…நிழல்கள்…

செப்ரெம்பர் 28, 2011

இளம்பிள்ளைவாதம் (துடைத்தெடுத்தல் பாகம் 2)

பாகம் 1 இங்கே உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்று போலியோ நோயின் தமிழ் பெயரைக் கேட்டாலே அது சிறுவர்களைத் தாக்கும் நோய் என்பது தெரியும். போலியோ பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தாக்கும். மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்று நோய். பொதுச் சுகாதாரம் மோசமாக உள்ள இடங்களில், மனிதக்கழிவுகளினால் (மலத்தினால்) மாசடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்ளும்போது தொற்றுகிறது. உட்கொள்ளப்பட்ட தீநுண்மங்கள் குடல் சுவற்றை ஊடுருவி அருகில் உள்ள நிணநீர்க்கணுக்களில் (lymph nodes, பொதுவழக்கில் நெரிக்கட்டி என்று சொல்லுவோம்) குடி கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். வயிற்றுப்போக்கில் (மலத்தில்) மீண்டும் தீநுண்மங்கள் வெளியேறும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆடைகளிலும், அவர்கள் மலம் கழிக்கும் இடங்களிலும், அவர்களை குளிப்பாட்டும் இடங்களிலும் தீநுண்மம் அதிகம் பரவியிருக்கும். பொதுவெளியில் மலம் கழித்தால், அந்தப் பொதுவெளிகளிலுள்ள குடிநீர் வழங்கும் இடங்களிலும் பரவி மற்றவர்களைத் தாக்கும். போலியோ தீநுண்மம் வெளிப்புறத்தில் அறுபது நாள் வரை உயிருடன் இருக்கும்.

முதல் பாகத்தில் சொன்னதுபோல் போலியோ தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் 99 சதவீதக் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற எளிமையான விளைவுகள் மட்டுமே உண்டாகும். மீதமுள்ள ஒரு சதவீதக் குழந்தைகளில், போலியோ தீநுண்மங்கள் குடலுக்கு அருகில் உள்ள நிணநீர்கணுக்களிலிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து இயக்க நரம்பணுக்களைத் தாக்கும் (இயக்க நரம்பணுக்கள் என்பவை தண்டுவடத்திலும், மூளைத்தண்டிலும் காணப்படும் சிறப்பு அணுக்கள். இவை உடலில் தசைகளை இயக்கச் செய்யும். Motor neurons present in the spinal cord and brainstem). மூளைத்தண்டில் உள்ள இயக்க நரம்பணுக்கள் மூச்சு இயக்கம், உணவு விழுங்குதல் போன்ற மிக முக்கிய இயக்கங்களை கட்டுப்படுத்துபவை. இந்த அணுக்களை போலியோ தாக்கினால் உயிருக்கே ஆபத்து. இந்த வகையான போலியோ தாக்குதல் மிக மிக அரிது. போலியோ நோய்வாய்ப்படும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு தண்டுவடத்தில் உள்ள நரம்பணுக்களில்தான் தாக்கம் ஏற்படுகிறது. இந்த அணுக்கள் கைகள், கால்கள் மற்றும் வயிற்றில் உள்ள தசைகளை இயக்கும். போலியோ நோய்த் தாக்கத்தினால் இந்த நரம்பணுக்கள் அழிந்து, அவை இயக்கும் தசைகள் செயலிழந்து போகும். நோய்த் தாக்கத்தின் வீரியத்தைப் பொறுத்தும் பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்தும் ஒரு கால், அல்லது இரு கால்கள் மட்டும், அல்லது வயிற்று தசைகளும், கைகளும் சேர்ந்து செயலிழந்து போகும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் போலியோ நோய் எதிர்ப்பை 1938-ம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் துவக்கி வைத்தார். அன்றைய நாளில் உலகத்தில் மிகப் பிரபலமான போலியோ நோயாளியான ரூஸ்வெல்ட் துவக்கி வைத்த மார்ச் ஆஃப் டைம்ஸ் நிறுவனம் (March of Dimes Foundation) போலியோ தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்தது.

அந்த நிறுவனத்திடமிருந்து ஆராய்ச்சி நிதி பெற்ற ஜோனாஸ் சால்க் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் 1955-ம் ஆண்டில் போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். கவனிக்க. அவர் கண்டுபிடித்தது தடுப்பூசி. இந்த ஊசி கொல்லப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.

ஜோனாஸ் சால்க்

நம் நாட்டில் கொடுக்கப் படும் போலியோ சொட்டு மருந்தை 1960-ம் ஆண்டில் ஆல்பர்ட் சாபின் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் கண்டுபிடித்தார். இந்தச் சொட்டு மருந்து உயிருடன் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.

ஆல்பர்ட் சாபின்

அமெரிக்காவில் சால்க் தடுப்பூசி மட்டும் தான் போடுகிறார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டிய கால அட்டவணை: குழந்தையின் வயது இரண்டு மாதம் ஆகும்பொழுது முதல் முறை, நான்கு மாதத்தில் இரண்டாம் முறை, ஆறு மாதத்திலிருந்து ஒன்றரை வயதிற்குள் மூன்றாம் முறை. நான்கிலிருந்து ஆறு வயதிற்குள் ஒரு உயரூட்ட ஊசி (booster dose).

நம் நாட்டில் சாபின் சொட்டு மருந்து கொடுக்கப்படும் கால அட்டவணை: குழந்தை பிறந்து ஒரிரு நாளில் முதல் முறை (இதற்கு Zero dose என்று பெயர்); ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களில் மூன்று முறை (டிபிடி/DPT தடுப்பூசிகளுடன் சேர்த்து); ஒன்றரை வயதிலும் ஐந்து வயதிலும் ஒவ்வொரு முறை. இது தவிர குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை அறிவிக்கப் படும் ஒவ்வொரு பல்ஸ் போலியோ நாளிலும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.

பல்ஸ் போலியோ போன்ற நிகழ்வுகளில் ஒரே நாளில் லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்க சொட்டு மருந்துதான் வசதியாக உள்ளது. சொட்டு மருந்தில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. சொட்டு மருந்தில் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்கள், நோய் பரவும் அதே வழியில், அதாவது மனிதக்கழிவுகளால் மாசடைந்த நீர் மற்றும் உணவின் மூலம் சொட்டு மருந்து வழங்கப் படாத குழந்தைகளுக்கும் பரவி, அவர்களின் உடலிலும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.

துவக்கத்தில் தடுப்பூசிக்குக் கிடைத்த ஆதரவு சொட்டு மருந்துக்குக் கிடைக்கவில்லை. மேலே கூறிய இரண்டு ஆதாயங்களை முன்னிட்டு சொட்டு மருந்து உபயோகம் அதிகரித்தது. 1962-ம் ஆண்டில் ஆரம்பித்து அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களிலிருந்து போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. அமெரிக்க கண்டங்களில் கடைசியாக போலியோ நோய் 1991-ம் ஆண்டில் பெரு நாட்டில் ஒரு சிறுவனைத் தாக்கியது.

பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் போலியோ நோய்த் தாக்கம் குறைந்துள்ளது என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தது. இந்த வெற்றிகள் கொடுத்த உந்துதலில், உலகம் முழுவதும் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி உலக சுகாதார அமைப்பால் 1988-ம் ஆண்டு துவக்கப் பட்டது. அதே வருடம் சர்வதேச ரோட்டரி அமைப்பு இந்த முயற்சிக்காக இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர் கொடுப்பதாக உறுதி அளித்தது. (இதுவரை ரோட்டரி அமைப்பு போலியோ ஒழிப்புக்காக, ரோட்டரி போலியோ பிளஸ் நிதி என்ற பெயரில் எழுபது கோடி அமெரிக்க டாலர் கொடுத்திருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபௌண்டேஷன் மூலமாக முப்பத்தைந்து கோடி அமெரிக்க டாலர் வழங்கியிருக்கிறார்). UNICEF அமைப்பு உலகளவில் தேவைப்படும் சொட்டு மருந்தை தயாரித்து, பட்டுவாடா செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இது தவிர அமெரிக்க அரசும் தன் பங்கிற்கு நிதி உதவி அளித்தும், போலியோ ஒழிப்பை அதனுடைய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention) முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவித்தது.

இந்தக் கூட்டு முயற்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. 1988-ம் ஆண்டில் மூன்றரை லட்சம் பேரைத் தாக்கிய போலியோ நோய், பதினைந்து ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களைத்தான் தாக்கியது. 2003-ம் ஆண்டில் உலகத்தில் ஆறு நாடுகளில் – நைஜீரியா, நைஜர், எகிப்து, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா – மட்டும்தான் போலியோ உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டு முயற்சியில் ஒரு முக்கிய அங்கம், போலியோ நோய்த் தாக்கம் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் தேசிய நோய்த் தடுப்பேற்ற நாள்கள் (பல்ஸ் போலியோ நாள்கள்). அந்த நாடுகளில் குழந்தைகளுக்கு ஐந்து வயது வறை கால அட்டவணைப் படி கொடுக்கப் படும் தடுப்பு மருந்து போக கூடுதலாக வருடம் இரு முறையாவது இந்த பல்ஸ் போலியோ நாள்களிலும் கொடுக்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டு. உலக சுகாதார அமைப்புக்கு இதையேல்லாம் செய்ய தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. இந்த அமைப்பின் கிளைகள் ஒவ்வொரு நாட்டின் அரசு விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுதான் செயல்புரியவேண்டும். சொட்டு மருந்து தயாரிப்பு, பட்டுவாடா, மருந்து கொடுக்க ஆள் பலம் சேர்ப்பது, இவை எதையுமே இந்த அமைப்பு செய்வதில்லை. உலக சுகாதார அமைப்பின் நம் நாட்டுக் கிளையில் சுமார் இருநூற்றைம்பது மருத்துவர்கள் போலியோ நோய் கண்காணிப்பிற்காக வேலை செய்கிறார்கள். இந்த அமைப்புக்கு ஆள் பலம் குறைவாக இருந்தாலும், தகவல் வளமும், நிபுணத்துவமும் கணிசமாக உள்ளன.

(மேலும் ஒரு பாகம் வரலாம்…)

செப்ரெம்பர் 26, 2011

துடைத்தெடுத்தல் – 1

உலகளவில் போலியோ (இளம்பிள்ளைவாத) நோயை அடியோடு நீக்கும் திட்டத்தின் (Polio Eradication Programme) கீழ் நம் நாட்டில் 2003-ல் நடந்த துடைத்தெடுத்தல் (mop-up) நிகழ்வைப் பற்றி அதுல் கவாண்டே ந்யூ யார்க்கர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அவர் எழுதிய “பெட்டர்” (Better) புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் வெளியானது. அந்த சுவாரசியம் மிக்க விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் முப்பது ஆண்டுகளாக போலியோ நோயை உலகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகிவிடும். ஆனால் ஒரு நோயை உலகத்திலிருந்து அடியோடு ஒழிப்பது என்பது சாதாரனமான விஷயம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெறப் பெறப் பல நோய்களை அடியோடு நீக்க முயற்சி செய்திருக்கிறார்கள், அவற்றில் சில: கொக்கிப் புழு நோய் (Hook Worm), மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever), பறங்கி நோய் (Yaws, ஒரு வகையான சருமத் தொற்றுநோய்), மலேரியா (Malaria). இவற்றில் சில நோய்களின் பரவுதலைக் கட்டுப் படுத்த முடிந்தது ஆனால் ஒன்றைக் கூட அடியோடு ஒழிக்க முடியவில்லை. சொல்லப் போனால், மலேரியா மேலும் அதிகமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.  சுமார் நூறு ஆண்டுகள் முயற்சி செய்து பெரியம்மை (Small Pox) நோயை மட்டும்தான் நம்மால் ஒழிக்க முடிந்திருக்கிறது. 1979-ல் பெரியம்மை நோயை உலகத்திலிருந்து அடியோடு நீக்கியது பெரும் சாதனைதான். ஆனால் அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போலியோ நோயை ஒழிப்பது பலமடங்கு கடினமான விஷயம்.

பெரியம்மை தாக்குதலின் போது வரும் கொப்புளங்களை வைத்து நோயை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஒருவருக்கு பெரியம்மை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நோய் ஒழிப்புக் குழு நோயாளி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நோய் தொற்றாமல் இருக்கத் தடுப்பூசி போடுவார்கள். இந்த மாதிரியான வளையத் தடுப்புமருந்தேற்ற (ring immunization) முறையைப் பயன்படுத்தி பெரியம்மை நோய் பரவாமல் தடுக்கவும், அடியோடு ஒழிக்கவும் முடிந்தது.

போலியோ தொற்றுநோய் தாக்கியிருப்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. போலியோ தீநுண்மத் தாக்குதலுக்குள்ளாகும் (Polio virus infection) பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அறிகுறியும் தென்படாது. ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற எளிமையான அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு தீநுண்மத் தாக்குதலுக்கான அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். சுமாராக ஆயிரம் பேரை போலியோ தீநுண்மம் தாக்கினால், ஒன்றிலிருந்து நான்கு பேருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம்.

தாக்குதலுக்குள்ளாகி எளிமையான அறிகுறைகளை மட்டுமே வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையினரின் உடற்கழிவுகளிலிருந்து தீநுண்மம் சில வாரங்களுக்கு பரவும். இதனால் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு புதிதாக தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

போலியோ நோயைக் கண்டுபிடிப்பதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி எல்லாவற்றிற்கும் போலியோ நோய் காரணி அல்ல. ஆனால் சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும். இது சட்டம். இதற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தில் போலியோ தீநுண்மன் உள்ளதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அது போலியோ நோய்தான் என்று பரிசோதனை முடிவு வருவதற்குள் மேலும் பல நூறு பேருக்கு நோய் பரவும் அபாயத்தைத் தடுக்க இயலாமல் போகலாம்.

இப்படித் தாமதமாகத் தெரியவந்த போலியோ நோயை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பெரியம்மைத் தடுப்பை விட அதிகமான பரப்பளவில், சுற்றுப்புறத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பாதுகாக்கும்படியான முயற்சியை மேற்கொள்ள வெண்டும். இதை மந்தைத் தடுப்பு மருந்தேற்றம் (ஆங்கிலத்தில் herd immunization) என்று சொல்லுவார்கள். பெரியம்மை வராமல் தடுப்பதற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதும். ஆனால் போலியோ நோயைத் தடுக்க சொட்டு மருந்து பயன்படுத்தப் படுவதால், ஒரு முறை கொடுத்தால் போதாது. முதல் முறை சொட்டு மருந்து கொடுத்த நாளிலிருந்து நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இன்னொரு முறை கொடுக்க வேண்டும். சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரியம்மை நோயைத் தடுப்பது மெழுகுவர்த்தியை அணைப்பது போன்ற சுலபமான வேலை என்றால் போலியோ நோயைத் தடுப்பது காட்டுத்தீயை அணைப்பது போன்ற கடினமான வேலை.

உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி இவ்வளவு இடையூறுகளையும் மீறி பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை கொடுக்கப்படும் போலியோ நோய் தடுப்புச் சொட்டு மருந்து மூலமாகவும், மற்றும் சில மேலை நாடுகளில் கொடுக்கப்படும் போலியோ நோய்த் தடுப்பூசி மூலமாகவும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் போலியோ நோய் பரவுதல் கனிசமாகக் குறைக்கப் பட்டிருக்கின்றது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் மற்றும் மேற்கு பசிபிக் வட்டாரத்தில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப் பட்டுவிட்டது. 2001-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் மட்டும் 498 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது.

2001-லிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துவிடலாமென்று எண்ணும் நேரத்தில் ஆசியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ ஏதோ ஒரு நாட்டில் திடீரென்று போலியோ நோய் கிளர்ந்திருக்கிறது (outbreak). 2002-ம் ஆண்டில் வட இந்தியாவில் 1600 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது. அந்த வருடத்தில் உலகெங்கும் ஏற்பட்ட போலியோ நோய்த் தாக்குதலில் இது எண்பது சதவீதம் ஆகும். அன்றைய நிலைப்படி, இந்தியாவில் சில வட மாநிலங்களில் மட்டுமே போலியோ இன்னும் உள்ளது என்றே நம்பினோம்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சிறு பையனுக்கு போலியோ நோய் வந்தது. இதுவே மூன்று வருடங்களில் தென் இந்தியாவில் தோன்றிய முதல் போலியோ நோய்த் தாக்கம். ஒன்றிலிருந்து மேலும் பலருக்குப் போலியோ நோய் பரவினால், தென் இந்தியாவில் போலியோ ஒழிப்புப் போராட்டம் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

துடைத்தெடுத்தல் – ஆங்கிலத்தில் “mop-​up” – என்பது புதிதாகத் தோன்றியுள்ள போலியோ நோய் உள்ள குழந்தையைச் சுற்றியுள்ள, பாதிக்கப் படக்கூடிய எல்லா சிறுவர்களுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் போர்த்தொடர் போன்ற நடவடிக்கையை குறிக்கும் சொல்.

போலியோ போன்ற தொற்றுநோய் முதன்மையாகத் தோன்றும் நபர்களை “இண்டெக்ஸ் கேஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் (index case. என்னுடைய தமிழாக்கம் ‘முதன்மை நிகழ்வு’). 2003-ம் ஆண்டில் தென் இந்தியா கண்ட முதன்மை போலியோ நிகழ்வு, கர்நாடகத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள உப்பரஹல்லா என்ற குடிநீர் வசதி, மின் இணைப்பு இல்லாத மேம்படாத கிராமத்தில் நிகழ்ந்தது.

போலியோ நோய்வாய்ப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள். தாய்க்குப் படிப்பறிவு இல்லை. தந்தைக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும். மூன்று குழந்தைகளுடன் ஒற்றை அரை ஓலைக் குடிசை வீட்டில் வசிப்பவர்கள். குடிசைவாசிகள்தான் என்றாலும் மூன்று குழந்தைகளும் நல்ல போஷாக்குடன் இருந்தார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தக் குடும்பம் வட கர்நாடகத்தில் உறவினர்களை சந்திக்க பயணம் செய்தார்கள். ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்த சில நாள்களில், மே மாதம் ஒன்றாம் தேதி, அந்தச் சிறுவனுக்கு பலத்த காய்ச்சலும் வாந்தியும் வந்தது. பெற்றோர்கள் அவனை அருகில் இருந்த சிறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர் அவனுக்கு அண்டிபயாடிக் (நோய்க்கிருமிக் கட்டுப்படுத்தி) ஊசி ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தார்.

இரண்டு நாளில் காய்ச்சல் குறைந்து விட்டது, ஆனால் சிறுவனின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. பதறிப்போன பெற்றோர், சிறுவனை மீண்டும் அந்த சிறு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் உடனடியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான பெல்லாரியில் உள்ள அரசினர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். நேரம் போகப் போக காலில் மட்டும் இருந்த தசைத் தளர்ச்சி உடல் முழுவதும் பரவியது. சிறுவன் அசைவில்லாமல் மூச்சுத்திணரலுடன் படுக்கையில் கிடந்தான்.

சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும் என்பது சட்டம் என்று முன்னரே எழுதியிருந்தேன். அதன் படி மாவட்ட மருத்துவமனையிலுள்ள மருத்துவர் ஒருவர் கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரிக்கு (WHO Surveilance Medical Officer) தொலைபேசியில் தகவல் சொன்னார். அதே மருத்துவர் சிறுவனின் மலத்தில் போலியோ தீநுண்மம் உள்ளதா என்று பரிசோதிக்க மும்பையில் உள்ள சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினார்.

இது உறுதியாக போலியோதான் என்று ஆய்வு முடிவு ஜூன் 24-ம் தேதி வந்து சேர்ந்தது. புது தில்லி உலக சுகாதார அமைப்பு அலுவலகத்திலுள்ள தொழில்நுட்ப அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தென் இந்தியாவிலிருந்து ஒழிக்கப் பட்டுவிட்டதாகக் கருதிய போலியோ நோய் திடீரென்று மறுபடியும் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில் – ஜூன் 25-ம் தேதிக்குள் – அந்தத் தொழில்நுட்ப அதிகாரி, அவர் ஒரு மருத்துவர், பெயர் சுனில் பால், உலக சுகாதார அமைப்பு (WHO), UNICEF அமைப்பு மற்றும் இந்திய அரசில் பல முக்கிய புள்ளிகளுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டார். அவர்தான் இந்த விஷயத்தை மதிப்பிட்டு முதல் அறிக்கை கொடுக்க வேண்டியவர். அவருடைய அறிக்கையில், இப்பொழுது போலியோ கர்நாடகாவில் தோன்றியிருக்கும் வட்டாரம் சுகாதாரத் துறையில், முக்கியமாக நோய்த் தடுப்பெற்ற விஷயத்தில் மிக மோசமான வரலாறு உடையது என்றும், இதற்குமுன் நடத்தப் பட்ட போலியோ தடுப்பு நிகழ்வுகளில் அதிகம் போலியோ பாதிப்பு உடையதாக கண்டறியப்பட்ட இடம் என்றும், உடனடியாக விரிவான துடைத்தெடுத்தல் செய்யவில்லை என்றால் இங்கே போலியோ வேகமாகப் பரவும் அபாயம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் நடத்தப்படும் துடைத்தெடுத்தல் என்பது ஏற்கனவே போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நம்பியிருந்த இடத்தில் புதிதாகத் தோன்றும் பொழுது நடத்தப்படும் தீவிர போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு. இது ஒரு போர்க்கால நடவடிக்கை போல் திட்டமிட்டு செயல் படுத்தப்படும். “துடைத்தெடுத்தல்” நிகழ்வுகள் மூன்றே நாள்களில் முடியும்படி திட்டமிட்டு நடத்தப்படும். அந்த மூன்று நாள்களில், அந்த வட்டாரத்தில் போலியோ நோயால் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபாயத்தில் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.

பொதுவாக போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வுகளில், பல்ஸ் போலியோ என்று நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில் அரசு சார்பாக அறிவிப்புகள் வருமே, அவைகளில் குறிப்பிட்ட நாள் அன்று ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய நம் குழந்தைகளை நாம் இருக்கும் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இடத்திற்கு (ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பள்ளி, போன்ற இடத்திற்கு) அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்துக் கூட்டி வரவேண்டும். ஆனால் துடைத்தெடுத்தல் நிகழ்வு அப்படியானதல்ல. மருத்துவக் குழுக்கள் பாதிக்கப் பட்ட இடங்களில் வீடு வீடாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

துடைத்தெடுத்தல் நடத்தப்பட வேண்டிய வட்டாரத்தின் வரைபடம் ஒன்றை இணைத்திருந்தார் சுனில் பால். அது சுமார் ஐம்பதாயிரம் சதுர மைல் பரப்பளவு. கோடைகால மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் துடைத்தெடுத்தலின் முதல் சுற்று சொட்டு மருந்து விநியோகத்திற்கு ஜூலை 27-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது. அடுத்த சுற்று அதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து நடக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இந்திய போலியோ கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி ப்ரையன் வீலர் என்ற அமெரிக்கர் இந்தத் துடைத்தெடுத்தலின் நடைமுறை விவரங்களை அதுல் கவாண்டேவிற்கு விளக்கினார். அவர் சொன்னது: இந்திய அரசு இந்த நிகழ்விற்காக ஆட்களை தேர்வு செய்து மருத்துவக் குழுக்களை அமைக்கவேண்டும், போதுமான அளவு தன்னார்வத் தொண்டர்களையும் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து சரியாகக் கொடுக்கும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். சொட்டு மருந்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிர் சாதனப் பெட்டிகளும், போதுமான வாகன வசதிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவ்வளவு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கில் 90 சதவீதத்திற்கு மேலாகக் கொடுக்கப்பட்டால்தான் துடைத்தெடுத்தல் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது, அதாவது போலியோ நோய் மேலும் பரவாமல் தடுக்கப் படும். கொடுக்கப் படவேண்டிய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப் பட்டால் மொத்த நிகழ்ச்சியும் தோல்வியுற்றது என்றே கருதப்படும்.

இவ்வளவையும் செய்ய எவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்று வீலரிடம் கவாண்டே கேட்டார். வீலரின் பதில், “திட்டப்படி சொட்டு மருந்து கொடுக்கும் வேலைக்கு முப்பத்தி ஏழாயிரம் பேர், அவர்களுக்கு நான்காயிரம் மேற்பார்வையாளர்கள், இரண்டாயிரம் வண்டிகள், பதினெட்டாயிரம் குளிர்சாதனப் பேட்டிகள் தேவைப்படும். மருந்து கொடுப்பவர்கள் வீடு வீடாகச் சென்று நாற்பத்தியிரண்டு லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டவேண்டும்.

அதுவும் மூன்றே நாள்களில்.

தொடரும்…

மார்ச் 22, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 3

முதல் பாகம் இங்கே உள்ளது.

இரண்டாம் பாகம் இங்கே உள்ளது.

எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொடுத்த நண்பர் இலவசக் கொத்தனாருக்கு மனமார்ந்த நன்றி.

எச்சரிக்கை: இது வரை நடந்தது… கதைச் சுருக்கம்… என்பது போல சென்ற பகுதிகளில் சொன்னதின் சுருக்கத்தைத் தந்துவிட்டு மேலும் தகவல்கள் தரலாம் என்பது என் எண்ணம். எனவே இது கொஞ்சம் நீளமான பாகமாக இருக்கும். அடுத்த பகுதியில் என் தனிப்பட்ட கருத்துகளைத் தருவதுடன் இந்தத் தொடர் முடியும் என்பது மகிழ்ச்சி தரும் அறிவிப்பு.

இந்தப் பதிவுத் தொடரின் தொடக்கத்தில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி “தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.“ என்று எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் பின்னூட்டமிட்ட பதிவர் பத்மஹரி சில நாள் முன் (மார்ச் 14, 15) அவர் எழுதிய இரண்டு பதிவுகளுக்குச் சுட்டிகள் கொடுத்தார். அவை இரண்டையும் படியுங்கள்:

1. ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்.

2. அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

மார்ச் 11, வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த பயங்கர ஆழிப்பேரலையால் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு ப்ரச்சினை ஆரம்பித்தது. செயல்பட்டுக் கொண்டிருந்த  மூன்று உலைகளில் வெப்பத்தைத் தணிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

மார்ச் 12, சனிக்கிழமை மாலை 1-ம் உலையில் ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றும் அன்றிரவில் இருந்து வெப்பத்தைத் தணிக்க கடல் நீரை உபயோகித்தனர் என்றும் பார்த்தோம்.

மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அதே நிலைதான் தொடர்ந்தது. கடல் நீரில் போராக்ஸ் எனும் உப்பையும் கலந்து செலுத்திக்கொன்டிருந்தார்கள். இந்த போராக்ஸ் (Borax, sodium borate) உப்பு சூடாக இருக்கும் மூலக்கருவிலிருந்து வெளியாகும் நியூட்ரான்களை (neutrons) உட்கொள்ளும் தன்மை உடையது. அதனால் மூலக் கருவில் மீண்டும் தொடர்வினை தொடங்குவதைத் தடுக்கும்.

மார்ச் 14, திங்கள்கிழமை முற்பகல் சுமார் 11 மணிக்கு 3-ம் உலையில் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பதினோரு பேர் காயமானார்கள், அருகில் உள்ள 2-ம் உலையின் குளிர்விக்கும் சாதனங்கள் சிலவும் சேதமாயின. 2-ம் உலையின் கருவில் நீர் வற்றிவிட்டதால் மூலப்பொருள் தண்டுகளும் கட்டுப்படுத்தும் தண்டுகளும் சில அடி உயரத்திற்கு நீர் காப்பற்றுத் திறந்த வெளியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனால் 2-ம் உலைக்குள்ளும் கடல் நீரை செலுத்த ஆரம்பித்தார்கள்.

மார்ச் 15, செவ்வாய்க்கிழமை காலை சுமார் 6 மணிக்கு 2-ம் உலையிலும் திடீரென்று ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. நான்கு நாள்களில் நிலையத்தில் நடந்த மூன்றாம் வெடி விபத்து இது. இதைத் தொடர்ந்து நிலைய வளாகத்தில் கதிரியக்க அளவு அபாயகரமாக உயர்ந்தது. கரையோர வாயுமண்டலத்தில் கதிரியக்க அளவு அதிகரித்ததால் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் தள்ளிச் சென்றன. நெருக்கடியை சமாளிக்க ஐம்பது பேரை மட்டும் விட்டுவிட்டு நிலையத்தின் மற்ற அனைத்து ஊழியர்களையும் (சுமார் 800 பேர்) வெளியேற்றினார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், உலை 4-ல் கழிவுற்ற மூலத்தண்டுகளைத் தேக்கி வைத்திருக்கும் தொட்டியில் (spent fuel storage/cooling pool) தீ பிடித்தது.

4-ம் உலைதான் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்ட பொழுது செயல்பாட்டில் இல்லையே அங்கே எப்படி பிரச்சனை ஆனது? அதற்கு இன்னொரு சின்ன விளக்கம் தேவை.

அணு உலை அறையின் உள்ளே வைத்திருக்கும் மூலப்பொருள் காலப்போக்கில் நீர்த்துப் போகும். கழிவுற்ற மூலப்பொருளை ஏறக்குறைய வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவார்கள். உள்ளே இருக்கும் எல்லா மூலத்தண்டுகளையும் ஒரே சமயத்தில் மாற்ற மாட்டார்கள். சுமார் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மாற்றுவார்கள். வெளியே எடுக்கப்படும் கழிவுற்ற மூலப்பொருளில் இன்னும் கதிரியக்க பொருட்கள் இருப்பதால் அத்தண்டுகளை உருக்கு-கான்க்ரீட்டால் ஆன பிரத்தியேகத் தொட்டிகளில் தேக்கி வைப்பார்கள். இந்த நிலையத்தில் உள்ள ஆறு உலைகளிலும் உலை அறைக்கு மேலே உள்ள தளத்தில் இந்தத் தொட்டிகள் இருக்கின்றன. இவை அல்லாமல் ஏழாவதாக ஒரு தனித் தொட்டியும் சற்று தள்ளி இருக்கிறது.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

தொட்டியில் தேக்கி வைத்திருக்கும் மூலத் தண்டுகளுக்கு மேல் குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து முப்பது அடிக்கு நீர் இருக்க வேண்டும். நீர் அளவு குறைந்தால் தண்டுகளில் மீண்டும் கருப்பிளவு தொடங்கி விடும் அதனால் கரு உருகும் அபாயம் உண்டாகும்.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

தேக்கத் தொட்டிகளுக்குள் எவ்வளவு தண்டுகள் இருக்கின்றன, அவை எவ்வளவு நாள் முன் உலையிலிருந்து எடுக்கப்பட்டன என்பதைப் பொறுத்து தொட்டியின் வெப்ப நிலை மாறும், அதற்கேற்றபடி தொட்டியில் நீர் நிலையை கண்காணிக்க வேண்டும்.

இந்தப் பதிவுத் தொடரின் முதல் பாகத்தில் “செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).” என்று எழுதியிருந்தேன். 4-ம் உலை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப் பட்டிருந்ததால் அதிலிருந்த அனைத்து முலப்பொருள் தண்டுகளையும் வெளியே எடுத்து தேக்கத் தொட்டியில் வைத்திருந்தார்கள். சில மாதம் முன் வரை உபயோகத்திலிருந்ததாலும், அதிக எண்ணிக்கையில் இருந்ததாலும் இந்தத் தொட்டியில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. தொட்டிக்குள் நீர் அளவு குறைந்ததை உலையில் இருந்தவர்கள் யாரும் கவனிக்கவில்லை போல் தெரிகிறது. மற்ற இடங்களில் வெப்பமும் வெடியுமாக களேபரம் நடந்து கொண்டிருந்ததால் இதை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் போலும். என்னதான் சாக்கு சொன்னாலும், இது கவனக்குறைவு காரணமான, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விபத்து.

இந்தத் தீ விபத்தால் நேரடியாக காற்றுமண்டலத்தில் கதிர்வீச்சு வெளியாகியுள்ளது என்று சர்வதேச அணு சக்தி அமைப்பு (IAEA) செய்தி வெளியிட்டது. இந்நிலையில் கதிர்வீச்சு அதிகமானதால் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மேலே வானத்தில் முப்பது கி.மீ. சுற்றளவிற்கு விமானங்கள் பறப்பதை தடை செய்தது.

4-ம் உலையின் தேக்கத் தொட்டியில் பற்றிய தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் தேக்கத்தொட்டியில் மீதமுள்ள நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது என்றும் செவ்வாய்க்கிழமை மாலை அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் செயல்பாட்டில் இல்லாத 5-ம் உலையில் நீர் நிலை குறைந்து கொண்டிருப்பதாகவும் சரியாக இயங்கிக்கொண்டிருக்கும் 6-ம் உலையின் டீசல் மின் இயற்றியை வைத்து 5-ம் உலைக்கும் நீர் செலுத்தலாம் என்று திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

மார்ச் 16, புதன்கிழமை அன்று காலை 4-ம் உலையின் மேல் தளத்தில் மீண்டும் தீப்பிடித்து அது அணைக்கப்பட்டது. ஒன்று மற்றும் மூன்றாம் உலைகளிலிருந்து வெள்ளைப் புகை அல்லது நீராவி வந்ததாலும் நிலையத்திற்குள் கதிர்வீச்சின் அளவு அதிகரித்ததாலும், மூலப்பொருள் வைக்கப்பட்டிருக்கும் அறைச்சுவர்களில் விரிசல் விட்டிருக்குமோ என்ற அச்சம் இருந்தது. நிலையத்தில் மீதமிருந்த ஐம்பது ஊழியர்களும் சுமார் ஒரு மணி நேரம் வெளியேற்றப்பட்டனர்.

ஆழிப்பேரலையால் சேதமடைந்த சாலைகளை புல்டோசர்கள் வைத்து சரி செய்து உலைகளுக்குள் நீர் இறைக்க தீயணைப்பு வண்டிகளையும் காவல் துறை உபயோகிக்கும் நீர் பீரங்கி வண்டிகளையும் கொண்டு வந்தார்கள்.

புதன் மாலை 3-ம் உலையின் தேக்கத் தொட்டியிலும் நீர் குறைந்து கொண்டிருப்பதாக அறிவித்தார்கள். புதன் இரவு 11 மணிக்குமேல் கதிர்வீச்சு அளவு குறைந்ததால் மேலும் 130 ஊழியர்கள் நிலையத்தினுள் வந்தார்கள்.

மார்ச் 17, வியாழக்கிழமை காலை விமானப் படை ஹெலிகாப்டர்களை வைத்து கடல் நீரை மேலிருந்து உலைகளின் மேல் ஊற்றினார்கள். நிலையத்தில் 22 பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டுள்ளதாக TEPCO அதிகாரிகள் அறிவித்தார்கள்.

மார்ச் 18, வெள்ளிக்கிழமை அன்று நிறுவனம் இந்த அணு நிலைய விபத்தின் அளவை நான்காம் நிலையிலிருந்து ஐந்தாம் நிலைக்கு உயர்த்தியது (சர்வதேச அணு சக்தி விபத்துச் சம்பவ அளவீடு இங்கே உள்ளது). அதாவது அமெரிக்காவில் 1979-ல் நடந்த த்ரீ மைல் ஐலன்ட் விபத்தின் நிலைக்கு இந்த விபத்தின் நிலையையும் உயர்த்தினார்கள். 1986-ல் செர்னோபிலில் நடந்த விபத்துதான் உலகிலேயே மோசமானது, அதன் அளவு 7.

மார்ச் 19, சனிக்கிழமை நிலைமை மோசமாகவில்லை. உலைகளிலும் தேக்கத் தொட்டிகளிலும் வெப்பத்தைத் தணிக்க முயற்சிகள் தொடர்ந்தன. நிலையத்திற்கு மின்சார வாரிய க்ரிடிலிருந்து மின்சாரம் கொண்டுவரும் முயற்சிகளும் தொடர்ந்தன.

மார்ச் 20, ஞாயிற்றுக்கிழமை உலைகள் 5 மற்றும் 6-ல் மின் வாரிய மின்சாரம் மற்றும் தடையில்லாமல் கிடைப்பதால் அங்கு இனி பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கை வந்தது. இந்நிலையில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் உணவுப் பொருட்களில் (பால் மற்றும் காய்கறிகளில்) கதிரியக்கத் தாக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மார்ச் 21, திங்கள்கிழமை முடியும் வரை மற்ற நான்கு உலைகளுக்கு இன்னும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கவில்லை. உலைகளில் வெப்பத்தைத் தணிக்கும் வேலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

விபத்து நடந்து ஒரு வாரம் கழிந்தபின் ஃபுகுஷிமா நிலையத்தின் தோற்றம்…

[படம் இங்கிருந்து எடுத்தது]

உலைகளின் தற்போதைய நிலைமை…

உலை 1 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கருவில் சுமார் 70 சதவிகிதம் சேதம். தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 2 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது. வெளிப்புறக் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதம். மூலக்கருவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு சேதமாகியிருக்கலாம் என்று சந்தேகம். உலை அழுத்த அறை சேதமாகியிருக்கிறது. தேக்கத் தொட்டியைப் பற்றி தகவல் இல்லை. கடல் நீர் செலுத்தியுள்ளார்கள்.

உலை 3 – ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டதால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். மூலக்கரு சேதமாகியிருக்கிறது, அளவு தெரியவில்லை. தேக்கத் தொட்டியில் நீர் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

உலை 4 – செயல்பாட்டில் இல்லை. ஆனால் தேக்கத் தொட்டியில் தீ விபத்து. அதனால் வெளிப்புறக் கட்டிடத்திற்கு பெரும் சேதம். கடல் நீர் செலுத்திக்கொண்டுள்ளார்கள்.

தொடரும்…

மார்ச் 19, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 2

முதல் பாகம் இங்கே உள்ளது.

எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார், வெற்றிராஜ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

ஃபுகுஷிமாவில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) பிற்பகல் தொடங்கி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி முக்கியமான விளக்கத்தை (தமிழ்ப் பதிவுலகில் பரவலாக டிஸ்கி என்று சொல்லப்படும் disclaimer) முதலில் பார்க்கலாம்.

எட்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சரியான செய்தி மூலங்கள் இல்லை என்பதே உண்மை. ஜப்பான் அரசு கொடுக்கும் செய்தி அறிக்கைகள் மற்றும் சில சர்வதேச அணுசக்தி அமைப்புகள் கொடுக்கும் செய்திகள், விளக்கங்களையும் வைத்துத்தான் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. யார் சரியான தகவல்கள் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க சாமானியரால் முடியாது. இந்நிலையில் இங்கே நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் சரியானவைதான் என்று என்னால் உறுதியளிக்க முடியாது.

இந்தப் பதிவுத்தொடரின் முதல் பாகத்தில் “ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.” என்று எழுதியிருந்தேன். “இப்பொழுது குழப்பம் இல்லை” என்பது உண்மை. ஆனால் சுனாமி தாக்கியதில் அங்கேயும் பிரச்சனை ஆனது. இரண்டு நிலையங்களையும் சுனாமியிலிருந்து பாதுகாக்க கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் சுவர் எழுப்பியிருந்தார்கள். இருபது அடிக்குக் குறைவான பேரலைகள் இந்தச் சுவர்களைத் தாண்டி நிலையத்தைத் தாக்க முடியாது. ஆனால் அன்று தாக்கிய பேரலைகள் முப்பது அடிக்கும் மேலான உயரத்தில் இருந்ததால் சுவர்களைத் தாண்டி இரண்டு நிலையங்களையும் தாக்கின. ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் குளிர்ந்த நீர் கொண்டுவரும் பம்புகள் (முதல் பாகத்தில் போட்டிருந்த இந்தப் படத்தில் 16 எண்ணிட்டது) பேரலை தாக்குதலால் பாதிக்கப்பட்டு செயலிழந்தன. இதனால் அங்கே உள்ள நான்கு உலைகளிலும் வெப்பத்தைத் தணிக்கமுடியவில்லை. ஆனால் 48 மணி நேரத்தில் மாற்றுப் பம்புகளை வைத்து பிரச்சனை பெரிதாகாமல் தடுத்துவிட்டார்கள்.

இந்த எட்டு நாள்களில் நடந்த சம்பவங்களை காலக்கோடுகளாக விக்கிப்பீடியாவில் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனை விபரங்களையும் முழுமையாக என்னால் விளக்க இயலாது. அறிந்துகொள்ள விரும்புவோர் அங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.

CNN வலைத்தளத்தில் விக்கிப்பீடியாவை விட எளிமையாக இருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் விவரிக்கிறேன்.

[முதல் பாகத்திலிருந்து தொடர்ச்சி] மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் (units 1, 2, 3) செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன. மூலப்பொருள் மையத்தில் தொடர்வினை நிறுத்தப்பட்டபின் வெளியாகும் வெப்பத்தைத் தணிக்க நீர் சுற்றோட்டப் பம்புகளை இந்த மின் இயற்றிகள் செயல்படுத்திக்கொண்டிருந்தன.

அப்பொழுதே இரண்டு உலைகளில் (1 & 2) வெப்பத்தைக் குறைப்பதில் பிரச்சனை இருப்பதாக இந்த நிலையத்தை இயக்கும் டோக்கியோ மின் வாரியம் (Tokyo Electric Power Company, TEPCO) மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் சேதமின்றித் தப்பித்தது என்றும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது என்றும் ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நெருக்கடி நிலை மின்கலங்களைக் கொண்டும் (emergency battery backup), “mobile power units” – நகர்த்தக்கூடிய மின் இயற்றிகளைத்தான் (portable generators) வைத்து உலைகள் 2, 3-ல் ஓரளவு நிலைப்படுத்தியிருக்கிறார்கள் (stabilized). ஜப்பான் ராணுவம் நிலையத்திற்கு மின்கலங்களைக் (batteries) கொண்டு சென்றதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் உலை 1-ல் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது.

ஜப்பான் அரசின் அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவனத்தின் நெருக்கடி நிலை தலைமை அலுவலகம் (Emergency Headquarters of the Nuclear & Industrial Safety Agency – NISA) அந்நாட்டில் உள்ள ஐம்பத்தைந்து அணு உலைகளின் நிலவரத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

அன்று மாலை ஜப்பான் அரசு அணு சக்தி அவசரநிலை அறிவித்து ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மூன்று கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றவும் மூன்றிலிருந்து பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும் ஆணை பிறப்பித்தது. 1-ம் உலையில் வெப்பத்தைத் தணிக்க முடியாததால் அழுத்தம் சாதாரணமாக இருப்பதைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருப்பதாகவும், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் TEPCO நிறுவனம் அறிவித்தது. கதிரியக்கக் கசிவு (radioactive leak) இருப்பதாக அறிவிப்பு எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை.

சில ஊடகங்களில் நிலையத்திற்கு அருகில் வாழும் இருபத்தி இரண்டு பேருக்குக் கதிரியக்கக் கசிவுத்தாக்கம் (radiation exposure) ஏற்பட்டிருப்பதாகவும், உலை ஊழியர்கள் மூன்று பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் (radiation sickness) செய்திகள் வந்தன.

மார்ச் 12, சனிக்கிழமை அதிகாலையிலிருந்து உலை 1-ல் கதிர் வீச்சு அளவு அதிகரித்து வருவதாகவும் கதிரியக்க கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வந்தன. கட்டுப்படுத்த முடியாத வெப்பத்தினால் மூலப்பொருள் மையத்தைச் சுற்றி உள்ள நீர் கொதித்து நீராவியாகி உலை அறையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அழுத்தத்தைக் குறைக்க சனிக்கிழமை முற்பகல் இரண்டு முறை நீராவியை வெளியிட்டார்கள் (venting). இதனால் சிறிதளவு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது.

சனிக்கிழமை பிற்பகல் ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆரம்பித்தது ஜப்பான் அரசு. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு NISA வெளியிட்ட அறிக்கையில் சிறிதளவு சீஸியம் (radioactive Cesium) கசிவு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். எதனால் என்று விபரம் சொன்னதாகத் தெரியவில்லை. சீஸியம் கசிவு ஏற்பட்டுள்ளது என்றால் உலையில் மூலப்பொருள் நீர்காப்பற்று திறந்தவெளியில் இருந்திருக்க வேண்டும் (uncovered fuel core) அல்லது அணுக்கரு உருக ஆரம்பித்திருக்கவேண்டும் (core meltdown) என்பதே அனுமானம்.

சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் திடீரென்று 1-ம் உலையின் வெளிப்புறக் கட்டிடத்தின் கூரை வெடித்துச் சிதறியது. உலை ஊழியர்கள் நான்கு பேர் இந்த வெடி விபத்தில் காயமானார்கள். அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இதைப் பற்றி பேசுகையில் கதிரியக்க வாயுக்கள் எதுவும் கசியவில்லை என்றும் நீராவி அழுத்தம் அதிகமானதால்தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டது என்றும், கட்டிடத்தின் உள்ளே உலையின் அழுத்த அறைக்கு சேதாரம் ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னார்களாம். பின்னர் வந்த செய்திகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களும் அந்த வெடி விபத்து நீராவியால் ஆனது அல்ல என்றும் அது ஹைட்ரஜன் வெடி விபத்து என்றும் கூறின.

[படம் இங்கிருந்து எடுத்தது]

இவ்விடத்தில் ஹைட்ரஜன் வெடி விபத்து என்றால் என்ன என்று ஒரு சிறு விளக்கம் தேவை. முதல் பாகத்தில் உலையின் பாகங்களை விளக்கும் பகுதியில் அணுசக்தி மூலப்பொருட்கள் சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி இருப்பார்கள் என்று பார்த்தோம். உலை செயல்பாட்டை நிறுத்தியபின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டோம். வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை என்றால் என்ன ஆகும் என்று இப்பொழுது பார்ப்போம். மூலக்கருவில் வெப்பம் சுமார் 1200 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால் ஜிர்க்கோனியம் உருகி சுற்றி இருக்கும் நீராவியுடன் கலக்கும். ஜிர்க்கோனியம் நீராவியில் (steam – H2O) இருக்கும் ஹைட்ரஜனை வெளிப்படுத்திவிட்டு ஆக்சிஜனுடன் சேர்ந்து ஜிர்க்கோனியம் டையாக்சைடு ஆக மாறும். உலை அழுத்த அறையில் அழுத்தத்தை குறைக்க நீராவியை வெளியே விட்டார்கள் என்று மேலே பார்த்தோம். அப்படி வெளிப்படும் நீராவியுடன், ஹைட்ரஜன் வாயுவும் இருக்கும். அழுத்த அறைக்கு வெளியே இருக்கும் வெளிப்புறக் கட்டிடத்திலும் நீராவி மற்றும் ஹைட்ரஜன் அழுத்தம் அதிகமானால், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் கலந்து பெரிதாக வெடிக்கும்.

இங்கே நாம் முக்கியமாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வெடி விபத்திற்கு காரணம் ஹைட்ரஜன்தான் என்றால், அதிகாரத்தரப்பில் சொன்னது முற்றிலும் பொய் என்று நிரூபணமாகும். ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றாலே மூலக்கரு (fuel core) பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். அதாவது குழாயிலிருந்து வெளியே வந்து நீராவியுடன் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மூலக்கரு அல்லது கிளர்மின் விளைவுப் பொருட்கள் (radioactive decay products from fuel core) கலந்த நீராவிதான் வெளியே வந்திருக்கவேண்டும். ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது உலை ஊழியர்கள் நீராவி அழுத்தத்தைக் குறைக்க கசிய விட்டதால்தானா அல்லது உலை அழுத்த அறை சுவர்களில் விரிசல் ஏதாவது உள்ளதா என்ற சந்தேகமும் எழ வேண்டும்.

இந்த வெடி விபத்து நடந்த பின் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு இருபது கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை ஜப்பான் அரசு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியடவில்லை.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அதிகாரிகள் உலை 1-ல் வெப்பத்தை தணிக்க நேரடியாக கடல் நீரை உள்ளே செலுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவே நிலைமையின் தீவிரத்தை விவரமறிந்த பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்கியது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்புநீரை உலைக்குள் செலுத்தினால் அதுவே உலைக்கு சாவு மணி என்று விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அதற்குப்பின் அந்த உலையை உபயோகிக்க முடியாது.

தொடரும்…

மார்ச் 18, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 1

ஜப்பானில் ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட விபத்தும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

இணையம், செய்தித்தளங்கள் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுகள் பலவற்றிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி தமிழில் எழுதலாம் என்று இந்த முயற்சி.

முதலில் இந்த இடம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்…

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.

மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது.

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்திற்கு முழு பொறுப்பும் இந்த ஆழிப்பேரலைதான். அதைப் பார்க்கும் முன் இன்னொரு சின்ன விளக்கம்.

செய்திகளில் பல்வேறாக ஃபுகுஷிமா டாய் இச்சி (Fukushima Dai-ichi) அல்லது ஃபுகுஷிமா 1 என்று இந்த நிலையத்தின் பெயர் வருகிறது. ஃபுகுஷிமா என்ற பெயரில் இரண்டு அணு மின் நிலையங்கள் உள்ளன. விபத்து நடந்திருப்பது ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் (டாய் இச்சி என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்று – விக்கிப்பீடியாவில் படித்தேன்). இதற்கு சுமார் 11 கி.மீ. தெற்கே ஃபுகுஷிமா இரண்டாம் நிலையம் உள்ளது (Fukushima Dai-ni; டாய் நி = இரண்டு).

 

[படங்கள் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் ஆறு (6) அணு உலைகள் உள்ளன அதில் நான்கு பழைய உலைகள் (Nuclear Plants 1, 2, 3 & 4) அருகருகே இருக்கும் ஒரு தொகுப்பாகவும், இரண்டு புது உலைகள் (Nuclear Plants 5 & 6) சற்றே தள்ளியும் அமைந்துள்ளன.

[படம் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

செய்திகளில் 1, 2, 3, 4 என்று வரும் எண்களிட்டு வரும் உலைகளை காண்பிக்க இன்னொரு படம்.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன.  இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.

[படம் என் மருத்துவப் பதிவுலக நன்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் டோக்கியோ நகரப் பகுதியிலிருந்து இந்த அணு மின் நிலையம் சுமார் 225 கி.மீ. தொலைவில்தான் உள்ளது (முதல் படத்தைப் பார்க்கவும்).

நான் பார்த்த பல ஆங்கில வலைதளங்களில் எளிதாகவும் சாமானியருக்குப் புரியும்படியாகவும் இருந்தது நில இயல் (geology) துறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பதிவர் ஈவ்லின் மெர்வைன் தன் வலைப்பூவில் (Georneys by Evelyn Mervine) வெளியிட்டிருக்கும் தொடர் பதிவுகள்தான். ஈவ்லின் அவர் தந்தையை தொலைபேசியில் பேட்டி கண்டு அந்த உரையாடல்களை தொடர் பதிவுகளாக வெளியிட்டுள்ளார். ஈவ்லினின் தந்தை மார்க் மெர்வைன் ஒரு அணுமின் துறை பொறியாளர், பல வருடங்கள் அமெரிக்க கடற்படையில் அணுமின் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் தனியார் துறை அணு உலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

அந்த ஆங்கில உரையாடல்கள் மற்றும் எழுத்துப்படிகளை இங்கே கேட்டு / படித்துக் கொள்ளலாம்.

இடம் எங்கே என்று பார்த்தாயிற்று. இனி அணு மின் நிலையம் என்றால் என்ன என்றும் இந்த நிலையத்தின் செயல்பாடு பற்றியும் பார்ப்போம்.

மிக எளிமையாகச் சொன்னால் அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்தான் அணு மின் நிலையம்.

மின்உற்பத்தி பல வகையாகச் செய்யலாம். உதாரணத்திற்கு மேட்டூர் அணையில் நீராற்றலை வைத்து மின்உற்பத்தி செய்கிறார்கள். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை (உம். நிலக்கரி) எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவியை உற்பத்தி செய்து, நீராவி உருளையை (steam turbine) இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் இயற்றியிலிருந்து (generator) மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

நிலக்கரியை எரித்து நீராவி உற்பத்தி செய்வதற்கு பதிலாக அணுக்கருப் பிளவிலிருந்து (nuclear fission) வெளியாகும் அதீத வெப்பத்தை வைத்து நீராவி உற்பத்தி செய்வதே அணு மின் நிலையம்.

அணுக்கருப் பிளவு ஏற்படும் இடத்தை அணு உலை (Nuclear Reactor) என்கிறோம். இதை வைத்து மின்உற்பத்தி செய்யும் இடத்தை அணு மின் நிலையம் (Nuclear Power Plant/Station) என்கிறோம். அணு உலைகளில் பல வகைகள் உள்ளன அதில் கொதிநீர் உலைகள் (Boiling Water Reactor) பழைய தொழில்முறை வகையைச் சார்ந்தவை.

விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் இருக்கும் ஆறு அணு உலைகளுமே கொதிநீர் உலைகள்தான். அவை அனைத்துமே 1971-லிருந்து 1979-க்குள் தொடங்கப்பட்டன, அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பான தொழில்நுட்பத்தைச் சார்ந்தவை.

கொதிநீர் அணு உலை எப்படி வெலை செய்கிறது என்பதை கீழே உள்ள படமும், தமிழில் உள்ள பாகப் பெயர்களும் விளக்கும் என்று நம்புகிறேன்…

[படம் விக்கிப்பீடியாவிலிருந்து எடுத்தது]

பாகங்கள்:

 1. அணு உலை அழுத்த அறை (Pressurized Reactor Vessel)
 2. அணுசக்தி மூலப்பொருள் மையம் (fuel core. யுரேனியம் 235 அல்லது ப்ளூடோனியம் 239)
 3. கட்டுப்படுத்தும் தண்டுகள் (control rods)
 4. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 5. கட்டுப்படுத்தும் தண்டுகளை இயக்கும் மோட்டார்கள்
 6. கொதிநீராவி (steam)
 7. சுற்றோட்டத் தண்ணீர் உள்ளே வரும் குழாய் (circulation water inlet)
 8. உயர் அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (High pressure steam turbine)
 9. குறைந்த அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (Low pressure steam turbine)
 10. மின் இயற்றி (electric generator)
 11. மின் இயற்றி (electric generator exciter)
 12. கொதிநீராவிச் சுருக்கி (steam condenser)
 13. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் (அருகில் உள்ள கடல், ஆறு அல்லது குளத்திலிருந்து) கொண்டு வரும் குழாய்
 14. சுருக்கியிலிருந்து வரும் நீரின் வெப்பத்தை அதிகரிக்க ஹீட்டர்
 15. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 16. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் கொண்டு வரும் பம்புகள்
 17. கான்க்ரீட் கட்டிடம்
 18. மின்சார வாரியத்தின் க்ரிட்.

அணுசக்தி மூலப்பொருட்களை சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி, சில நூறு குழாய்களை ஒன்றாகச் சேர்த்து வைத்திருப்பார்கள் (fuel assembly – மூலப்பொருள் தண்டு). சில நூறு தண்டுகளை மூலப்பொருள் மையமாக (fuel core) அணு உலையின் அழுத்த அறையில் வைத்திருப்பார்கள் (pressurrized reactor vessel).

மூலப்பொருள் மையத்தில் அணுக்கருப் பிளவு தொடங்கிவிட்டால் அது சங்கிலித்தொடர் வினையாகத் தொடரும் (fission chain reaction). கருப்பிளவின் விளைவாக வெளிப்படும் அதீத வெப்பத்தால் மையத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நீர் கொதித்து நீராவியாகி மேலேழும்பி வெளியே சென்று நீராவிச்சுழலியைச் சுழற்றும். கருப்பிளவுத் தொடர்வினையை நிறுத்த வேண்டும் என்றால் கட்டுப்படுத்தும் தண்டுகளை மூலப்பொருள் தண்டுகளுக்கு மத்தியில் பதிக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் காண்பது போல, கட்டுப்படுத்தும் தண்டுகளை மோட்டார்கள் மூலம் ஏற்றி மூலப்போருள் தண்டுகளின் நடுவே நிறுத்தினால் சில நொடிகளில் கருப்பிளவுத் தொடர்வினை நின்றுவிடும்.

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தொடர்வினை நின்றுவிட்டாலும், மூலப்பொருளிலிருந்து வெப்பம் வெளியாவது உடனடியாக நிற்காது. கருப்பிளவின் விளைவுப் பொருள்களில் (radioactive fission products – கிளர்மின் விளைவுகள்) தொடர்ந்து கதிரியக்கச் சிதைவு (radioactive decay) ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் வெப்பம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணிவதற்கு பல நாள்கள் ஆகும். அதனால் தொடர்வினையை நிறுத்திவிட்டாலும் நீர் சுற்றோட்டத்தை நிறுத்தமாட்டார்கள். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணியும் வறை நீர் சுற்றோட்டம் தொடரவேண்டும். நீர் சுற்றோட்டப் பம்புகளுக்கும் நிலையத்தில் உள்ள மற்ற மின்சாரத் தேவைகளுக்கும், மின்வாரிய க்ரிட்டிலிருந்துதான் மின்சாரம் வரும். அவசரத் தேவைக்கு டீசலில் ஓடும் மின் இயற்றிகள் உண்டு.

இந்த இடத்தில்தான் ஃபுகுஷிமாவில் பிரச்னை ஆனது.

நிலநடுக்கம் நடந்த அன்று ஃபுகுஷிமா 1 நிலையத்தில் மூன்று உலைகள்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன (படத்தில் உலை 1, 2, 3). உலைகள் 4, 5, 6 பராமரிப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).

மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன.

ஜப்பானில் நிலநடுக்கங்கள் குறித்த தகவற்சேர்கை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. உலகத்தின் ஐந்து அதிபயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இதைச் சொல்கிறார்கள். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா 1 நிலையத்தின் கட்டிடங்களுக்கோ இயந்திரங்களுக்கோ சேதாரம் ஒன்றுமே ஏற்படவில்லை. இதற்கு ஜப்பானில் அணு மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த கட்டிடம் கட்டுவதென்றாலும் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. (ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் தப்பித்தது என்று சொன்னார்கள்.)

தொடரும்…

[பி.கு. எழுத்துப் பிழைகள சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார்,  இராதாகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.]