…நிழல்கள்…

ஜூன் 3, 2010

எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 2

பாகம் 1 இங்கே உள்ளது.

முதல் பாகத்தின் பின்னூட்டங்களில் நண்பர்கள் கொத்தனாரும், ஆயில்யனும், “படம் வரைந்து பாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.” என்று கேட்டிருந்தார்கள். கீழே மூன்று படங்களை இணைத்துள்ளேன். நான் வரையவில்லை, தமிழில் பெயர்கள் மட்டும் எழுதினேன்.

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில்தான் உளுந்து வடை (டோன்ட் / donut) உருவத்தில் கான்றியும் (gantry) பீப்பாய் போன்ற நீளமான துவாரமும் இருக்கும் (மேலே முதல் மற்றும் மூன்றாவது படங்களில் உள்ளது போல்). இருட்டான சிறிய குகை போல் உள்ள இந்த இடத்தில் படுக்கவைத்து ஸ்கான் எடுக்கும் பொழுது சிலருக்கு தனிமை மருட்சி (claustrophobia) ஏற்படுகிறது.

பொதுவாக நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் கான்றி (gantry) அவ்வளவு குறுகலாக இல்லாமல் விசாலமாக இருக்கும். சில இயந்திரங்களில் (மேலே இரண்டாவது படத்தில் உள்ளது போல்) மூன்று பக்கங்கள் திறந்து இருக்கும். இவைகளுக்கு திறந்தவெளி எம்.ஆர்.ஐ (Open MRI) என்றும் பெயர் உண்டு.

நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் கம்மியாக இருக்கும். மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் அதிகமாக இருக்கும். காந்த சக்தியை வைத்து பார்த்தால் முறையே 0.2, 0.3, 0.4, 0.5, 1.5 மற்றும் 3 டெஸ்லா அளவில் ஸ்கான் இயந்திரங்கள் உண்டு. இதில் பொது மக்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு விஷயங்கள்:

 1. காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் எடுக்கும் படங்கள் சிறப்பாகவும் துல்லியமாகவும் இருக்கும்.
 2. காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் பரிசோதனையை சீக்கிரமாக முடித்துவிடலாம்.

மக்களுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இன்னொன்றும் உண்டு. காந்த சக்தியை, அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த காந்தங்களைக் கொண்டு ஸ்கான் செய்வதால், ஸ்கான் செய்யும் அறைக்குள் காந்த சக்திக்கு உட்படக்கூடிய உலோகத்தினால் ஆன பொருள்கள் இருக்கக்கூடாது. அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் மின்னணு சாதனங்களும் (electronic items – கைக்கடிகாரம்/wristwatch, செல்பேசி/mobile phone, calculator, digital diary, laptop computer, etc) எடுத்துச் செல்லக் கூடாது. கடன் அட்டை (credit card) எடுத்துச் செல்லக் கூடாது. உலோகத்தால் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. எல்லா ஸ்கான் மையங்களிலும் ஸ்கான் செய்வதற்கு முன் இவை எல்லாம் உங்களுக்கு சொல்லப்படும். நீங்கள் அணிந்து செல்லும் உடையை கழற்றிவிட்டு அவர்கள் தரும் அங்கியைத்தான் உடுத்திக் கொள்ள வேண்டும்.

உடலின் ஒரு பகுதிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் எட்டிலிருந்து இருபது நிமிடங்கள் ஆகும். உதாரணமாக மூளையை படம் பிடிக்க 0.2 டெஸ்லா இயந்திரத்தில் குறைந்த பட்சம் 20 நிமிடம் ஆகும், 1.5 டெஸ்லா இயந்திரத்தில் சுமார் 8 நிமிடம் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து அனுபவப் பட்டவர்களுக்கு இது தெரியும்; படம் பிடித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆனாலும், அவ்வளவு நேரமும் ஒரு துளி கூட அசையாமல் படுத்திருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் படம் தெளிவற்று போய்விடும் (blur or movement artifact).

தலைவலியுடன் மூளைக்கோ அல்லது முதுகு வலியுடன் முதுகுத்தண்டுக்கோ ஸ்கான் எடுக்க செல்பவர் 20 – 25 நிமிடங்கள் அசையாமல் படுத்திருப்பது மிகவும் கஷ்டம் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

பல தருணங்களில் பரிசோதனைக்கு வந்திருப்பவரால் அசையாமல் படுக்க முடியாது. உதாரணத்திற்கு வலிப்பு (fits, seizures), பக்கவாதம் (paralysis) உள்ளவர்கள், தலையில் அடிபட்டுள்ளவர்கள், சிறு குழந்தைகள். அப்படிப்பட்ட நேரங்களில் நோயாளிக்கு மயக்க ஊசி போட்டு படுக்கவைத்து ஸ்கான் எடுப்பதைத்தவிர வேறு வழியில்லை.

சில சமயங்களில், ஸ்கான் செய்யப்படும் உறுப்பைப் பொறுத்து, உங்களுக்கு கான்ட்ராஸ்ட் அல்லது டை (contrast / dye) என்ற மருந்து நரம்பில் ஊசி மூலம் செலுத்தவேண்டியிருக்கலாம். கேடோலினியும் (Gadolinium) என்கிற ரசாயனம் உள்ள இந்த மருந்தின் விலை அதிகம். உங்களுக்கு கொடுக்கும் பத்து மில்லிலிட்டர் (10 ml) மருந்தின் விலை சுமார் 1800 – 2000 ரூபாய் ஆகும். பொதுவாக இது ஸ்கான் விலையிலிருந்து அப்பாற்பட்டு கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஸ்கான் விலை என்று பேச்சு வந்துவிட்டதால் அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் 5000 ரூபாய் செலவாகும் என்பது இதை படிப்பவர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக ஒரு உடல் அங்கத்திற்கு பரிசோதனை செய்ய மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை பொதுவாக நிர்ணயிக்கப்படுவது பரிசோதனை செய்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை வைத்து. ஒரே நபருக்கு இரண்டு அங்கங்களுக்கு ஸ்கான் செய்யவேண்டும் என்றால், நேரம் அதிகம் ஆகும் என்பதால், இரண்டு தனி பரிசோதனைக்கான விலை.

தில்லி, மும்பை, சென்னை, பெங்களுரு போன்ற பெருநகரங்களில் விலை நான் குறிப்பிட்டிருப்பதைவிட அதிகமாக இருக்கும்.

ஒருவருக்கு பரிசோதனை முடிக்க அதிக நேரம் ஆனால், ஒரு நாளுக்கு சிலரைத்தான் பரிசோதிக்க முடியும். அதனால் சீக்கிரம் படம் எடுக்கக்கூடிய, அதாவது காந்த சக்தி அதிகம் உள்ள எம்.ஆர்.ஐ இயந்திரங்களையே என்னைப் போன்ற ரேடியாலஜிஸ்ட்கள் விரும்புவார்கள் (radiologist, தமிழாக்கம் நுண்கதிரியக்கவல்லுநர் – யாருக்கும் புரியாது).

இன்றைய நிலையில் உடலின் அனைத்து பாகங்களையும் துல்லியமாகப் படம் பிடிக்கச் சிறந்தது 1.5 டெஸ்லா இயந்திரம்தான். இதுதான் நல்ல இயந்திரம் என்றால் ஏன் எல்லா ஊர்களிலும் உள்ள மருத்துவமனைகள் அல்லது ஸ்கான் மையங்களில் 1.5 டெஸ்லா இயந்திரம் இருப்பதில்லை என்று கேள்வி எழும்.

இந்த இயந்திரங்கள் எதுவுமே நம் நாட்டில் உற்பத்தியாவது இல்லை. அமேரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிதாக வாங்கினால் இவற்றின் விலை 60 லட்சத்தில் இருந்து 8 கோடி ரூபாய் வரை ஆகும். உதாரணத்திற்கு சீனாவில் தயாரிக்கப்படும் 0.2 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 60 லட்சம்; அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 3 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 8 கோடி.

நான் சிறந்தது என்று கூறிய 1.5 டெஸ்லா இயந்திரத்தின் விலை சுமார் 4 – 5 கோடி ரூபாய். இது போக மாதாமாதம் மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகம் (சுமார் 2 – 3 லட்சம் ரூபாய் ஆகும்). குத்துமதிப்பாக சொன்னால் ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து ஸ்கான் செய்தால்தான் முதலுக்கும், பராமரிப்பிற்கும் நஷ்டமில்லாமல் இருக்கும்.

நண்பர் அலெக்ஸ் பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு இந்த இரண்டு பாகங்களில் பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். விடை அளிக்க முயலுகிறேன்.

கட்டுரை வடிவிலேயே எழுதுங்கள் என்று சொன்ன நண்பர் டைனோவுக்கும், பிழைகளைத் திருத்திக் கொடுத்த நண்பர் கொத்தனாருக்கும் நன்றி.

இணைப்பு:

[நண்பர் கொத்தனார் பின்னூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிவிலேயே பதில்களை இணைத்துவிட்டேன்]

காந்தத்தின் உள்ளே இருப்பதாலோ, வனொலி அதிர்வலைகளைச் செலுத்துவதாலோ பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

இருதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் (pacemaker) மின்னணு இயந்திரம். அது பொருத்தியிருந்தால் எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கக் கூடாது.

உடைந்த எலும்புகளை உலோகத் தகடுகள் கொண்டு இணைத்திருந்தால் அந்த உலோகத் தகடுகள் காந்த சக்திக்கு உட்படும் வகையா (ferro-magnetic alloy) அல்லது உட்படாத வகையா (non-magnetic alloy) என்று தெரிந்து கொண்டு முறையே ஸ்கான் செய்யக்கூடாது அல்லது செய்யலாம்.

ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கி வைக்கப்படும் ஸ்டெண்ட்களும் (vascular stent) உலோகக்கலைவைகளால் ஆனவைதான் அவற்றிற்கும் மேலே கூறிய விடை பொருந்தும்.

சமீப காலத்தில் பொருத்தப்படும் எலும்பு முறிவு சாதனங்கள் (orthopaedic prosthesis), ஸ்ட்டேன்டுகளில் (stents) எல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கான் காந்த்ததினால் பாதிக்கப் படாதவைதான்

Advertisements

15 பின்னூட்டங்கள் »

 1. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் 🙂 நன்றி டாக்டர் – நுண்கதிரியக்கவல்லுநர் – அப்படியென்றும் கடினமில்லை 🙂 உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவத்திற்குரிய சொற்கள் சுவாரஸ்யம் – தனிமை மருட்சி & உளுந்துவடை

  பின்னூட்டம் by ஆயில்யன் — ஜூன் 3, 2010 @ 5:19 பிப | மறுமொழி

 2. இரண்டு கேள்விகள்.

  இப்படி வானொலி அதிர்வலைகளைச் செலுத்துவதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?

  பேஸ்மேக்கர் அல்லது உடைந்த எலும்புகளை உலோகத் தகடுகள் கொண்டு இணைத்தவர்களுக்கு ஸ்கேன் செய்ய முடியாதா? (ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கி வைக்கப்படும் ஸ்டெண்ட் உலோகத்தால் ஆனதா? ஆமாம் என்றால் அவர்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்)

  பின்னூட்டம் by இலவசக்கொத்தனார் — ஜூன் 3, 2010 @ 5:21 பிப | மறுமொழி

  • அருமையான கேள்விகள். நான் எழுத மறந்துவிட்ட விஷயங்களை மிகச் சரியாக பிடித்துவிட்டீர். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை பதிவின் கடைசியில் இணைத்துவிட்டேன்.

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 3, 2010 @ 5:53 பிப | மறுமொழி

 3. தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். மீளதிர் காந்தக் கருவிகளின் விலையை கேட்டால்தான் மின்சாரம் பாய்கிறது.

  பின்னூட்டம் by வானம்பாடி — ஜூன் 3, 2010 @ 6:02 பிப | மறுமொழி

  • மின்சாரம் பாய்ந்தால்தான் கருவி படம் பிடிக்கும். மின்வாரியத்திற்கு மாதாமாதம் கட்டணத்தொகை கட்டும் பொழுது எங்கள் உடலில் மின்சாரம் பாயும். 😀

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 3, 2010 @ 10:39 பிப | மறுமொழி

 4. கட்டுரை மிகவும் நன்று,பல உபயோகமான தகவல்களை வழங்கியமைக்கு நன்றி இதை போன்று மேலும் பல கட்டுரைகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்.

  பின்னூட்டம் by தென்னரசு — ஜூன் 3, 2010 @ 6:45 பிப | மறுமொழி

 5. நபநப என்று சுருக்கமான விமர்சனத்தில் நம்பிக்கை இல்லை 🙂 நல்ல முயற்சி, நல்ல தமிழாக்கம், நன்றி விஜய் 🙂

  பின்னூட்டம் by ராம்சுரேஷ் — ஜூன் 3, 2010 @ 7:17 பிப | மறுமொழி

 6. விவரமான பதிவு. Updateக்கு இற்றைப்படுத்துதல்னும் சொல்றாங்க. நீங்க ஒரு கட்டுரைத் தொகுப்பை மனசுல வெச்சிக்கிட்டு தொடர்ந்து எழுதலாம். ரொம்பப் பயனுள்ள புத்தகமா இருக்கும்.

  பின்னூட்டம் by சாத்தான் — ஜூன் 3, 2010 @ 8:45 பிப | மறுமொழி

  • என்னையும் ரைட்டர் லிஸ்ட்ல சேத்துறீங்களா? ஏஇகொவெ, நண்பரே! 😉

   பின்னூட்டம் by விஜய் — ஜூன் 3, 2010 @ 10:43 பிப | மறுமொழி

 7. மருத்துவரா இருக்கீங்க, எழுதுறீங்க, அப்புறம் புத்தகமா கொண்டுவர்றதுல என்னங்க தப்பு? 🙂

  பின்னூட்டம் by சாத்தான் — ஜூன் 3, 2010 @ 10:52 பிப | மறுமொழி

 8. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் விஜய். ஒன்றிரண்டு ஸ்கான் உதாரணங்களுடன் நீங்கள் என்ன/எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுதுங்கள் (நேரம் கிடைக்கும்போது தொடராகத்தான் 🙂 )
  அருள் செல்வன்

  பின்னூட்டம் by அருள் செல்வன் க — ஜூன் 4, 2010 @ 12:12 முப | மறுமொழி

 9. thanks – got the answers for the questions raised in part-1 here.

  Well written doc. Appreciate it.

  பின்னூட்டம் by Alex Pandian — ஜூன் 8, 2010 @ 7:31 பிப | மறுமொழி

 10. Dear Dr. Radiologist Vijay sir,

  Kindly accept my appreciations for giving us so clear details and descriptions of a Medical enhencement. It is absolutely necessary to know about these things as we are facing many problems with the clinical people in many of the medical centers. We can at least ask them some technical questions when we go for treatments for us or for our loved ones.
  Thanks again.
  Sahid
  2010.06.07

  பின்னூட்டம் by Sahid — ஜூன் 8, 2010 @ 11:44 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: