. Placentaநஞ்சு
 10. Umbilical cord – நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடி.
« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »