…நிழல்கள்…

ஜூன் 20, 2010

உலக நாயகன் – 3

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 11:41 பிப

முன்கதை: உலக நாயகன் – 1, 2

நஞ்சுக்கொடியில் catheter பொட்டு முடித்ததும் கையுறையைக் கழற்றிக் கொண்டே உஷாவிடம், “ஒரு Order Sheet எடும்மா, IV fluids (ட்ரிப்ஸ்), medicines and monitoring instructions எழுதிடறேன்,” என்று சொல்லிவிட்டு நிதானமாகக் குழந்தையை முழுவதுமாக பரிசோதிக்க ஆரம்பித்தார் ரமேஷ்.

Order sheet-ட்டுடன், TPR chart, IO chart,1, 2 மற்றும் சில வெற்றுத் தாள்களையும் NICU-வில் ஆண் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் இளநீல பிளாஸ்டிக் கோப்பினுள் இணைத்து, சுவற்றில் பதித்திருந்த பளிங்கு மேஜையில் வைத்து விட்டு, “சார் admission போட்டு வந்ததும் நீங்க case notes எழுதுனதுக்கப்புறம் இதுல சேர்த்துக்கறேன். இப்போதைக்கு orders எழுதீருங்க,” என்று ரமேஷிடம் சொன்னாள்.

“செல்வி, இந்தக் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கனும். நேத்து Caesarean delivery ஆன குழந்தையும், அந்த நல்லாயிருக்கிற neonatal jaundice baby-யும் இப்பவே வெளிய ward-க்கு மாத்தீறு,” என்று சொல்லிக்கொண்டே மேஜை அருகில் வந்து கோப்பை திறந்து எழுத ஆரம்பித்தார் ரமேஷ். வேகமாக எழுதிக்கொண்டு இரு செவிலியர்களுக்கும் கேட்கும்படி தொடர்ந்து சொன்னார், “இப்பவே radiology-ல சொல்லி ஒரு bedside check x-ray எடுக்க சொல்லீடுங்க, warmer probe-ஐ நெஞ்சில் ஒட்டீட்டு temperature maintain ஆகுதான்னு பார்த்துக்கங்க, 15 நிமிஷத்துக்கு ஒரு முறை heart rate, respiratory rate record பண்ணீருங்க, hood-க்கு oxygen full flow-ல வச்சிருங்க, குழந்தை urine, meconium3 போகிற நேரத்தைக் குறிச்சுக்கோங்க, நாளைக்கு காலை நான் வர்றதுக்கு முன்னாடி repeat bedside x-ray ஒன்னு எடுத்துருங்க.” சொல்லி முடித்துவிட்டு மௌனமாக மருந்துகள் மற்றும் இரத்தப் பரிசொதனைகளுக்கான உத்தரவுகளை சில நிமிடங்களில் எழுதினார்.

செல்வி தொலைபேசியில் கூப்பிட்டு, ரமேஷ் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளையும் வெளியே குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கு மாற்றும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள்.

எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது மாணவி ராணி NICU-விற்குள் வந்திருந்ததை கவனித்த ரமேஷ் அவளை நோக்கி, “ஏம்மா attender யார் வந்திருக்காங்க?” என்று கேட்டார்.

“ச… சார், baby-யோட பாட்டி சார்,” என்று பதட்டத்தோடு சொன்னாள். டாக்டர் ரமேஷ் ராணியிடம் நேரடியாகப் பேசுவது இதுவே முதல் முறை. அவளுக்கு NICU-வில் இருக்கும் மூத்த செவிலியர்களிடம் பேசுவதற்கே பயம். மருத்துவரிடம் பேசுவதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

அவள் முகத்திலும் குரலிலும் தெரிந்த பயத்தை கவனித்த ரமேஷ் மெலிதான புன்னகையுடன் அவளிடம், “பாட்டின்னா யாரும்மா?” என்று மெதுவாகக் கேட்டான். துளியும் பதட்டம் குறையாமல், “ச… சார்,  delivery ஆன பொண்ணோட அம்மான்னு சொன்னாங்க சார்,” என்று சொன்னாள் ராணி.

“ஓ, அப்படியா!” என்று சொன்ன ரமேஷ், தொடர்ந்து, “செல்வி, Casualty-க்கு கூப்பிட்டு குழந்தையோட அப்பாவை மேலே அனுப்பச் சொல்லு. ரேவதி கிட்ட History கேட்டுட்டு நான் அவருக்கு baby-யோட இப்போதைய condition, future prognosis4 explain பண்ணனும். செலவு எவ்வளவு ஆகும், அவரால் செலவு செய்ய முடியுமான்னும் கேக்கணும்.”

“Ok, Doctor.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தொலைபேசி பக்கம் திரும்பினாள் செல்வி.

ஆலோசனை அறைக்குள் மீனாட்சியின் தாயை அழைத்துச் சென்ற மருத்துவர் ரேவதி அங்கிருந்த மேஜையின் முன் இருந்த நாற்காலியில் அவரை அமர்த்திவிட்டு, ஃபேன் பொத்தானை அழுத்திவிட்டு, மேஜைக்கு மறுபுறமிருந்த சுழற்நாற்காலியை இழுத்து அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். மீனாட்சியின் தாய் மறுபடியும் ஏதோ கேட்க வாயைத் திறப்பதை கவனித்த ரேவதி அவசரமாக, “அம்மா, நான் இங்கே Junior Doctor. குழந்தைகள் specialist Dr. ரமேஷ் இப்போ உள்ளே குழந்தையைப் பார்த்துக் கிட்டிருக்கார். அவர் வந்து குழந்தை எப்படி இருக்குன்னு உங்களுக்கு விவரம் சொல்லுவார். இப்ப எனக்கு நீங்க கொஞ்சம் விவரங்களை சொல்லணும். நான் கேட்கிற கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு பதில் சொல்லுங்க,” என்று சொல்லி, மேஜை மேல் இருந்த ஒரு வெற்றுத் தாளை தன் அருகில் இழுத்து வைத்து, கையில் பேனாவை எடுத்துக் கொண்டாள்.

“சரிம்மா,” என்று சொன்னார் மீனாட்சியின் தாய்.

உடனே முதல் கேள்வியை கேட்டாள் ரேவதி, “எத்தனை மாசம் பிரசவம்மா? கடைசியா மீனாட்சி வீட்டுக்கு தூரமான தேதி உங்களுக்கு தெரியுமா?”

“தூரமான தேதி தெரியாதும்மா. அது எங்கூர் ஆஸ்பத்திரிச் சீட்டுல எழுதியிருக்கும். எழு மாசம் முடிஞ்சு எட்டு நடக்குதும்மா.”

“ஓ. எட்டு மாசம்தான் ஆகுதா. இன்னைக்கு என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? மீனாட்சி எங்க இருந்தா? உங்க வீட்லையா இல்ல அவங்க வீட்லையா?”

“அதான் அப்பவே சொன்னேனெம்மா. போன மாசம்தான் வளைகாப்பு செஞ்சாங்க. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு கூட்டியாந்துட்டோம். ஆனா ஒரே ஊருதான்ம்மா. ரெண்டு தெரு தள்ளியிருக்கும் எங்க வீட்டுக்காரரோட அக்கா பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். நேத்து ராத்திரி படுக்கப் போறப்ப நல்லாதாம்மா இருந்தா. என் பக்கத்துலதான் படுத்திருந்தா. ஒன்னும் பிரச்சினைன்னு சொல்லலை. விடியக் காத்தால என்னை எழுப்பி, அம்மா அடி வயிறு வலிக்குதும்மான்னு சொன்னா. நானும் எழுந்திருச்சுப் போய் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுத்து குடிக்கச்சொல்லிவிட்டு பத்து நிமிஷம் பார்த்தேன். வலி குறையலைன்னு சொன்னா. அப்புறம் எங்க வீட்டுக்காறரை எழுப்பி மாப்பிள்ளைய செல்போன்ல கூப்பிடச் சொன்னேன்.”

“அவரு வரும்போதே ஆட்டோ ஒன்னு கூட்டீட்டு வந்துட்டார். அந்த ஆட்டோவிலேயே எங்க டாக்டரம்மா ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போனோம். போகிற வழியில் அவங்களுக்கும் ஃபோன் போட்டுப் பேசினோம். சரி நான் வந்து பார்த்துடறேன்னு சொன்னாங்க. அவங்களோட ஆஸ்பத்திரியில போய் நாங்க சேர்ந்து பத்து நிமிஷத்துக்குள்ள அந்தம்மாவும் வந்துட்டாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, பிரசவ வலிதான், இவ்வளவு சீக்கிரம் வலி வந்தது கொழந்தைக்கு நல்லதில்லை, நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருங்கன்னு சொல்லீட்டாங்க. அப்புறம் ஒரு கால் டாக்சி புடிச்சு இங்கே வந்தோம்.”

“எங்க ஊரிலிருந்து இங்கே வர முக்கால்மணி நேரம் ஆச்சும்மா. அவ்வளவு நேரமும் வலி, வலின்னு அனத்திக்கிட்டே வந்தா. இங்கே வந்து உங்க எமர்ஜன்சி ரூம்ல படுக்கவச்சுட்டு நர்ஸ்கிட்ட என்ன விஷயம்னு சொல்லிக் கிட்டிருக்கும்போது திடீர்னு ஜன்னி வந்த மாதிரி கையும் காலையும் இழுத்துக்கிட்டு நினைவில்லாம போயிட்டாம்மா.”

இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 4

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

 1. TPR chart – Temperature, Pulse, Respiratory rate chart – உடல் வெப்பம், இருதயத் துடிப்பு அளவு, நிமிடத்திற்கு எத்தனை முச்சு என்ற அளவு குறிக்கும் தாள்.
 2. IO chart – Intake-Output chart – வாய் வழியாகவும், ட்ரிப்ஸ் வழியாகவும் கொடுக்கப்படும் நீர் அளவு, சிறுநீர் அளவு குறிக்கும் தாள்.
 3. Meconium – காட்டுப் பீ, பிறந்த குழந்தையின் முதல் மலக் கழிச்சல்.
 4. Prognosis – முன் கணிப்பு, நோய் தாக்கக் கணிப்பு, சிகிச்சை முடிவுக் கணிப்பு.
Advertisements

4 பின்னூட்டங்கள் »

 1. மருத்துவ தொழில் பயன்படுத்தகூடிய வார்த்தைகள் நிறைய புதிதாய் தெரிந்துக்கொள்ளமுடிகிறது! வேலை பளுவின் காரணமாக சற்றே அதிகமாக ஆங்கிலத்தில் விளையாடி விட்டீர்கள் டாக்டர்:)இருந்தாலும் அதன் பலன் நானும் நிறைய வார்த்தைகளினை சர்ச்சியதில் நிறைய விசயங்கள்!

  டெரராய் சர்ச்சியதும் அதை தமிழுக்கு டிரான்ஸிலேட்டியதும் தமிழாக்கியது சில…!
  [சரியா இருந்தா குட்’ங்க தப்பா இருந்தாலும் குட்டுங்க 🙂 ]

  order sheet – தேவை குறிப்பேடு
  medicines and monitoring instruction –
  மருந்துகளும் கண்காணிக்கவேண்டிய முறைகளையும்
  admission – பதிவு
  case notes – சிகிச்சை குறிப்புகள்
  baby – குழந்தை/சேய்/பேதை
  Caesarean delivery – செயற்கை முறையில்
  neonatal – பிறந்த குழந்தைகள் காப்பகம்

  பின்னூட்டம் by ஆயில்யன் — ஜூன் 20, 2010 @ 11:55 பிப | மறுமொழி

  • நன்றி ஆயில்யன். மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் எப்படி பேசிக் கொள்கிறார்களோ அதன் படியே இங்கே பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை தமிழாக்கி எழுதினால் unnatural-ஆக இருக்கும்.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 21, 2010 @ 12:03 முப | மறுமொழி

 2. கதை நல்லா போகுது வசனங்களும் இயல்பா, சுவாரஸ்யமா இருக்கு! (Confession: Trackbackக்கு ரேட்டிங் குடுக்குறது நான்தான்)

  பின்னூட்டம் by சாத்தான் — ஜூன் 22, 2010 @ 9:55 முப | மறுமொழி

  • நன்றி ஐயா. (Trackback-க்கு ரேட்டிங் குடுக்கும் உங்க நல்ல உள்ளத்திற்கும் நன்றி) 😀

   பின்னூட்டம் by Vijay — ஜூன் 22, 2010 @ 10:11 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: