…நிழல்கள்…

மார்ச் 18, 2011

ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 1

ஜப்பானில் ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட விபத்தும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் கதிர்வீச்சு நெருக்கடி பற்றி தமிழ் பதிவுலகில் யாரும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

இணையம், செய்தித்தளங்கள் மற்றும் ஆங்கில அறிவியல் பதிவுகள் பலவற்றிலிருந்து சேகரித்த தகவல்களைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி தமிழில் எழுதலாம் என்று இந்த முயற்சி.

முதலில் இந்த இடம் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்…

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.

மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – 9 ரிக்டர் எண்மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கறைப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுத்தியது.

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்திற்கு முழு பொறுப்பும் இந்த ஆழிப்பேரலைதான். அதைப் பார்க்கும் முன் இன்னொரு சின்ன விளக்கம்.

செய்திகளில் பல்வேறாக ஃபுகுஷிமா டாய் இச்சி (Fukushima Dai-ichi) அல்லது ஃபுகுஷிமா 1 என்று இந்த நிலையத்தின் பெயர் வருகிறது. ஃபுகுஷிமா என்ற பெயரில் இரண்டு அணு மின் நிலையங்கள் உள்ளன. விபத்து நடந்திருப்பது ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் (டாய் இச்சி என்றால் ஜப்பானிய மொழியில் ஒன்று – விக்கிப்பீடியாவில் படித்தேன்). இதற்கு சுமார் 11 கி.மீ. தெற்கே ஃபுகுஷிமா இரண்டாம் நிலையம் உள்ளது (Fukushima Dai-ni; டாய் நி = இரண்டு).

 

[படங்கள் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா ஒன்றாம் நிலையத்தில் ஆறு (6) அணு உலைகள் உள்ளன அதில் நான்கு பழைய உலைகள் (Nuclear Plants 1, 2, 3 & 4) அருகருகே இருக்கும் ஒரு தொகுப்பாகவும், இரண்டு புது உலைகள் (Nuclear Plants 5 & 6) சற்றே தள்ளியும் அமைந்துள்ளன.

[படம் என் மருத்துவப் பதிவுலக நண்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

செய்திகளில் 1, 2, 3, 4 என்று வரும் எண்களிட்டு வரும் உலைகளை காண்பிக்க இன்னொரு படம்.

[படம் இங்கிருந்து எடுக்கப்பட்டது]

ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன.  இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.

[படம் என் மருத்துவப் பதிவுலக நன்பரின் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது]

சுமார் இரண்டு கோடி மக்கள் வாழும் டோக்கியோ நகரப் பகுதியிலிருந்து இந்த அணு மின் நிலையம் சுமார் 225 கி.மீ. தொலைவில்தான் உள்ளது (முதல் படத்தைப் பார்க்கவும்).

நான் பார்த்த பல ஆங்கில வலைதளங்களில் எளிதாகவும் சாமானியருக்குப் புரியும்படியாகவும் இருந்தது நில இயல் (geology) துறையில் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பதிவர் ஈவ்லின் மெர்வைன் தன் வலைப்பூவில் (Georneys by Evelyn Mervine) வெளியிட்டிருக்கும் தொடர் பதிவுகள்தான். ஈவ்லின் அவர் தந்தையை தொலைபேசியில் பேட்டி கண்டு அந்த உரையாடல்களை தொடர் பதிவுகளாக வெளியிட்டுள்ளார். ஈவ்லினின் தந்தை மார்க் மெர்வைன் ஒரு அணுமின் துறை பொறியாளர், பல வருடங்கள் அமெரிக்க கடற்படையில் அணுமின் சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் தனியார் துறை அணு உலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

அந்த ஆங்கில உரையாடல்கள் மற்றும் எழுத்துப்படிகளை இங்கே கேட்டு / படித்துக் கொள்ளலாம்.

இடம் எங்கே என்று பார்த்தாயிற்று. இனி அணு மின் நிலையம் என்றால் என்ன என்றும் இந்த நிலையத்தின் செயல்பாடு பற்றியும் பார்ப்போம்.

மிக எளிமையாகச் சொன்னால் அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்தான் அணு மின் நிலையம்.

மின்உற்பத்தி பல வகையாகச் செய்யலாம். உதாரணத்திற்கு மேட்டூர் அணையில் நீராற்றலை வைத்து மின்உற்பத்தி செய்கிறார்கள். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை (உம். நிலக்கரி) எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவியை உற்பத்தி செய்து, நீராவி உருளையை (steam turbine) இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின் இயற்றியிலிருந்து (generator) மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும்.

நிலக்கரியை எரித்து நீராவி உற்பத்தி செய்வதற்கு பதிலாக அணுக்கருப் பிளவிலிருந்து (nuclear fission) வெளியாகும் அதீத வெப்பத்தை வைத்து நீராவி உற்பத்தி செய்வதே அணு மின் நிலையம்.

அணுக்கருப் பிளவு ஏற்படும் இடத்தை அணு உலை (Nuclear Reactor) என்கிறோம். இதை வைத்து மின்உற்பத்தி செய்யும் இடத்தை அணு மின் நிலையம் (Nuclear Power Plant/Station) என்கிறோம். அணு உலைகளில் பல வகைகள் உள்ளன அதில் கொதிநீர் உலைகள் (Boiling Water Reactor) பழைய தொழில்முறை வகையைச் சார்ந்தவை.

விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா 1 அணு மின் நிலையத்தில் இருக்கும் ஆறு அணு உலைகளுமே கொதிநீர் உலைகள்தான். அவை அனைத்துமே 1971-லிருந்து 1979-க்குள் தொடங்கப்பட்டன, அதாவது நாற்பது வருடங்களுக்கு முன்பான தொழில்நுட்பத்தைச் சார்ந்தவை.

கொதிநீர் அணு உலை எப்படி வெலை செய்கிறது என்பதை கீழே உள்ள படமும், தமிழில் உள்ள பாகப் பெயர்களும் விளக்கும் என்று நம்புகிறேன்…

[படம் விக்கிப்பீடியாவிலிருந்து எடுத்தது]

பாகங்கள்:

 1. அணு உலை அழுத்த அறை (Pressurized Reactor Vessel)
 2. அணுசக்தி மூலப்பொருள் மையம் (fuel core. யுரேனியம் 235 அல்லது ப்ளூடோனியம் 239)
 3. கட்டுப்படுத்தும் தண்டுகள் (control rods)
 4. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 5. கட்டுப்படுத்தும் தண்டுகளை இயக்கும் மோட்டார்கள்
 6. கொதிநீராவி (steam)
 7. சுற்றோட்டத் தண்ணீர் உள்ளே வரும் குழாய் (circulation water inlet)
 8. உயர் அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (High pressure steam turbine)
 9. குறைந்த அழுத்த கொதிநீராவிச்சுழல்சக்கரம் (Low pressure steam turbine)
 10. மின் இயற்றி (electric generator)
 11. மின் இயற்றி (electric generator exciter)
 12. கொதிநீராவிச் சுருக்கி (steam condenser)
 13. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் (அருகில் உள்ள கடல், ஆறு அல்லது குளத்திலிருந்து) கொண்டு வரும் குழாய்
 14. சுருக்கியிலிருந்து வரும் நீரின் வெப்பத்தை அதிகரிக்க ஹீட்டர்
 15. தண்ணீர் சுற்றோட்டப் பம்புகள் (Water circulation pumps)
 16. நீராவிச் சுருக்கிக்கு குளிர்ந்த நீர் கொண்டு வரும் பம்புகள்
 17. கான்க்ரீட் கட்டிடம்
 18. மின்சார வாரியத்தின் க்ரிட்.

அணுசக்தி மூலப்பொருட்களை சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி, சில நூறு குழாய்களை ஒன்றாகச் சேர்த்து வைத்திருப்பார்கள் (fuel assembly – மூலப்பொருள் தண்டு). சில நூறு தண்டுகளை மூலப்பொருள் மையமாக (fuel core) அணு உலையின் அழுத்த அறையில் வைத்திருப்பார்கள் (pressurrized reactor vessel).

மூலப்பொருள் மையத்தில் அணுக்கருப் பிளவு தொடங்கிவிட்டால் அது சங்கிலித்தொடர் வினையாகத் தொடரும் (fission chain reaction). கருப்பிளவின் விளைவாக வெளிப்படும் அதீத வெப்பத்தால் மையத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நீர் கொதித்து நீராவியாகி மேலேழும்பி வெளியே சென்று நீராவிச்சுழலியைச் சுழற்றும். கருப்பிளவுத் தொடர்வினையை நிறுத்த வேண்டும் என்றால் கட்டுப்படுத்தும் தண்டுகளை மூலப்பொருள் தண்டுகளுக்கு மத்தியில் பதிக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் காண்பது போல, கட்டுப்படுத்தும் தண்டுகளை மோட்டார்கள் மூலம் ஏற்றி மூலப்போருள் தண்டுகளின் நடுவே நிறுத்தினால் சில நொடிகளில் கருப்பிளவுத் தொடர்வினை நின்றுவிடும்.

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தொடர்வினை நின்றுவிட்டாலும், மூலப்பொருளிலிருந்து வெப்பம் வெளியாவது உடனடியாக நிற்காது. கருப்பிளவின் விளைவுப் பொருள்களில் (radioactive fission products – கிளர்மின் விளைவுகள்) தொடர்ந்து கதிரியக்கச் சிதைவு (radioactive decay) ஏற்பட்டுக் கொண்டிருப்பதால் வெப்பம் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணிவதற்கு பல நாள்கள் ஆகும். அதனால் தொடர்வினையை நிறுத்திவிட்டாலும் நீர் சுற்றோட்டத்தை நிறுத்தமாட்டார்கள். மூலப்பொருள் மையத்தில் வெப்பம் முழுவதுமாகத் தணியும் வறை நீர் சுற்றோட்டம் தொடரவேண்டும். நீர் சுற்றோட்டப் பம்புகளுக்கும் நிலையத்தில் உள்ள மற்ற மின்சாரத் தேவைகளுக்கும், மின்வாரிய க்ரிட்டிலிருந்துதான் மின்சாரம் வரும். அவசரத் தேவைக்கு டீசலில் ஓடும் மின் இயற்றிகள் உண்டு.

இந்த இடத்தில்தான் ஃபுகுஷிமாவில் பிரச்னை ஆனது.

நிலநடுக்கம் நடந்த அன்று ஃபுகுஷிமா 1 நிலையத்தில் மூன்று உலைகள்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தன (படத்தில் உலை 1, 2, 3). உலைகள் 4, 5, 6 பராமரிப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. செயல்பாட்டில் இல்லாத உலை 4-ல் மூன்று மாதங்களுக்கு முன் (நவம்பர் 2010-ல்) மூலப்பொருள் முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டிருந்தது (இதன் முக்கியத்துவத்தை பின்னால் பார்ப்போம்).

மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன.

ஜப்பானில் நிலநடுக்கங்கள் குறித்த தகவற்சேர்கை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான நிலநடுக்கம் இது. உலகத்தின் ஐந்து அதிபயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இதைச் சொல்கிறார்கள். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா 1 நிலையத்தின் கட்டிடங்களுக்கோ இயந்திரங்களுக்கோ சேதாரம் ஒன்றுமே ஏற்படவில்லை. இதற்கு ஜப்பானில் அணு மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் வேறு எந்த கட்டிடம் கட்டுவதென்றாலும் கடைபிடிக்கப்படும் கண்டிப்பான விதிமுறைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. (ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் தப்பித்தது என்று சொன்னார்கள்.)

தொடரும்…

[பி.கு. எழுத்துப் பிழைகள சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார்,  இராதாகிருஷ்ணன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.]

Advertisements

13 பின்னூட்டங்கள் »

 1. மிகவும் அருமையான அரிதான பதிவு. இது போன்ற நல்ல எண்ணம் கொண்ட நண்பரை நன்றியோடு வாழ்த்துகிறேன். தொடர்ச்சியைப் படிக்க ஆவலாய் உள்ளேன்.வணக்கம்.

  பின்னூட்டம் by muthu — மார்ச் 18, 2011 @ 1:38 பிப | மறுமொழி

 2. இதைப்பற்றி யாருமே விரிவாக எழுதவில்லை என்று நினைத்தேன்.நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்.நன்றி நண்பரே.

  பின்னூட்டம் by andalmagan — மார்ச் 18, 2011 @ 4:02 பிப | மறுமொழி

 3. தெளிவான விளக்கம், நன்றி

  பின்னூட்டம் by வானம்பாடி — மார்ச் 18, 2011 @ 4:06 பிப | மறுமொழி

 4. மிகவும் அருமை தெளிவான பதிவு

  பின்னூட்டம் by ulavu — மார்ச் 18, 2011 @ 4:18 பிப | மறுமொழி

 5. முன்னெடுத்தலுக்கும் பகிர்விற்கும் நன்றி

  பின்னூட்டம் by சபரிநாதன் அர்த்தநாரி — மார்ச் 18, 2011 @ 5:29 பிப | மறுமொழி

 6. நல்ல தெளிவான பதிவு! நன்றி……

  அணு உலை பாதிப்பு குறித்த என் பதிவுகள் சில உங்கள் பார்வைக்கு:

  1. ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்.

  2. அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

  பின்னூட்டம் by padmahari — மார்ச் 18, 2011 @ 7:56 பிப | மறுமொழி

 7. பதிவு எளிமையாக என்னை போன்ற பாமரனக்கும் புரியும் வகையில் உள்ளது,எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம்! ந.ப! ந.வி!! 🙂

  பின்னூட்டம் by Thennarasu — மார்ச் 18, 2011 @ 8:02 பிப | மறுமொழி

 8. […] முதல் பாகம் இங்கே உள்ளது. […]

  Pingback by ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 2 « …நிழல்கள்… — மார்ச் 19, 2011 @ 10:04 பிப | மறுமொழி

 9. இது குறித்து என் வலைத்தளத்தில் வெளிவந்த “மூன்று முகங்கள் ” என்ற நான்கு பதிவுகளை காணுமாறும், உங்களின் கருத்துக்களையும் அங்கு பதியுமாறும்
  அழைக்கிறேன். அது இருக்கட்டும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாடு திரும்பும் திட்டமா? சொல்லுங்கள் .

  http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/03/blog-post_16.html

  பின்னூட்டம் by kakkoo maanickam — மார்ச் 19, 2011 @ 11:27 பிப | மறுமொழி

 10. ungal thelivana vilakathuku nandri

  பின்னூட்டம் by karthik — மார்ச் 21, 2011 @ 10:22 பிப | மறுமொழி

 11. nandri

  பின்னூட்டம் by karthik — மார்ச் 21, 2011 @ 10:22 பிப | மறுமொழி

 12. […] முதல் பாகம் இங்கே உள்ளது. […]

  Pingback by ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 3 « …நிழல்கள்… — மார்ச் 22, 2011 @ 9:36 முப | மறுமொழி

 13. வணக்கம் விஜய்.. பதிவை இப்பொழுதுதான் படித்தேன். . என்னைப்போன்ற ஒரு சராசரி பாமரனுக்கும் எளிதில் புரியும் விதத்தில் நீங்கள் எழுதியிருப்பது சிறப்பு. உங்கள் பதிவை எனது ப்ளாக்ரோலில் இணைத்து விட்டேன். எனது தளத்தைப் பார்வையிடும் நண்பர்கள், இந்தப் பதிவுகளைப் படித்துப் பயன்பெறுவதற்கு அது உதவியாக இருக்கும்.

  பி.கு – ஆனால், டெக்னிகல் சமாசாரங்களை, ஆங்கிலத்திலேயே விவரித்திருந்தால், ஒருவேளை இன்னும் படிக்கக் சுலபமாக இருந்திருக்குமோ? ஏனெனில், ஜெனரேட்டர் எபதை, மின்இயற்றி என்று படிப்பது, டங் டிவிஸ்டர் போல இருந்தது. ஒருவேளை எனக்கு மட்டும் அப்படித் தோன்றியிருக்கலாம். மற்றபடி, உங்கள் தமிழ்ப்பதிவு முயற்சி அட்டகாசம். அப்படியே, மெல்ல அரசியல் பகடிகள், சினிமா என்று உங்கள் எல்லையை விரிவாக்குங்கள். பட்டையைக் கிளப்பலாம் 🙂

  பின்னூட்டம் by கருந்தேள் கண்ணாயிரம் — மார்ச் 22, 2011 @ 10:04 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: