…நிழல்கள்…

செப்டம்பர் 26, 2011

துடைத்தெடுத்தல் – 1

உலகளவில் போலியோ (இளம்பிள்ளைவாத) நோயை அடியோடு நீக்கும் திட்டத்தின் (Polio Eradication Programme) கீழ் நம் நாட்டில் 2003-ல் நடந்த துடைத்தெடுத்தல் (mop-up) நிகழ்வைப் பற்றி அதுல் கவாண்டே ந்யூ யார்க்கர் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது அவர் எழுதிய “பெட்டர்” (Better) புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் வெளியானது. அந்த சுவாரசியம் மிக்க விறுவிறுப்பான சம்பவத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் முப்பது ஆண்டுகளாக போலியோ நோயை உலகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகிவிடும். ஆனால் ஒரு நோயை உலகத்திலிருந்து அடியோடு ஒழிப்பது என்பது சாதாரனமான விஷயம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெறப் பெறப் பல நோய்களை அடியோடு நீக்க முயற்சி செய்திருக்கிறார்கள், அவற்றில் சில: கொக்கிப் புழு நோய் (Hook Worm), மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever), பறங்கி நோய் (Yaws, ஒரு வகையான சருமத் தொற்றுநோய்), மலேரியா (Malaria). இவற்றில் சில நோய்களின் பரவுதலைக் கட்டுப் படுத்த முடிந்தது ஆனால் ஒன்றைக் கூட அடியோடு ஒழிக்க முடியவில்லை. சொல்லப் போனால், மலேரியா மேலும் அதிகமாகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.  சுமார் நூறு ஆண்டுகள் முயற்சி செய்து பெரியம்மை (Small Pox) நோயை மட்டும்தான் நம்மால் ஒழிக்க முடிந்திருக்கிறது. 1979-ல் பெரியம்மை நோயை உலகத்திலிருந்து அடியோடு நீக்கியது பெரும் சாதனைதான். ஆனால் அதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் போலியோ நோயை ஒழிப்பது பலமடங்கு கடினமான விஷயம்.

பெரியம்மை தாக்குதலின் போது வரும் கொப்புளங்களை வைத்து நோயை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். ஒருவருக்கு பெரியம்மை நோய் இருக்கிறது என்று தெரிந்தவுடன் நோய் ஒழிப்புக் குழு நோயாளி இருக்கும் இடத்திற்குச் சென்று அவரைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நோய் தொற்றாமல் இருக்கத் தடுப்பூசி போடுவார்கள். இந்த மாதிரியான வளையத் தடுப்புமருந்தேற்ற (ring immunization) முறையைப் பயன்படுத்தி பெரியம்மை நோய் பரவாமல் தடுக்கவும், அடியோடு ஒழிக்கவும் முடிந்தது.

போலியோ தொற்றுநோய் தாக்கியிருப்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. போலியோ தீநுண்மத் தாக்குதலுக்குள்ளாகும் (Polio virus infection) பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அறிகுறியும் தென்படாது. ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்குத்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படும். மீதமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற எளிமையான அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு தீநுண்மத் தாக்குதலுக்கான அறிகுறியே இல்லாமலும் இருக்கலாம். சுமாராக ஆயிரம் பேரை போலியோ தீநுண்மம் தாக்கினால், ஒன்றிலிருந்து நான்கு பேருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படலாம்.

தாக்குதலுக்குள்ளாகி எளிமையான அறிகுறைகளை மட்டுமே வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையினரின் உடற்கழிவுகளிலிருந்து தீநுண்மம் சில வாரங்களுக்கு பரவும். இதனால் மேலும் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு புதிதாக தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

போலியோ நோயைக் கண்டுபிடிப்பதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்புத்தளர்ச்சி எல்லாவற்றிற்கும் போலியோ நோய் காரணி அல்ல. ஆனால் சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும். இது சட்டம். இதற்கு பாதிக்கப்பட்ட குழந்தையின் மலத்தில் போலியோ தீநுண்மன் உள்ளதா என்று பரிசோதனை செய்ய சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அது போலியோ நோய்தான் என்று பரிசோதனை முடிவு வருவதற்குள் மேலும் பல நூறு பேருக்கு நோய் பரவும் அபாயத்தைத் தடுக்க இயலாமல் போகலாம்.

இப்படித் தாமதமாகத் தெரியவந்த போலியோ நோயை மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பெரியம்மைத் தடுப்பை விட அதிகமான பரப்பளவில், சுற்றுப்புறத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பாதுகாக்கும்படியான முயற்சியை மேற்கொள்ள வெண்டும். இதை மந்தைத் தடுப்பு மருந்தேற்றம் (ஆங்கிலத்தில் herd immunization) என்று சொல்லுவார்கள். பெரியம்மை வராமல் தடுப்பதற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டால் போதும். ஆனால் போலியோ நோயைத் தடுக்க சொட்டு மருந்து பயன்படுத்தப் படுவதால், ஒரு முறை கொடுத்தால் போதாது. முதல் முறை சொட்டு மருந்து கொடுத்த நாளிலிருந்து நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இன்னொரு முறை கொடுக்க வேண்டும். சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், பெரியம்மை நோயைத் தடுப்பது மெழுகுவர்த்தியை அணைப்பது போன்ற சுலபமான வேலை என்றால் போலியோ நோயைத் தடுப்பது காட்டுத்தீயை அணைப்பது போன்ற கடினமான வேலை.

உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி இவ்வளவு இடையூறுகளையும் மீறி பெரிய அளவில் முன்னேறியிருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்து வயது வரை கொடுக்கப்படும் போலியோ நோய் தடுப்புச் சொட்டு மருந்து மூலமாகவும், மற்றும் சில மேலை நாடுகளில் கொடுக்கப்படும் போலியோ நோய்த் தடுப்பூசி மூலமாகவும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் போலியோ நோய் பரவுதல் கனிசமாகக் குறைக்கப் பட்டிருக்கின்றது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, ஐரோப்பா கண்டங்கள் மற்றும் மேற்கு பசிபிக் வட்டாரத்தில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப் பட்டுவிட்டது. 2001-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் மட்டும் 498 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது.

2001-லிருந்து போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்துவிடலாமென்று எண்ணும் நேரத்தில் ஆசியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ ஏதோ ஒரு நாட்டில் திடீரென்று போலியோ நோய் கிளர்ந்திருக்கிறது (outbreak). 2002-ம் ஆண்டில் வட இந்தியாவில் 1600 குழந்தைகளை போலியோ நோய் தாக்கியது. அந்த வருடத்தில் உலகெங்கும் ஏற்பட்ட போலியோ நோய்த் தாக்குதலில் இது எண்பது சதவீதம் ஆகும். அன்றைய நிலைப்படி, இந்தியாவில் சில வட மாநிலங்களில் மட்டுமே போலியோ இன்னும் உள்ளது என்றே நம்பினோம்.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் ஒரு சிறு பையனுக்கு போலியோ நோய் வந்தது. இதுவே மூன்று வருடங்களில் தென் இந்தியாவில் தோன்றிய முதல் போலியோ நோய்த் தாக்கம். ஒன்றிலிருந்து மேலும் பலருக்குப் போலியோ நோய் பரவினால், தென் இந்தியாவில் போலியோ ஒழிப்புப் போராட்டம் முடிந்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

துடைத்தெடுத்தல் – ஆங்கிலத்தில் “mop-​up” – என்பது புதிதாகத் தோன்றியுள்ள போலியோ நோய் உள்ள குழந்தையைச் சுற்றியுள்ள, பாதிக்கப் படக்கூடிய எல்லா சிறுவர்களுக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் போர்த்தொடர் போன்ற நடவடிக்கையை குறிக்கும் சொல்.

போலியோ போன்ற தொற்றுநோய் முதன்மையாகத் தோன்றும் நபர்களை “இண்டெக்ஸ் கேஸ்” என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் (index case. என்னுடைய தமிழாக்கம் ‘முதன்மை நிகழ்வு’). 2003-ம் ஆண்டில் தென் இந்தியா கண்ட முதன்மை போலியோ நிகழ்வு, கர்நாடகத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள உப்பரஹல்லா என்ற குடிநீர் வசதி, மின் இணைப்பு இல்லாத மேம்படாத கிராமத்தில் நிகழ்ந்தது.

போலியோ நோய்வாய்ப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூலித்தொழிலாளிகள். தாய்க்குப் படிப்பறிவு இல்லை. தந்தைக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும். மூன்று குழந்தைகளுடன் ஒற்றை அரை ஓலைக் குடிசை வீட்டில் வசிப்பவர்கள். குடிசைவாசிகள்தான் என்றாலும் மூன்று குழந்தைகளும் நல்ல போஷாக்குடன் இருந்தார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்தக் குடும்பம் வட கர்நாடகத்தில் உறவினர்களை சந்திக்க பயணம் செய்தார்கள். ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்த சில நாள்களில், மே மாதம் ஒன்றாம் தேதி, அந்தச் சிறுவனுக்கு பலத்த காய்ச்சலும் வாந்தியும் வந்தது. பெற்றோர்கள் அவனை அருகில் இருந்த சிறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மருத்துவர் அவனுக்கு அண்டிபயாடிக் (நோய்க்கிருமிக் கட்டுப்படுத்தி) ஊசி ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தார்.

இரண்டு நாளில் காய்ச்சல் குறைந்து விட்டது, ஆனால் சிறுவனின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. பதறிப்போன பெற்றோர், சிறுவனை மீண்டும் அந்த சிறு மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்கள். அவர் உடனடியாக 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான பெல்லாரியில் உள்ள அரசினர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். நேரம் போகப் போக காலில் மட்டும் இருந்த தசைத் தளர்ச்சி உடல் முழுவதும் பரவியது. சிறுவன் அசைவில்லாமல் மூச்சுத்திணரலுடன் படுக்கையில் கிடந்தான்.

சிறு குழந்தைகளுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் போலியோ நோய் உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்க வேண்டும் என்பது சட்டம் என்று முன்னரே எழுதியிருந்தேன். அதன் படி மாவட்ட மருத்துவமனையிலுள்ள மருத்துவர் ஒருவர் கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு மருத்துவ அதிகாரிக்கு (WHO Surveilance Medical Officer) தொலைபேசியில் தகவல் சொன்னார். அதே மருத்துவர் சிறுவனின் மலத்தில் போலியோ தீநுண்மம் உள்ளதா என்று பரிசோதிக்க மும்பையில் உள்ள சிறப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினார்.

இது உறுதியாக போலியோதான் என்று ஆய்வு முடிவு ஜூன் 24-ம் தேதி வந்து சேர்ந்தது. புது தில்லி உலக சுகாதார அமைப்பு அலுவலகத்திலுள்ள தொழில்நுட்ப அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தென் இந்தியாவிலிருந்து ஒழிக்கப் பட்டுவிட்டதாகக் கருதிய போலியோ நோய் திடீரென்று மறுபடியும் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்தில் – ஜூன் 25-ம் தேதிக்குள் – அந்தத் தொழில்நுட்ப அதிகாரி, அவர் ஒரு மருத்துவர், பெயர் சுனில் பால், உலக சுகாதார அமைப்பு (WHO), UNICEF அமைப்பு மற்றும் இந்திய அரசில் பல முக்கிய புள்ளிகளுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டார். அவர்தான் இந்த விஷயத்தை மதிப்பிட்டு முதல் அறிக்கை கொடுக்க வேண்டியவர். அவருடைய அறிக்கையில், இப்பொழுது போலியோ கர்நாடகாவில் தோன்றியிருக்கும் வட்டாரம் சுகாதாரத் துறையில், முக்கியமாக நோய்த் தடுப்பெற்ற விஷயத்தில் மிக மோசமான வரலாறு உடையது என்றும், இதற்குமுன் நடத்தப் பட்ட போலியோ தடுப்பு நிகழ்வுகளில் அதிகம் போலியோ பாதிப்பு உடையதாக கண்டறியப்பட்ட இடம் என்றும், உடனடியாக விரிவான துடைத்தெடுத்தல் செய்யவில்லை என்றால் இங்கே போலியோ வேகமாகப் பரவும் அபாயம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் நடத்தப்படும் துடைத்தெடுத்தல் என்பது ஏற்கனவே போலியோ நோய் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று நம்பியிருந்த இடத்தில் புதிதாகத் தோன்றும் பொழுது நடத்தப்படும் தீவிர போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு. இது ஒரு போர்க்கால நடவடிக்கை போல் திட்டமிட்டு செயல் படுத்தப்படும். “துடைத்தெடுத்தல்” நிகழ்வுகள் மூன்றே நாள்களில் முடியும்படி திட்டமிட்டு நடத்தப்படும். அந்த மூன்று நாள்களில், அந்த வட்டாரத்தில் போலியோ நோயால் எளிதில் தாக்கப்படக்கூடிய ஆபாயத்தில் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.

பொதுவாக போலியோ தடுப்புச் சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வுகளில், பல்ஸ் போலியோ என்று நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில் அரசு சார்பாக அறிவிப்புகள் வருமே, அவைகளில் குறிப்பிட்ட நாள் அன்று ஐந்து வயதிற்கும் குறைவான வயதுடைய நம் குழந்தைகளை நாம் இருக்கும் இடத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இடத்திற்கு (ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பள்ளி, போன்ற இடத்திற்கு) அழைத்துச் சென்று சொட்டு மருந்து கொடுத்துக் கூட்டி வரவேண்டும். ஆனால் துடைத்தெடுத்தல் நிகழ்வு அப்படியானதல்ல. மருத்துவக் குழுக்கள் பாதிக்கப் பட்ட இடங்களில் வீடு வீடாகத் தேடிச் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பார்கள்.

துடைத்தெடுத்தல் நடத்தப்பட வேண்டிய வட்டாரத்தின் வரைபடம் ஒன்றை இணைத்திருந்தார் சுனில் பால். அது சுமார் ஐம்பதாயிரம் சதுர மைல் பரப்பளவு. கோடைகால மற்றும் பண்டிகை விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் துடைத்தெடுத்தலின் முதல் சுற்று சொட்டு மருந்து விநியோகத்திற்கு ஜூலை 27-ம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது. அடுத்த சுற்று அதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து நடக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இந்திய போலியோ கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை செயல் அதிகாரி ப்ரையன் வீலர் என்ற அமெரிக்கர் இந்தத் துடைத்தெடுத்தலின் நடைமுறை விவரங்களை அதுல் கவாண்டேவிற்கு விளக்கினார். அவர் சொன்னது: இந்திய அரசு இந்த நிகழ்விற்காக ஆட்களை தேர்வு செய்து மருத்துவக் குழுக்களை அமைக்கவேண்டும், போதுமான அளவு தன்னார்வத் தொண்டர்களையும் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து சரியாகக் கொடுக்கும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். சொட்டு மருந்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல குளிர் சாதனப் பெட்டிகளும், போதுமான வாகன வசதிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவ்வளவு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்கும். அந்த இலக்கில் 90 சதவீதத்திற்கு மேலாகக் கொடுக்கப்பட்டால்தான் துடைத்தெடுத்தல் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது, அதாவது போலியோ நோய் மேலும் பரவாமல் தடுக்கப் படும். கொடுக்கப் படவேண்டிய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப் பட்டால் மொத்த நிகழ்ச்சியும் தோல்வியுற்றது என்றே கருதப்படும்.

இவ்வளவையும் செய்ய எவ்வளவு ஆட்கள் தேவைப்படும் என்று வீலரிடம் கவாண்டே கேட்டார். வீலரின் பதில், “திட்டப்படி சொட்டு மருந்து கொடுக்கும் வேலைக்கு முப்பத்தி ஏழாயிரம் பேர், அவர்களுக்கு நான்காயிரம் மேற்பார்வையாளர்கள், இரண்டாயிரம் வண்டிகள், பதினெட்டாயிரம் குளிர்சாதனப் பேட்டிகள் தேவைப்படும். மருந்து கொடுப்பவர்கள் வீடு வீடாகச் சென்று நாற்பத்தியிரண்டு லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டவேண்டும்.

அதுவும் மூன்றே நாள்களில்.

தொடரும்…

16 மறுமொழிகள் »

  1. Excellently written! Is this the article you said earlier that you were working on and needs to be completed? Polio has to be eradicated and the government has to work on a war footing. What is possible to be prevented should be done to save the quality of life of its citizens.
    amas32

    Comment by amas32 — செப்டம்பர் 26, 2011 @ 7:53 மு.பகல் | பதில்

    • நன்றி. அதே பதிவுதான். முழுசா எழுதினா ரொம்ப நீளமாயிரும்னு பாகங்களா பிரிச்சுட்டேன்.

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 7:59 மு.பகல் | பதில்

  2. 90% இலக்கு!
    //கொடுக்கப் படவேண்டிய குழந்தைகளில் 90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப் பட்டால் மொத்த நிகழ்ச்சியும் தோல்வியுற்றது என்றே கருதப்படும்//

    இந்த நன்முயற்சிக்குத் தலை வணங்குகின்றேன்!

    Comment by Kannabiran Ravi Shankar (KRS) — செப்டம்பர் 26, 2011 @ 9:46 மு.பகல் | பதில்

    • இது நன்முயற்சி மட்டுமல்ல, KRS. கட்டாயம்.
      90 சதவீதத்திற்கு குறைவாக சொட்டு மருந்து கொடுக்கப்பட்டால் மந்தைத் தடுப்பு மருந்தேற்றம் (herd immunization) முழுவதுமாக இருக்காது. மீண்டும் அந்த வட்டாரத்தில் போலியோ பரவும் வாய்ப்பு அதிகமாகும்.

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 12:25 பிற்பகல் | பதில்

  3. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரை என் வகுப்பில் போலியோவினால் தாக்கப்பட்ட வெவ்வேறு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களது கால்கள் நினைவில் வந்து போகிறது…

    நல்ல பதிவு! வாழ்த்துகள்!!

    Comment by Tharusu (@tharusu) — செப்டம்பர் 26, 2011 @ 3:27 பிற்பகல் | பதில்

    • நன்றி ஐயா.

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 7:39 பிற்பகல் | பதில்

  4. தகவல் மிக்க இடுகை! இன்று போலியோவே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் நடை விஷயத்தில் ஆனந்தவிகடன், குமுதம் மாதிரி எழுதுவது நல்ல உத்தி என்று நினைக்கிறேன். அப்படி எழுதினால் உங்களுக்குக் கூடுதல் சுதந்திரம் இருக்கும். சொல்ல விரும்பும் விஷயத்தில் கவனம் செலுத்தலாம். :-)

    Comment by சாத்தான் (@mislexic) — செப்டம்பர் 26, 2011 @ 3:48 பிற்பகல் | பதில்

    • சார், சொந்த வலைப் பூவில் இவ்ளோ மேனக்கேடுவதே அவி குமுதம் போல் இல்லாமல் அறிவியல் சார்ந்த விஷயங்களையும் நல்ல தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தான். அவங்கள மாதிரி குறுக்கு வழிப் பாதையிலியே போனால் என்னைப் போன்றவர்களெல்லாம் எப்ப உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர் ஆகறது. ;)

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 7:43 பிற்பகல் | பதில்

      • நான் சொன்னது ரீடபிளிட்டிக்காக நடையைத் தளர்த்துறது மட்டுமே. அதற்காக dumbing down செய்ய/நீர்த்துப் போகவைக்கத் தேவையில்லை. :-)

        Comment by சாத்தான் (@mislexic) — செப்டம்பர் 26, 2011 @ 8:36 பிற்பகல்

  5. Really well written piece of info…I cant write in such a lucid way and that’s exactly why I don’t blog….but you are tempting me to blog though..

    Comment by Dr.K.Mathan — செப்டம்பர் 26, 2011 @ 4:52 பிற்பகல் | பதில்

    • Thank you Mathan. If someone had told me five years ago, when I was new to blogs, that I would have the patience to write like this in Tamil, I would have laughed. சித்திரமும் கைப் பழக்கம். நீங்களும் உங்களுடைய Posterous கணக்கில் சோதனை ஓட்டமாக ஆரம்பிக்கலாமே. :)

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 7:55 பிற்பகல் | பதில்

  6. நல்ல பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.

    போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சமயத்தில் வரும் பலவிதமான அறிவிப்புகளை பார்த்திருக்கிறேன். நமது அரசு நல்ல முயற்சி எடுத்திருப்பது தெரிகிறது. அதன் அவசியத்தையும் தெரிவித்திருக்கிறீர்கள்.

    பல பாகங்களாக பிரித்ததில் மகிழ்ச்சி.

    Comment by முரளி — செப்டம்பர் 26, 2011 @ 8:30 பிற்பகல் | பதில்

    • நன்றி முரளி.

      Comment by Vijay — செப்டம்பர் 26, 2011 @ 9:43 பிற்பகல் | பதில்

  7. [...] பாகம் 1 இங்கெ உள்ளது. [...]

    வரு பிங்கு by இளம்பிள்ளைவாதம் (துடைத்தெடுத்தல் பாகம் 2) « …நிழல்கள்… — செப்டம்பர் 28, 2011 @ 7:17 பிற்பகல் | பதில்

  8. ”பெரியம்மை நோயைத் தடுப்பது மெழுகுவர்த்தியை அணைப்பது போன்ற சுலபமான வேலை என்றால் போலியோ நோயைத் தடுப்பது காட்டுத்தீயை அணைப்பது போன்ற கடினமான வேலை.” அருமையான ஒப்பீடு. உள்ளடக்கமும், எழுத்து நடையும் நன்று. துறை சார்ந்தோர் எழுதும் பதிவுகள் நிச்சயம் பயனுள்ளவை.

    Comment by இராதாகிருஷ்ணன் — செப்டம்பர் 29, 2011 @ 2:06 மு.பகல் | பதில்

    • நன்றி இராதாகிருஷ்னன்.

      Comment by Vijay — செப்டம்பர் 29, 2011 @ 7:42 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.