…நிழல்கள்…

ஜூலை 25, 2013

ஒரு நிமிடம் தமிழ் பேசுங்க.

அண்ணன் இலவசக் கொத்தனாரின் ‘மெல்லத் தமிழினிச் சாகும்!?’ கட்டுரையைப் படித்ததும் இதைப் பகிரவேண்டும் என்று தோன்றியது.

கடந்த ஞாயிறு அன்று ஒரு சிறு விருந்து நிகழ்ச்சிக்காக குடும்பமே என் சகோதரரின் தோட்டத்தில் கூடியிருந்தது. கூடியிருந்த அனைவரும் சளைக்காமல் இருக்கவும் நேரத்தைப் போக்கவும் மதிய விருந்துக்கு முன்னும் பின்னும் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்கள். நடத்தியது இது போன்ற வேலைகளில் அனுபவம் உள்ள ஒரு உறவினர் அமைத்த சிறு குழு. நான் கலந்து கொள்ளும் இந்த மாதிரி நிகழ்வுகளில் எப்பொழுதும் போல் அன்றும் கடைசி வரிசையில் யார் கண்ணிலும் படாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் நடத்திய போட்டிகளில் ஒன்று என்னைக் கவர்ந்தது.

மிக எளிமையான போட்டி. ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தாமல் தூய தமிழில் ஒரு நிமிடம் தொடர்ந்து பேச வேண்டும். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். முதலாவதாக பேசத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னால் தூய தமிழில் பேச இயலாதே என்று சொன்ன போது விதிகளைச் சற்று தளர்த்தி கொங்குத் தமிழில் வேண்டுமானால் பேசலாம் என்று சொன்னார்கள். அவரும் அப்படியே முயற்சி செய்தார். பலர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் ஒரே ஒருவரால்தான் ஒரு நிமிடம் முழுக்க தூய தமிழில் ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தாமல் பேச முடிந்தது. ஒரு சிலரால் ஓரிரண்டு வரிகள் கூட பேச முடியவில்லை.

போட்டியில் பங்கேற்ற ஒருவர் கொங்குத் தமிழில் தன் தோட்டத்தில் விவசாயம் செய்யும் அனுபவத்தைப் பற்றி மிக அழகாக விவரித்துக் கொண்டிருந்தார். பேச்சின் நடுவில், “காட்டுக்கு தண்ணிவுட கெனத்திலெர்ந்து பம்பு செட்டு போட்டு விட்டோமுங்க,” என்று சொன்னார். உடனே கூட்டத்திலிருந்து பலர் “பம்பு செட்டு இங்கிலீஷ் வார்த்தை, இவர் அவுட்டு” என்று சத்தம் போட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் எந்த கிராமத்திலும் பம்புசெட்டுக்கு தூய தமிழ் கலைச்சொல் பயன்படுத்தப் படுவதிலில்லை என்பதே நிதர்சனம். கடைசி வரிசையிலிருந்து நான், “ஏங்க, பம்புசெட்டெல்லாம் இப்ப தமிழ் வார்த்தைதானுங்க, அதை ஏத்துக்கலாம்,” என்று சத்தமாகச் சொன்னேன். ஆனால் நடுவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து போட்டியில் நான் பங்குபெற வேண்டிய நேரம் வந்தது. எனக்குக் கொடுக்கப் பட்டிருந்த செயல் “எம்.ஜி.ஆரைப் போல் கத்தி சண்டை போட வேண்டும்.” வீட்டிலிருந்து அவசரமாகக் கிளம்பி வந்ததால் கத்தியைக் கொண்டு வர மறந்து விட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று தப்பிக்கப் பார்த்தேன், போட்டி நடத்துனர்கள் என்னை அவ்வளவு எளிதாக தப்ப விடவில்லை. கத்தி சண்டையெல்லாம் கண்டிப்பாகப் போட முடியாது ஆனால் சமரசமாக ஒரு நிமிடம் தமிழ் பேசும் போட்டியை முயற்சி செய்கிறேன் என்றேன். அதை ஏற்றுக்கொண்டார்கள்.

தூய தமிழில் பேச இயலாது என்பதால் கொங்குத் தமிழில் பேசத் தொடங்கினேன். மூன்றாவது வாக்கியத்திலேயே ‘ஃபோன்’ என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்திவிட்டேன். பம்புசெட்டுக்கே சண்டைக்கு நின்றவன் என்றதாலோ என்னவோ ஒரு முறை மன்னித்து விடுகிறோம் என்று நடுவர்கள் தீர்ப்பு சொல்லி தொடரச் சொன்னார்கள். மிகவும் கவனமாக ஆங்கிலம் தவிர்த்து சுமார் முப்பது நொடிகள் பேசியிருப்பேன். பேச்சு கொஞ்சம் சூடு பிடித்த சமயம் ஒரு வாக்கியத்தின் நடுவில், “இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க,” என்று சொல்லிவிட்டேன். இரண்டாம் முறையாக ஆங்கிலச் சொல் பயன்படுத்தியதை மன்னிக்க முடியாது, நீங்கள் போகலாம் என்று வழி அனுப்பிவிட்டார்கள்.

இன்றைய நிலையில் தமிழை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது எவ்வளவு கடினம் என்று அனைவரும் உணரும்படியாக ஒரு போட்டியை அமைத்ததற்கு நன்றி கூறி விடைபெற்றேன்.

5 பின்னூட்டங்கள் »

 1. கோடைப் பண்பலையில், செப்புக செந்தமிழ் என்ற தலைப்பில், நேயர்கள் தொலை பேசி வாயிலாகக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றைச் செய்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது;என்றாலும் இது காட்சிப் பொருள் போலத்தான் உள்ளது; முற்றிலும் காரிய சாத்தியமானதாகத் தெரிய வில்லை. தமிழ்ப் பயன்பாடு எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாத செயலாகத்தான் இருக்கிறது.

  பின்னூட்டம் by p.lakshmanan — ஜூலை 25, 2013 @ 1:47 பிப | மறுமொழி

  • நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சியைக் கேட்டிருக்கிறேன். அதைப் போல் தூய தமிழில் பேச முடியவில்லை என்றாலும் பேச்சுத் தமிழில் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்கலாம்.

   பின்னூட்டம் by Vijay — ஜூலை 25, 2013 @ 2:02 பிப | மறுமொழி

 2. I am reminded of a competition held in Singapore about twenty years ago where we also had to speak in Tamil without using a single English word and I won the first prize, a ten dollar phone calling card 🙂 When we meet next time let us have a duel and see who wins!!

  amas32

  பின்னூட்டம் by amas32 — ஜூலை 25, 2013 @ 4:07 பிப | மறுமொழி

 3. எழுதி வச்சி சுலபமா பேச்லாமே ! அனுமதி கிடையாதா .? Jokes
  apart நாடி நரம்பெல்லாம் தமிழ் ரத்தம் முறுக்கேறியவர்களால்
  கண்டிப்பாகப் பேசமுடியும் ,பிறமொழி வார்த்தகளுக்கான தமிழ் கலைச்
  சொற்களை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில்.தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு
  மிகச் சுலபம்.. உதாரணமாக” இவ்வாறு நியூடன் இரண்டாவது விதி கூறுவதாக
  இயற்பியலில் படித்தேன் ” என்று பேசும்பொழது,இதையே ஆங்கில வழி கல்வி
  படித்தவ்ர் “இவ்வாறு நியூடன் இரண்டாவது விதி கூறுவதாக சயன்சில்
  படித்தேன்” என்று பேசுவதை தவிர்க்க இயலாது என எண்ணுகிறேன்.இதில்
  யாரையும் குறை சொல்ல முடியாது.ஏனென்றால் பேசும்பொழுது (அதுவும் ஒரு
  கால நெருக்கடியில்) நம் எண்ணங்களை விரைவாக வெளிபடுத்தும் பொழுது
  சயன்சே என்று வரும்.மேலும் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் வேறு
  வேறாக இருப்பதால் சற்று கடினமாக இருக்கும்.பிறமொழி வார்த்தைகள
  கலச்சொற்களாக்கிப் பேசும் பொழுது மிகையாக உணர்ச்சிவசபட்டு காஃபிய
  குளம்பியாக்கினால் அப்பேச்சு நகச்சுவையாகும் அபாயம் உள்ளது

  பின்னூட்டம் by srinivasan (@sathishvasan) — ஜூலை 25, 2013 @ 6:04 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: